tamilnadu

img

நிலம், சொத்து, தொழில் தொழிலாளர் நல்வாழ்வுக்காகவே... - ப.முருகன்

முதலாளித்துவத்திலிருந்து  கம்யூனிசத்திற்கு  - 4

1927 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த சக்லத்வாலா தொழிலாளர் கூட்டங்களில் நிகழ்த்திய உரை ‘நவசக்தி’ நாளிதழில் வெளிவந்தது. அந்த உரை என்.ராமகிருஷ்ணன் எழுதிய தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் தரப்பட்டுள்ளது. அது வருமாறு: சென்னைக்கு வந்ததும் முதன்முதலில் தொழிலாளர் முன்பு பேசும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் சிலர் உங்களிடையே வந்த பேசிப்போயிருக்கிறார்களென்று தலைவர் கூறினார். நானும் தொழிற்கட்சியைச் சேர்ந்தவன் தான். ஆனால், அதைவிட தீவிரமான கொள்கைகளையுடைய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவன் நான். நிலம், சொத்து,தொழில் முதலியவை பணக்காரர்களுக்கு லாபம் தருவதற்காகவே  ஏற்பட்டன அல்ல என்பது எங்கள் கொள்கை. உடம்பை உழைத்து வேலை செய்யும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காகவே அவை இருக்கவேண்டுமென்று நாங்கள் நம்புகிறோம். 

தொழிலாளர்கள் படிக்காதவர்களாகவும் அறியாமையிலும் இருப்பதால் அவர்கள் கல்வி அறிவு பெறும் வரை தங்கள் உரிமைக்காக காத்திருக்கவேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். நாங்கள் அதற்கு மாறான நம்பிக்கை உடையவர்கள். முதலில் உரிமைகளை அளித்தால் கல்வி அறிவும் முன்னேற்றமும் தானே ஏற்படுமென்பது எங்கள் கொள்கை. பிரிட்டிஷ் தொழிலாளரும் ஒரு காலத்தில் அறியாமையில் மூழ்கியேயிருந்தார்கள். 1868ஆம் ஆண்டில் அவர்கள் தொழிற்சங்க உரிமையும் அரசியல் உரிமையும் பெற்றார்கள். நான்கு வருடத்திற்கெல்லாம் நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் கல்விதரும் கடமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.  ‘ருஷியாவில் ஜார்ஆட்சின் கீழ் 100க்கு ஆறுபேரே எழுத்தப் படிக்கத் தெரிந்தவர்கள். 1917-ல் அங்கே தொழிலாளர் அரசியல் உரிமை பெற்றனர். பின்னர் ஆறு வருடத்திற்குள் அங்கே கல்வி அதிவிரைவாக பரவியது. இப்போது 100க்கு 86 பேர் படிக்கத் தெரிந்தவராய் இருக்கிறார்கள். ஆகையினால் தான் இந்தியர் கல்வி பெறும் வரை உரிமை பெற முடியாதென்று சொல்வோரின் கூற்று தவறு என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாங்கள் சொல்கிறோம். சுயநலக்காரர்களும், பணக்காரர்களும் உங்களுக்குத் தாங்களாக கல்வியும் தரமாட்டார்கள். உரிமையும் கொடுக்கமாட்டார்கள். முதலில் நீங்கள் பெற வேண்டுவது உரிமை. அப்போது சுயநலக்காரர்கள் உங்களுக்கு அளிக்கக்கூடிய கல்வியை விட சிறந்த கல்வியை நீங்களே வெகு எளிதில் பெறக்கூடும்.

‘ படித்த வகுப்பார் என்று கூறப்படுவோர் உங்களை பயமுறுத்துவர். உங்கள் காரியங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாதென்று சொல்வர். இது தவறான சுயநலமுள்ள கொள்கை. தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் மட்டும் கொடுத்தால் அவர்களால் தங்கள் காரியங்களை மட்டுமின்றி தொழிற்சாலைகளையும் கூட அதிகத்திறமையாக நடத்திக்கொள்ள முடியும்.  ‘தற்போதுள்ள சமூதாயம் நிலைமையின் கீழ் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஓயாத ஒழியாத யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்த யுத்தம் துப்பாக்கிகளினாலும், வெடிகுண்டுகளினாலும் நடக்கவில்லை. ‘ஏழைகளை பட்டினிபோடும் ஆயுதத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. மனிதனை ஐந்து நிமிடத்தில் கொன்று விடும் சாதாரண யுத்தத்தை விட இது கொடுமையானது என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால், ஐரோப்பிய தேசங்களில் உள்ளது போல் இந்த யுத்தம் அவ்வளவு கொடுமையாயிறாது என்று காந்தி உள்பட இந்திய அரசியல் வாதிகள் பெறும்பாலோர் கூறுகின்றனர். (குறுக்கீடு)இவர்கள் நிலமையை சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்றும் பணக்காரர் கட்சியில் மயங்கியிருக்கிறார்கள் என்றும் நாங்கள் சொல்லுகிறோம். 

