tamilnadu

img

அச்சத்தின் பிடியில் இந்திய மக்கள்

உரிமைகளை பறித்து எவரையும் சிறையில் தள்ளும் கொடிய பாதையில் பாஜக அரசு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில், 2019 ஜூலை 31 புதன் அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சூறையாடும் பொருளாதார மந்தம்

ஒட்டுமொத்த பொருளாதார மந்தமும் அதன் காரண மாக விளைந்துள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் ஆழமாகியிருக்கின்ற வேளாண் நெருக்கடியும் பெரு வாரியான மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் பிரதான தொழில்துறை (Industrial Core sector) வளர்ச்சி விகிதம், 2018 ஜூனுடன் ஒப்பிடு கையில் 7.8 சதவீத வளர்ச்சியில் 2019 ஜூனில் 0.2 சதவீதம் வீழ்ந்திருக்கிறது. இது கடந்த 44 மாதங்களில் மிகப்பெரிய பிரச்சனையாகும். ஆட்டோமோபைல் தொழில், நாட்டில் சுமார் நான்கு கோடி பேர்களுக்கு வேலை அளித்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதப் பங்களிப்பி னைச் செய்து வருகிற இத்துறை, தற்போது ஆழமான நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 17 கார் கம்பெனிகளில் 10இல் விற்பனை வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருக்கிறது. இதன் தொடர்ச்சி யாக உற்பத்தியில் வெட்டு, தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் ஆலைகள் இழுத்து மூடப்பட்டி ருக்கின்றன. ஏற்கனவே பத்து லட்சம் பேர் ஆட்டோமோ பைல் உபரித் தொழில்களில் வேலையிழந்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மிகப்பெரிய அளவில் தனியார்மயம்
மோடி-2 அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றபின்னர், மிகப்பெரிய அளவில் தனியார்மயத்தை முடுக்கி விட்டுள்ளது. ராணுவம் சம்பந்தப்பட்ட 42 உற்பத்திப் பிரிவுகள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட இருக்கின்றன. 42 துப்பாக்கித் தொழிற்சாலைகள் (ordnance factories), டிஆர்டிஓ (DRDO) பிரிவுகள் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட அனைத்து பொறியியல் தொழில்பிரிவு களும் தற்சமயம் நான்கு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. ஆட்சியாளர்களின் தனியார்மய தாகத்தின் காரண மாக இவர்கள் அனைவரின் எதிர்காலமும் கேள்விக்குறி யாகி இருக்கிறது. ஆறு விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதுடன், அரசாங்கம் மேலும் 20-25 விமான நிலையங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறது. இந்திய ரயில்வே துறையும் படிப்படியாகத் தனியார்மயப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் மத்திய அரசு தன் பங்குகளை வரவிருக்கும் மூன்று ஆண்டு களுக்குள் 49 சதவீதத்திற்குக் குறைத்திடத் திட்டமிட்டு, அதற்கேற்ற விதத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்து வருகிறது.

தரவுகள் வெளியிடுவதில் தில்லுமுல்லு

பொருளாதாரம் தொடர்ந்து கீழ்நிலைக்குச் சென்று கொண்டிருக்கக் கூடிய நிலையில், இந்த உண்மை யைப் பூசி மறைப்பதற்காக, தரவுகளில் பெரிய அளவில் தில்லுமுல்லுகளை மேற்கொண்டு வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல தரவுகள் தில்லுமுல்லு செய்யப்பட்டவையே என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பட்ஜெட் கணக்குகளில் 1.7 லட்சம் கோடி ரூபாய் விடுபட்டிருந்தது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. அறிவிக்கப்பட்ட குறியீடுகளை விட ஜிஎஸ்டி வசூல் மிகவும் குறைவாகவே இருந்த அதே சமயத்தில், வருவாய்கள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டிருந்தன. மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் (சிஏஜி) கூற்றுப்படி, அரசாங்கத்தின் வருவாய் பற்றாக்குறை (fiscal deficit), ஜூன் காலாண்டு முடிவில், 3.42 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2019-20க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 61.4 சதவீதமாகும். இந்த நிதியாண்டில் இன்னமும் மூன்று காலாண்டுகள் பாக்கி இருக்கின்றன.  இந்த அரசாங்கத்திடம் நிதி வரு வாயைப் பொறுத்தவரையிலும் ஒரு கட்டுப்பாட்டினை நிலைநிறுத்திடக் கூடிய விதத்தில் சக்தியற்றதாக இருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. எனினும் இது தொடர்பாகத் தன்னைப் பீற்றிக் கொள்வதற்கு அரசு தயங்குவதே இல்லை. வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படு வதில்லை. கடந்த அரை நூற்றாண்டில் வேலை யின்மைக் கொடுமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று நன்கு தெரிந்தபோதிலும் அரசாங்கம் இதுதொடர்பாகத் தரவுகளைச் சேகரிக்க முன்வர வில்லை.  அதேபோன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்பாகவும் தரவுகளை சேகரிப்பதில்லை. இதன் விளைவாகவே, வேளாண் நெருக்கடியின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்கிற உண்மை விவரங்கள் வெளிச்சத்திற்கு வராம லேயே இருக்கின்றன.

