tamilnadu

img

காந்தியின் கனவுகளை அல்ல; கோட்சேயின் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்... மக்களவையில் ஏ.எம்.ஆரிப் எம்.பி., சாடல்

புதுதில்லி;
நீங்கள் காந்தியின் கனவுகளை நிறைவேற்றவில்லை, மாறாக கோட்சேயின் கனவுகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைஉறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் பாஜக ஆட்சியாளர்களை சாடினார்.  

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் பேசியதாவது:
குடியரசுத் தலைவர் உரை மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்று வதற்காகத்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியை இழிவுபடுத்துவதற்கும் அவர் கனவுகளையும் சிந்தனைகளையும் சிதைப்பதற்கும் ஓர் எல்லை உண்டு.  கோட்சே காந்தியை அவருடைய மார்பைப் பார்த்துத்தான் சுட்டுக் கொன்றான். சுட்டுக்கொல்வதற்கு முன், காந்தியின் முன்னால் வந்து, அவர் காலைத் தொட்டுவணங்கிவிட்டுத்தான், காந்தியைச் சுட்டுக் கொன்றான்.இப்போது, காந்தியின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகத்தான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.

இதன்மூலம், இப்போது நீங்கள் காந்தியின் ஆன்மாவையும் கொன்றிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் காந்தியின் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டில்லை. மாறாக கோட்சே, சாவர்க்கர்,கோல்வால்கர் மற்றும் எம்.எஸ். மூஞ்சே ஆகி யோரின் கனவுகளைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.காந்தியின் கனவு மற்றும் சிந்தனைகள் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். ‘இந்தியாவின் இதயம் இந்து – முஸ்லீம் ஒற்றுமை’ என்பதுதான் அவர் கனவாக இருந்தது. அவர் ஆற்றிய பல உரைகளில், இந்த நாடு ராமருக்கும், ரஹீமுக்கும் பொதுவானது என்று பேசியிருக்கிறார். நாடு துண்டாடப்படுவதை அவர் எதிர்த்தார். அவ்வாறு நடந்தபோது, “என் இதயமும் இரண்டாகப் பிளந்துள்ளது,” என்றார். ஆனால் இந்த அரசாங்கம், இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், அவர் கண்ட  ஒற்றுமைக் கனவை நசுக்கி  இருக்கிறது. எனவே, உங்களிடம் என் பணிவான வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெட்ககரமான சட்டத்திற்கு அவரது பெயரைப் பயன்படுத்தாதீர்கள் என்பதேயாகும்.

உங்களை ஆதரித்தவர்களே எதிர்க்கிறார்கள்
அடுத்து, இப்போது உங்களின் கூட்டணி நண்பர்கள் குறித்து என்ன நிலைமை? குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு உங்களை ஆதரித்தவர்களில் பலர் இப்போது அச்சட்டத்திற்கு எதிராகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மக்களின் சக்தி இதனைக் காட்டுகிறது. இந்தத் தருணத்தில் நாட்டு மக்கள்அனைவரும், குறிப்பாக இளைஞர்கள்,வீதிகளில் அணிதிரண்டு பிளவுவாதஅரசியலுக்கு எதிராகக்கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக் கிறார்கள்.அனுராக் சிங் தாகூர் போன்ற அமைச்சர்கள்வெறுப்பு அரசியலைப் பரப்பிக்கொண்டி ருக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்துபவர்களையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது, வன்முறை அரசியலைக் கைவிட நீங்கள் தயாரில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் கோட்சே வைத்திருந்த துப்பாக்கியைத்தான் இப்போதும் நீங்கள் நேசப்பூர்வமாக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத அமைப்புகள் சிலவற்றைத் தடை செய்திருக்கிறீர்கள். ஆனால் அதில் டாக்டர் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் முதலானவர்களைக் கொல்வதற்குப் பின்னணியில் இருந்த ‘சனாதன் சன்ஸ்தா’ என்னும் பயங்கரவாத அமைப்பை ஏன் சேர்க்க நீங்கள் தயாராக இல்லை? முகமூடி அணிந்துகொண்டு ஜேஎன்யு மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ள ‘இந்து ரக்சா தள்’ என்னும் அமைப்பைத் தடை செய்ய ஏன் நீங்கள் தயங்குகிறீர்கள்?தேசியவாதம் என்ற பெயரில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள். தேசியவாதம் என்பதை மதத்தின் அடிப்படையில் பிளவுவாத விதைகளை விதைப்பதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு நீங்கள் எவ்வித மரியாதையையும் தரவில்லை என்பதையும், நாட்டின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை அழித்துவிட்டு, இந்துத்துவா அடிப்படையிலான  ராஷ்டிரத்தை அமைத்திட விரும்புகிறீர்கள் என்பதையும் இப்போது உலகம் நன்கு அறிந்து கொண்டிருக்கிறது.

