tamilnadu

img

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாள்.... மூன்றாம் கட்டம் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்..... கேரள முதல்வர் உறுதி

திருவனந்தபுரம்:
கேரளத்தின் கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளில் சிச்சையில் 16 பேர் மட்டும் உள்ளதாகவும், கோவிட்டின் மூன்றாம் கட்ட பரவல் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் உறுதிபட தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஜனவரி 30இல் வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த மாணவியிடம் நாட்டிலேயே முதலாவதாக கோவிட் கண்டறியப்பட்டது. அந்த தொடக்க காலத்திலேயே நோய் மற்றவர்களுக்கு பரவவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது. பின்னர் மார்ச் முதல் வாரம் கோவிட்டின் இரண்டாவது வரவு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நோயின் வரைபடம் சமநிலையை எட்டியுள்ளது.

உலகிலேயே உயர்ந்த நிலை
நோய் குணமடைந்தோர் விகிதாச்சாரம் உலகிலேயே உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் கேரளத்துக்கு வெளியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகிறவர்களை வரவேற்க தயாரானது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இனி ஒரு மூன்றாம் கட்ட நோய் பரவல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படி மூன்றாம் கட்ட வரவு நடந்தாலும் அதை எதிர் கொள்ளவும் மீண்டு வரவும் கேரளம் தயாராக உள்ளது என முதல்வர் கூறினார்.  தற்போது ஆறுதல் அளித்தாலும் இனி வரும் நாட்களும் முக்கியமானவை. முன்னெச்சரிக்கையோடும் ஒன்றுபட்டும் செயல்பட வேண்டும். இதுவரை இருந்துவந்த முன்னுதாரணமான ஒத்துழைப்பு பொது சமூகத்திடமிருந்து அதிக அளவில் கிடைக்க வேண்டிய காலகட்டம் இது எனவும் முதல்வர் கூறினார்.

3770 நியமனங்கள்
கேரளத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் பகுதியாக சுகாதாரத்துறையில் தேசிய சுகாதார மிஷன் (என்எச்எம்) மூலம் 3770 தற்காலிக பணியிடங்கள் உருவாக்கி நியமனம் செய்யப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார். 704 மருத்துவர்கள், 100 சிறப்பு மருத்துவர்கள், 1196 செவிலியர்கள், 167 செவிலியர் உதவியாளர்கள், 246 மருந்தாளுநர்கள், 211 ஆய்வக நுட்பர்கள், 292 இணை மருத்துவ ஆய்வாளர்கள், 317 துப்புரவு பணியாளர்கள் என சுமார் 34 விதமான பணிகளில் இந்த நியமனங்கள் உள்ளன. இதுவரை 1390 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்கள் மாவட்டங்களின் தேவைக்கேற்ப நியமிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே 276 மருத்துவர்கள், பணியாளர் தேர்வாணையம் மூலம் அவசரமாக நியமனம் செய்யப்பட்டனர். காசர்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக 273 பணியிடங்கள் உருவாக்கி நியமனம் நடைபெற்று வருகிறது. 980 மருத்துவர்கள் மூன்று மாதங்களுக்கு தற்காலிக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதோடு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறினார்.

;