கூட்டுக்களவாணி முதலாளித்துவம்
அரசாங்கம், செயல்படா சொத்துக்களின் (NPAs) - அதாவது, வராக்கடன்களின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல், கூட்டுக்கள வாணி முதலாளிகள் நாட்டின் செல்வத்தைச் சூறையாடு வது எவ்விதமான தடங்கலுமின்றித் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உண்மையில், வங்கிகளின் பதிவேடுகள் படி, நடப்பு ஆண்டில் வராக்கடன்கள் 2,30,811 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகக் காட்டுகின்றன. 2018-19ஆம் ஆண்டில் 1.96 லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்தபின் உள்ள கணக்காகும் இது.

நாடாளுமன்ற நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள்

சுயேச்சையாகச் செயல்பட்டுவந்த அனைத்து அரசமைப்புச் சட்ட நிறுவனங்களும் மிகவும் வெறித்தனமான முறையில் அடித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாஜக அரசாங்கம், தேர்தலுக்குப்பின் நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரி லேயே மிகவும் ஆபத்தான சட்டங்களை எல்லாம் நிறைவேற்றிட உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. புதிதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டபின்னர், நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நாடாளு மன்றத்தின் அறிமுகப்படுத்தப்படும் சட்டமுன்வடிவுகள் அனைத்தும் அவற்றின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர்தான் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும். இந்த அரசாங்கம் இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டது. இதுவரை எவ்விதமான குழுவும் அமைக்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் ஆழமான ஆய்வு எதுவும் இல்லாமலேயே குறைந்த பட்சம் 17 முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் நாடாளு மன்றத்தின் வேலைநாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சட்டமுன்வடிவுகளை ஆய்வு செய்வதற்காக தெரிவுக் குழுக்களையாவது அமைத்திடுங்கள் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பாஜக, தன்னுடைய பெரும்பான்மை என்னும் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி அனைத்து சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

வன்முறைமயமாகும் சமூகம்

நாடு முழுதும் வெறுப்பு, சகிப்பின்மை மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் எனும் மோசமான சூழல் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலமாக மதவெறித் தீ விசிறிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அநேகமாக பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம் சிறுபான்மையினர் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்றோ, ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்தார்கள் என்றோ  கூறப்பட்டு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலான நிகழ்வுகள் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கின்றன. ஜார்கண்ட், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் பல இடங்களிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருப்ப தாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அச்சத்தின் பிடியில்  தள்ளப்படும் மக்கள்

