tamilnadu

img

வெற்றிடத்தில் இருந்து இயங்கவில்லை ஜெயப்பிரகாஷ் நாராயணன் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்

நேற்றைய தொடர்ச்சி

இரண்டாவது ஒரு சம்பவத்தையும் குறிப்பிடவேண்டும். அது 1935ல் பிப்ரவரியில் நடந்தது. நாக்பூரில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு இடையே ஜெயப்பிரகாஷ் நாராயணன் எங்களைப் போன்ற தோழர்களுடன் அவ்வப்போது விவாதித்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற திட்டம் தனக்கு இருப்பதாக தெரிவித்தார். காங்கிரசின் ஒரு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ தலைவரான சர்தார் வல்லபாய் படேலால் பர்தோலியை உருவாக்க முடியும் என்றால், நாம் நம்முடைய சொந்த சோசலிச பர்தோலிகளை ஏன் உருவாக்க முடியாது என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் எங்களிடையே கேள்வி எழுப்பினார். 

(பர்தோலி என்பது குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமம். 1928ல் பிரிட்டிஷ் அரசுக்கெதிராக இந்திய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் அறைகூவல்களில் ஒன்றான சட்டமறுப்பு இயக்கம் நடந்தபோது, பர்தோலியில் இந்த போராட்டத்திற்கு சர்தார் படேல் தலைமை தாங்கினார். பர்தோலி கிராமத்து விவசாயிகள், கடுமையான வரிக் கொடுமையை தாங்க முடியாமல் தவித்தனர். கொந்தளித்தனர். இந்த நிலையில், சட்டமறுப்பு இயக்கம் அறிவிக்கப்பட்டது. படேல் அந்த விவசாயிகளை திரட்டினார். பிரிட்டிஷ் அரசுக்கு வரி கொடுக்க முடியாது என்று பர்தோலி கிராம விவசாயிகள் பகிரங்கமாக அறிவித்து பெரும் போராட்டத்தை நடத்தினர். இது பர்தோலி சத்தியாகிரகம் என பெயர் பெற்றது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதால்தான் சர்தார் படேல் நாடு முழுவதும் பிரபலமடைந்தார்)

இது, வெறுமனே சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன் வைத்து அவற்றுக்காக போராடுவது அல்ல; மாறாக, இந்திய விவசாயிகளை அவர்களே தங்களது சொந்த அரசாங்கங்களை நடத்தச் செய்யும் அளவிற்கு அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கும் அளவிற்கு நாம் முன்செல்ல வேண்டும் என்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் விளக்கினார். “பிரிட்டிஷ் ராணுவத்தின் பிடியில் உள்ள அதிகார மையங்களை  கைப்பற்ற வேண்டும்” என்பதுதான், விவசாயிகளை எந்தப் பாதையில் அணிதிரட்ட வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தை. நான் இங்கே குறிப்பிட்டுள்ள மேற்கண்ட இரண்டு சம்பவங்களும், சோசலிஸ்ட் அகிலத்தின் தலைவர்கள் சோசலிசம்  தொடர்பாக கூறிவரும் விளக்கங்கள் மற்றும் “ஜனநாயக சோசலிசம்” என்ற சிந்தனை தொடர்பாக பகிர்ந்துவரும் கருத்துக்கள் போன்றவையெல்லாம் இருந்தபோதிலும், இந்தியாவில்  சோசலிசம் என்பது விடுதலை இயக்கத்தின் தலைமைப் பிரதிநிதிகளாக கருதப்படுகிற நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ தலைமையின் நிலைப்பாட்டை எதிர்த்து சவால்விடுவதாக இருக்க வேண்டும் என்று  ஜெயப்பிரகாஷ் நாராயணன் கருதினார் என்பதை உணர்த்துகின்றன. அவர் காட்டிய பாதை இளம் காங்கிரஸ் ஆண்கள் மற்றும் பெண்களை கவர்ந்திழுப்பதாக இருந்தது. சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அவரை பின்தொடர்பவர்களாக மாறினர்.

எனினும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அவரது தோழர்களும் ஏதோ ஒரு வெற்றிடத்தில் இருந்து இயங்கத் துவங்கியவர்கள் அல்லர். அவர்களுக்கு முன்பே, தங்களை கம்யூனிஸ்ட்டுகள் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்துகொண்டு, கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமையின் கீழ் செயலாற்றிக் கொண்டிருந்த முதல் தலைமுறை இந்திய சோசலிஸ்ட்டுகளின் செறிவுமிக்க அனுபவம் என்பது ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அவரது தோழர்களுக்கு வழிகாட்டியது. இந்த முன்னோடிகள், நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஏகாதிபத்தியத்தால் மிகக்கடுமையாக தடைகள் விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தங்களை நாடு தழுவிய அளவில் ஒருங்கிணைத்து, நன்கு அணிதிரட்டப்பட்ட ஒரு கட்சியாக மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். மேலும், இந்தியாவில் சோசலிசத்திற்கான போராட்டத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பது தொடர்பான இந்த முன்னோடிகளின் கருத்துக்கள், இந்திய தேசிய காங்கிரசுக்குள் உருவான புதிய குழுவின் கருத்துக்களோடு முரண்பட்டன. மிக முக்கியமான முரண்பாடு அது. காங்கிரஸ் என்பது நிலப்பிரபுத்துவ ஒரு முதலாளித்துவ அமைப்பாக இருக்கிற நிலையில், அது எப்படி சோசலிசத்திற்கான போராட்டத்தின் கருவியாக மாற முடியும் என்ற கேள்வி முன்னுக்கு வந்தது.

(தொடரும்)

;