tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் தில்லியில் தர்ணா.. உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் வாக்குறுதி!

புதுதில்லி:
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு மூன்று  வருடங்கள் ஆகின்ற நிலையில், அச்சட்ட த்தை முழுமையாக அமல்படுத்த மத்திய-மாநில அரசுகள் மறுத்து வருகின்றன. இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தரில்  திங்கள்கிழமை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.நாடு முழுவதுமிருந்து மூன்றா யிரத்துக்கும் மேற்பட்டமாற்றுத்திறனாளிகள்  இந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர். மேடையின் தலைவர் காந்தி கங்குலிதலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.முரளீதரன், பொருளாளர் எஸ்.நம்புராஜன், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் உரையாற்றினர்.  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னன் முல்லா, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் விக்ரம் சிங், சுனித் சோப்ரா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பல்நோக்கு அடையாளச் சான்று பதினைந்து நாட்களுக்குள் வழங்க வேண்டும், மத்திய அரசுத்துறைகளில் புதிய சட்டப்படி 4 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பின்னடைவு காலிப்பணியிடங்கள் முழுமையாக கண்டறிந்து நிரப்பப்பட வேண்டும், ஐஐடி, ஐஎம்எம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் சட்டப்படி 5 சதவீத இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், ரயில்வே துறை தனியான சான்று வழங்கும்திட்டத்தை தடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் ரயில்வே சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு மத்திய சமூகநீதித்துறை அழுத்தம் கொடுக்க வேண்டும், மத்தியஅரசு நடைமுறைப்படுத்தும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும் 25 சதவீத கூடுதல் அளவு மாற்றுத்திற னாளிகளுக்கு சட்டப்படி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
இப்போராட்டம் நடைபெறுவதை அறிந்த மத்திய ஊனமுற்றோர் துறை இயக்குனர் கே.வி.எஸ். ராவ், சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் முரளீதரனை தொடர்புகொண்டு, கோரிக்கைகள் நியாயமானவை என்றும், கோரிக்கைகளை நடைமுறைப் படுத்த மத்திய அரசு தயாராக இருப்ப தாகவும், ஊனமுற்றோர் துறைக்கு பொறுப்பானமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.  இந்த அழைப்பை ஏற்று, நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள சமூக நீதித்துறை அமைச்சரவை அலுவலகத்தில் மத்திய அமைச்சருடன் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  கோரிக்கைகளை கவனமாக கேட்ட அமைச்சர் கெலாட், மத்திய அரசு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உளப்பூர்வமாக உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தார்.  மாநில அரசுகள் செய்ய வேண்டியபணிகளுக்கும் மத்திய அரசின் சார்பில் அழுத்தம் தரப்படுவதாக அவர் மேலும் கூறினார்.  இச்சந்திப்பில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் காந்தி கங்குலி, பொதுச்செயலாளர் முரளீதரன், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர். சக்கரவர்த்தி, கேரள மாநில நிர்வாகி கிரிஷ்கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.மத்திய அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து தர்ணா போராட்டம் மதியம் 2 மணி அளவில் நிறைவு பெற்றது.'
 

;