இந்த அரசாங்கத்தின் கடந்த இரண்டு மாத கால ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் குடிமை உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படு வது அதிகரித்திருக்கின்றன. பாஜகவின் முதலமைச்ச ருக்கு எதிராக “ஆட்சேபகரமான அம்சங்களைப்” பகிர்ந்து கொண்டதாகக் கூறி பலர் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள். அஸ்ஸாம், திரிபுரா, உத்தர்காண்ட், கோவா போன்ற பாஜக ஆளும்  மாநிலங்களிலும் எண்ணற்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது சமூக வலைத்தளங்களில் செயல்படுவோர் மத்தியில் ஒருவிதமான அச்ச உணர்வினை ஏற்படுத்தி இருக்கிறது. உச்சநீதிமன்றம் மிகவும் தெளிவான முறையில் தீர்ப்பளித்திருக்கின்ற போதிலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ எனும்  மிகவும் கொடுங்கோன்மைமிக்க பிரிவின்கீழ் சிறையில் தள்ளப்படுவோமோ என்கிற அச்ச உணர்வினை இதனைப் பயன்படுத்துவோர், எழுத்தாளர்கள் மற்றும் பலரிடம் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சமூகவலைத் தளங்களில் செயல்படுவோரை “அர்பன் நக்சல்கள்” அல்லது “துக்டே துக்டே கேங்” (tukde tukde gang) என்ற பெயர்களின்கீழ் குறிவைத்துத் தாக்கப்படலாம் என்ற அச்ச உணர்வும் இருந்து வருகிறது. 

காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் அனைத்து கட்சியின் அரசியல் கட்சிகளும் கலைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திற்கு, மக்களவைக்கான தேர்தலுடன் சேர்த்தே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்த போதிலும், அவ்வாறு தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்குத் தெளிவான விளக்கம் எதுவும்  அளிக்கப்படவுமில்லை.  அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்குமென்றால், அது எப்படி சட்டமன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்காது? மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பாஜகவின் பல்வேறு தலைவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி அளிப்பதற்கு வகைசெய்திடும் அரசமைப்புச்சட்டத்தின் 35ஆவது பிரிவை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று அறிவித்துக்கொண்டிருப்பது, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும், நாட்டின் இதர பகுதி மக்களுக்கும் இடையே இருந்துவரும் ஒற்றுமைப் பிணைப்பைத் தகர்ப்பதற்கே இட்டுச்செல்லும். இந்தப் பிரச்சனை தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையின்கீழ் இருந்து வருகிறது. நீதித்துறையின் நடைமுறைகள் முடியட்டும். பாஜக அரசாங்கம், அம்மாநிலத்தில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடனும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தையைத் துவக்கிட, தொடர்ந்து மறுத்து வருகிறது. அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திடவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியைக் கொண்டுவரவும் இது அவசியம்.  மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகக் கூறி, அரசாங்கம் அதிகாரபூர்வமாகவே கூடுதல் ராணுவப் படைப்பிரிவு களை அனுப்பியிருக்கிறது. அரசாங்கத்தின்தரப்பில் அரசியல் பேச்சுவார்த்தைகள் ஒரே சமயத்தில் தொடங்காதவரையில், ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பாது.

மாநில அரசாங்கங்களைக் கவிழ்க்கும் பாஜகவின் இழிதரம்

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டது. இது, எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிற அதன் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது. கர்நாடகாவில் கூட்டணி அரசாங்கத்துடனான பிரச்சனைகள் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், பாஜக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காலத்திலிருந்தே எப்படியாவது அதனைக் கவிழ்த்திட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டது. இப்போது இதர எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களை அது குறி வைத்துக்கொண்டிருக்கிறது.

அஸ்ஸாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறை
அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட இருக்கிறது. இதுவரை 40 லட்சத்து 70 ஆயிரம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் கூடுதலாக 1 லட்சத்து 02 ஆயிரம் விண்ணப்பங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான இந்தியக் குடிமக்கள் இப்பதிவேட்டிலி ருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகங்கள் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளன. தேசிய இறுதிப்பட்டியல் வெளியானபிறகு, குடிமக்களின் மேல்முறையீடுகளைக் கேட்கும் விதத்தில் அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டியது அவசியமாகும். அந்நியர்கள் நடுவர் மன்றம் என்பது இதற்கு இறுதித்தீர்ப்பு வழங்கும் ஓர் அமைப்பாக இருந்திட முடியாது. ஏனெனில் அது ஒன்றும் ஒரு நீதித்துறை அமைப்பு அல்ல. “குடிமக்கள் அல்லாதவர்கள்”-ஆக மாறியவர்களின் தகுநிலை மற்றும் அவர்களின் உரிமைகள் என்ன என்பது குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்திட வேண்டும். அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட்டபின்னர் தடுப்புக்காவல் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பவர்க ளின் அவலநிலை குறித்தும் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு மிகவும் மோசம். போதிய இடவசதியின்றி ஏராளமானவர்கள் குறிப்பிட்ட இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 335 பேர் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தடுப்புக்காவலில் அடைத்து வைக்கப்பட்டிருப்ப வர்களுக்கு, அடிப்படை மனித உரிமைகளை அளித்திடாமல், வருந்தத்தக்க நிலைமைகளுடன் தடுப்புக்காவல் முகாம்களை அரசாங்கம் நடத்த முடியாது.