கோல்வால்கர் சொன்னது என்ன?
உங்களுடைய தத்துவவாதியும், சிந்தனையாளருமான மாதவ் சதாசிவ் கோல்வால்கர், தன்னுடைய சிந்தனைத் துளிகள் (Bunch of thoughts) என்னும் நூலில் இந்திய அரசமைப்புச்சட்டம் குறித்து தன் சிந்தனைத் துளிகளைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தி இருக்கிறார்: “நம் அரசமைப்புச் சட்டம் சிக்கலானதும், மேற்கத்திய நாடுகள் பலவற்றின் பல்வேறு அரசமைப்புச் சட்டங்களையும் ஒருங்கிணைத்துக் கட்டப்பட்ட ஒன்றுமாகும். இது நம்முடையது என்று சொல்வதற்கு இதில் எதுவுமே இல்லை. நம்முடைய தேசியக் குறிக்கோள் (national mission) என்ன என்பது குறித்தோ, வாழ்க்கையில் நம்முடைய முக்கிய குறிக்கோள் (keynote) என்ன என்பது குறித்தோ ஒரு வார்த்தையாவது இருக்கிறதா? இல்லை. ஐ.நா.ஸ்தாபனத்தின் கோரிக்கை சாசனத்திலிருந் து எடுக்கப்பட்ட அல்லது உலகநாடுகள் சங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட அல்லது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் அரசமைப்புச்சட்டங்களில் உள்ள சில அம்சங்கள் ஒன்றாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ள வெறும் தாறுமாறான குவியலாக அமைந்துள்ளது. வேறுவார்த்தைகளில் சொல்வதானால், இந்திய நல்லொழுக்க நெறிகளை அல்லது அரசியல் தத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் இந்திய அரசமைப்புச்சட்டத்தில் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.”

இப்போது, நாட்டின் குடிமக்கள் அனைவரும் நீங்கள்  இத்தகைய கோல்வால் கரின் மிகவும் வெறுக்கத்தக்க சிந்தனையால் வேயப்பட்ட வீட்டில் வசித்துக்கொண்டிருப்பவர்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக் கிறார்கள்.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சிப்  போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் உண்மையில் நாட்டை நேசிப்பவர்கள். அரசமைப்புச்சட்டத்தின் உண்மையான பாதுகாவ லர்கள், நாட்டுப்பற்றாளர்கள். நீங்கள் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பவர்கள் அல்ல, மாறாக அதனை அழித்துக்கொண்டி ருக்கிறீர்கள்.இந்த நாட்டில் அரசியல் அராஜகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அரசே தலைமையேற்று வன்முறை வெறியாட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 19 பேர் அரசே மேற்கொண்ட வன்முறை வெறியாட்டங்களுக்குப் பலியாகி இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள்  அனைத்திலும் அரசே முன்னின்று வன்முறை வெறி யாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், மறுபக்கத்தில் பொதுத்துறை நிறுவனங்களை அனைத்தையும் அநேகமாக விற்றுக்கொண்டிருக்கிறது. அவர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, நாட்டில் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது இந்தப்பொருளாதார மந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு, “புரகதும்போல் வாழ வெட்டுக” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.இவ்வாறு ஏ.எம்.ஆரிப் பேசினார்.(ந.நி.)

;