tamilnadu

img

கண்ணன் கோபிநாதன் மீது உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை

புதுதில்லி:
அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தாங்கிக்கொள்ளாமல், தன் பதவியை ராஜினாமா செய்துள்ள ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 33 வயதுள்ள கண்ணன் கோபிநாதன், ஓர் ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் தற்போது டாமன் – டையு மற்றும் தாதர்- நாகர்ஹவேலி யூனியன் பிரதேசங்களின் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.  சென்ற ஆண்டு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டசமயத்தில், கேரளா சென்று, தாதர்-நாகர்ஹவேலியூனியன் பிரதேசம் சார்பாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள அரசிடம் சமர்ப்பித்தார். பின்னர்  தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரது நண்பர் ஒருவர் இவரை அடையாளம் கண்டு வெளி உலகுக்குத் தெரியப்படுத்தியபோதுதான் இவர் ஓர் ஐஏஎஸ் அதிகாரி என்று அனைவருக்கும் தெரியவந்தது.இவர் கடந்த 20 நாட்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிறைப்படுத்தப்பட்டு துன்ப துயரங்களில் வாடிவருவதைக் கண்டு மனம் தாங்காமல், தன் பதவியை ஆகஸ்ட் 21 அன்று ராஜினாமாசெய்துவிட்டார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லட்சக்கணக்கான மக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டி இருந்தார். இதனைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் ஏராளமானவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 
இதனைத் தொடர்ந்து இப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அதன் சார்பு செயலாளர் ராகேஷ் குமார் சிங், கண்ணன் கோபிநாதன்மீது அவர்  ஜூலை மாதத்தில் ஏதோ ‘அதிகார துஷ்பிரயோகத்தில்’ ஈடுபட்டதாகக் கூறப்பட்டு அதற்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காரணம் கோரும் அறிவிப்பை அனுப்பி இருப்பதாக மெயில் டுடே நாளிதழ் குறிப்பிட்டிருக்கிறது.

இரு பக்கங்கள் கொண்ட காரணம் கோரும்அறிவிப்பில் கண்ணன் கோபிநாதனுக்கு எதிராக ஐந்து காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இதில் சென்ற ஆண்டு கேரளாவில் வெள்ளம் வந்தபோது அவர் எப்படித் தன் சொந்த மாநிலமான கேரளா செல்லலாம் என்பது ஒன்று.  இவர் திரும்பி வந்தபின் இது தொடர்பாக எவ்வித அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பது அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.கண்ணன் கோபிநாதன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்திருக்கிறார். தான் மிகவும் பொறுப்புள்ள அதிகாரியாக நேர்மையுடனும் ஒழுங்குடனும் நடந்து வந்திருப்பதாகக் கூறுகிறார். எனவேதான் 2017-18ஆம் ஆண்டில் மாண்புமிகு நிர்வாகி (Hon’ble Administrator), தனக்கு ஆண்டு செயல்பாடு மதிப்பீட்டு முறையில் (Annual Performance Appraisal System)  பத்துக்கு 9.95 மதிப்பெண் 2018 டிசம்பர் 24 அன்று அளித்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் கண்ணன் கோபிநாதன் சென்ற ஆண்டு வெள்ளத்தின்போது கேரளாவில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பிவந்தபின், தான் கேரளா சென்றிருந்த எட்டு நாட்களையும் விடுப்பாகத் தன் கணக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு நிர்வாகத்திடம் கோரியிருக்கிறார். ஆனால் நிர்வாகத்தினர், அவர் சமூகத்திற்காகவே உழைத்திருக்கிறார் எனவே விடுப்பாகக் கருத வேண்டியதில்லை என்று கூறி அவர் வேண்டுகோளை நிராகரித்துவிட்டது. ஆனால் இப்போது உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. (ந.நி.)

;