அபாயகரமான  வெள்ள நிலைமை

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது. பல ஆறுகளில் வெள்ளம் மிகப் பெரிய அளவில் நாசத்தையும் உயிர்ச்சேதத்தை யும் விளைவித்திருக்கின்றன. அஸ்ஸாம், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு அங்கு மேலும் சேதம் ஏற்படாதவாறு தடுக்கும் விதத்தில் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்திட முன்வர வேண்டும் என்று மத்திய அரசை, அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சி அமைக்கப்பட்டு  நூறாண்டு நிறைவு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்டில் 1920 அக்டோபர் 17இல் அமைக்கப்பட்டது.  இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கம் உதயமானதன் நூற்றாண்டை 2019 அக்பர் 17இலிருந்து 2020 அக்டோபர் 17 வரை யிலும் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறை கூவல் விடுக்கிறது. நம் நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளமான வரலாறு, இந்தியாவில் சுதந்திரத்திற்கான போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பின் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட வும், தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களில் அது ஆற்றியுள்ள பங்களிப்புகள் இக்கொண்டாட்டங்களின் போது உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

அடித்து வீழ்த்தப்படும் கூட்டாட்சித் தத்துவம்

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடைச்) சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு திருத்தத்தின்படி, மத்திய உள்துறை அமைச்சகம் எவர் ஒருவரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கான சட்டப்பூர்வமான அதிகாரத்தைப் பெறுகிறது.  இதற்காக அந்த நபர் வாழ்கிற மாநிலத்தில் இயங்கும் அரசாங்கத்திற்கு அது எந்தத் தகவலும் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. அவ்வாறு அடையாளம் காட்டப்படுபவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட முடியும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எவராக இருப்பினும் இப்போது அரசாங்கத்தால் பயங்கரவாதிகள் என்று தன்னிச்சையாகவே அறிவித்திட முடியும்.  நம் நாட்டில் ஒருவர்மீது குற்றம் சாட்டப்பட்டால் அரசாங்கம்தான் அவரைக் குற்றவாளி என மெய்ப்பிக்க உரிய சாட்சியங்களையும், சான்றாவணங்களையும் நீதிமன்றத்தில் முன் அளித்திட வேண்டும். அத்தகைய நீதிபரிபாலன கோட்பாடு (The principle of jurisprudence) இப்போது தலைகீழாக்கப்பட்டிருக்கிறது. இனி அரசாங்கம் ஒருவரை பயங்கரவாதி என்று முத்திரைகுத்திவிட்டால் அந்த நபர்தான், தான் பயங்கரவாதி அல்ல என்பதற்கும், தான் எதுவும் அறியாதவன் என்பதற்குமான சாட்சியங்களையும், சான்றாவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும். இது, மிகப் பெரிய அளவில் மக்கள் துன்புறுத்தப்படுவதற்கும், பழிவாங்கப்படுவதற்கும் அதீதமான முறையில் அநீதி இழைக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும். இதன்காரணமாக சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியல் என்றெல்லாம் இனி சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அனைத்தையும் மத்திய அரசு இந்தத் திருத்தத்தின்மூலம் அடித்து வீழ்த்தி இருக்கிறது.

தகவல் அறியும்  உரிமைச் சட்டத்திருத்தம்

தற்போது நடைமுறையிலிருந்து வரும் தகவல் அறியும் உரிமையைச் செல்லாததாக்கும் விதத்தில் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பாஜக அரசாங்கம் மக்களிடம் மறைப்பதற்கு ஏராளமாக இருக்கிறது. அது தான் செய்திடும் அனைத்து தில்லுமுல்லுகளையும் மக்களிடம் கூறாமல் மறைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலும் தனது கூட்டுக்களவாணிகளான பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பாஜக அரசு அளித்துவரும் அபரிமிதமான சலுகைகளை பொதுவெளியில் வெளியாவதை மறைக்க வேண்டிய நிலையில் அது இருக்கிறது. இதற்காக திருத்தம் கொண்டுவந்திருக்கிறது.