திருவிக: மகாத்மா காந்தி நீங்கலாக சொல்லுங்கள்
சக்லத் வாலா: காந்தியும் உள்படத்தான் 
கூட்டத்தில் சிலர்: ஒருநாளும் இல்லை, நீங்கள் சொல்வது முற்றும் தவறு
திருவிக: மகாத்மா காந்தி பாரமார்த்திக பொதுவுடமை கட்சியினர். அவரது உள்ளக்கிடக்கையை நீங்கள் இன்னும் நன்கு உணரவில்லை.
சக்லத் வாலா : இங்குள்ள நிலைமையை ஆராய்ந்து பார்த்ததில் இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கு இழைக்கப்படும்  கொடுமையானது ஐரோப்பாவில் உள்ளதை விட நூறு மடங்கு கேவலமாய் இருக்கிறதென்னும் முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.

‘ ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிக்கு குறைந்த சம்பளம் தினத்திற்கு ஐந்து ரூபாய் ஆகும். சிலர் நாள் ஒன்றுக்கு 15 ரூபாயும், 20 ரூபாயும் கூட பெறுகிறார்கள். ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனி வீடு உண்டு. வைத்திய வசதி உண்டு. குழந்தைகளுக்கு கல்வி உண்டு. தொழிலாளிக்கு வேலை இல்லாத போது அரசாங்கம் உபகாரச்சம்பளம்  கொடுக்கிறது. அது நீங்கள் பெறும் கூலியை விட அதிகமானது. எனவே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் நடக்கும் யுத்தம் ஐரோப்பாவைவிட இந்தியாவில் கொடுமையானதன்றோ?  ‘மற்றொரு உதாரணம் தருகிறேன். ஐரோப்பாவில் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஆயிரத்துக்கு 60 வீதம் குழந்தைகள் இறந்து போகின்றனர். தொழிலாளர் குழந்தைகளே ஆயிரத்துக்கு நூறு வீதம் இறக்கின்றனர். ஆனால் இந்தியாவிலுள்ள வேற்றுமை இதைவிட மகாகொடியது. இங்கே முதலாளிகளின் குழந்தைகள் ஆயிரத்துக்கு 86 வீதம் மரணமடைகையில் தொழிலாளர் குழந்தைகள் பம்பாயில் ஆயிரத்துக்கு 800 வீதம் சாகின்றன. 

‘ இந்திய அரசியல்  கட்சியினர் தொழிலாளர் பக்கம் நின்று தொழிலாளர் ஆதரவையும் பெற்றால் வலிமையுள்ள கட்சியினர் ஆவர். ஏகாதிபத்திய ராணுவ பலத்தை எதிர்ப்பதற்கு வெறும் அரசியல் கட்சியால் மட்டும் ஆகாதென்பதும் அமைப்பு பெற்ற தொழிலாளர் இயக்கபலம் அவசியம் என்பதும் ருஷ்யா, துருக்கி, மெக்ஸிகோ, சீனம் இவ்விடங்களில் விளக்கியிருக்கின்றன.  ‘ தொழிலாளர் தமக்கு பலம் தேடிக்கொள்ள வேண்டுமானால் தொழிற்சங்கங்களில் சேர வேண்டும். மத விஷயங்களை பார்க்கிலும் சங்க விஷயங்களில் அதிக உண்மையுடன் இருக்கவேண்டும். நீங்கள் சங்கங்களில் சேர்வது மட்டும் போதாது. கிராமங்களுக்குச் சென்று அங்குள்ளோருக்கு முதலில் தொழிற்சங்கத்தில் சேராமல் தொழிற்சாலையில் வேலைக்கு போகக்கூடாதென்று சொல்லி கட்டுப்பாடு செய்யவேண்டும். உங்கள் எஜமானர்கள் உங்களை ஆலையிலிருந்து துரத்தும் போது நீங்கள் கிராமங்களுக்கே போகவேண்டியிருக்கும். கிராமத்து நண்பர்கள் உங்களை மாதக்கணக்காக ஆதரிக்கும் படி நேரிடும்.

‘தொழிற்சங்கமானது நேராக அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்கு அந்த உரிமை உண்டு. இந்தியாவிலுள்ள தொழிலாளர் எல்லோரும் ஒரேயடியாகத் தொழிற்சங்களில் சேர்ந்து பின்னர் அரசியலில் காங்கிரஸ் கட்சியை பகிரங்கமாகவும் தைரியமாகவும் ஆதரிக்க வேண்டுமென்றே நான் விரும்புகின்றேன். காங்கிரஸ் தலைவர்களும் தொழிலாளர்களாகிய உங்களுக்குப் பணஉதவி செய்தும், மற்ற வழிகளில் உங்களை பாதுகாப்பதும் தங்கள் கடமை என்பதை உணர வேண்டும்.’   

;