tamilnadu

img

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா ஆரம்ப நிலையில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு நாடுகள்  கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி முயற்சிகளுக்கு ஆதரவாக பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதையொட்டி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது மிக முக்கிய தேவையாக உள்ளது. இந்திய கல்வியாளர்கள், பல்வேறு நிறுவனங்கள், தொழில் துறையினர் இதில் கரம் கோர்த்துள்ளனர். தடுப்பூசி மேம்பாட்டுக்கான பாதைகளை அடையாளம் காண்பதற்கு உயிரி தொழில்நுட்பத்துறை ஒரு மைய ஒருங்கிணைப்பு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வைரஸ் வல்லுநர் சாகித் ஜமீல் கூறுகையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. குறைந்தது 3 இந்திய நிறுவனங்களான சீரம் இந்தியா நிறுவனம், பாரத் பயோடெக், பயாலஜிக்கல்ஸ் இ ஆகியவை முன்னணியில் உள்ளன. இவை சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி என்பது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில்தான் எந்தவொரு தடுப்பூசியும் விலங்குகளுக்கு செலுத்திப்பார்க்கும் நிலையை அடையும்.  இந்திய தடுப்பூசி நிறுவனங்களிடம் நிறைய திறன் மற்றும் நிபுணத்துவம் உள்ளது. இவை கொரோனா தடுப்பூசியை சந்தைக்கு கொண்டு வருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

;