முத்தலாக் தடைச் சட்டம்
முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, முஸ்லிம் திருமணச் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்றி இருக்கிறது. முஸ்லீம் சிறுபான்மை யினருக்கு எதிராக இதனைத் துஷ்பிரயோகம் செய்திட வாய்ப்பு இருக்கிறது. பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்காக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தை (சிபிஐ) ஏவுவது தொடர்கிறது. அதேபோன்று, அமலாக்கத்துறையும் மிகவும் மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. மாநில அரசியல் கட்சிகளை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் அவற்றைத் தங்களுக்கு அடிபணிந்து கிடக்கச் செய்திட வேண்டும் என்ற  நோக்கத்துடனும், அவர்களைக் கட்சித்தாவல் செய்ய வைத்திட வேண்டும் என்பதற்காகவும் இவற்றின்மூலமாக அவர்கள்மீது அச்சுறுத்தல்கள் ஏவப்படுகின்றன. அதேபோன்று, நாட்டிலுள்ள உச்சநீதிமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்தியக் கணக்கு மற்றுத் தணிக்கைத்துறைத் தலைவர் அலுவலகம் ஆகிய அனைத்துமே பல்வேறு மட்டங்களில் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றன. இவை அனைத்தும் நாட்டிலுள்ள அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.

தொழிலாளர் விரோத  சட்டத் திருத்தங்கள்

பாஜக அரசாங்கம், தற்போது தொழிலாளர்கள் தொடர்பாக இருந்து வருகின்ற 44 சட்டங்களையும் அப்புறப்படுத்திவிட்டு, அதற்குப்பதிலாக நான்கு சட்டங்களை மட்டும் கொண்டுவர இருப்பதாக அறிவித்திருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இப்போது இவர்கள் முன்மொழிந்திருக்கிற சட்டத்திருத்தங்களும், பல ஆண்டு காலமாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை அடித்து வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டவையேயாகும். தொழிலாளர்கள் கடும் போராட்டங்களின்மூலமாகப் பெற்றிட்ட உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கோ அல்லது நீர்த்துப்போகச் செய்வதற்கோ அனுமதிக்க முடியாது. இதற்கு எதிராக ஆகஸ்ட் 2 அன்று நாடு தழுவிய அளவில் மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் ஐக்கிய மேடையால் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள கூட்டுப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

வன உரிமைச் சட்டத்தை நிராகரிக்கும் அராஜகம்

உச்சநீதிமன்றத்தின் முன், வன உரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில் அரசாங்கம் தாக்கல் செய்த மனுவில் வன உரிமைகளைப் பாதுகாத்திடாமல் மோடி அரசாங்கம் படுதோல்வியடைந்திருப்பதற்கு நாடு முழுதும் உள்ள பழங்குடியினர் தங்கள் ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பட்டா மறுக்கப்பட்ட சுமார் 23 லட்சம் பழங்குடிக் குடும்பத்திற்காக, தாங்கள் எந்நேரமும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். மத்திய அரசாங்கம், வன உரிமைச் சட்டத்தை எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி பாதுகாத்திட முன்வர வேண்டும் என்றும், பழங்குடி மக்களை எக்காரணம் கொண்டும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. அதே சமயத்தில், பழங்குடியின மக்களுக்கு வனங்களின் மீதும் வனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின்மீதும் எவ்வித உரிமையும் கிடையாது என்று மறுத்திடும் காலனியாதிக்கக் காலத்து 1927ஆம் ஆண்டு வனச் சட்டத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கமானது இப்போதுள்ள வன உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில், அதைவிட மிகவும் கொடுங்கோன்மைமிக்க விதத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தத் திருத்தங்கள் அனைத்தையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மத்திய அரசாங்கம் பழங்குடியினர் மீது ஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் நடத்திவரும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
 

 








 

 


 

;