tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

காக்னிசாண்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து இப்போது இன்போசிஸ் நிறுவனமும் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் பல்லாண்டுகாலம் பணியாற்றி சீனியர் நிலையில் இருக்கக்கூடிய சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்புவதற்கு முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ். ஏற்கெனவே காக்னிசாண்ட் நிறுவனம் சில ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த செய்திகள் வெளியாகின. இந்திய ஐடி நிறுவனங்களில் நடந்து கொண்டிருக்கும் இந்த பயங்கரம், மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியின் உச்சம். பாஜக ஆட்சியாளர்களின் தேர்தல்கால மோசடி வாக்குறுதிகளின் எச்சம். ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை, நிலையற்ற தன்மையை மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் அந்தத் துயரத்தை அனுபவிப்பது உச்சக்கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகள் அல்ல, இருக்கிற வேலைகளே காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் கடந்த சில மாத காலங்களில் சூறையாடப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்தின் மூன்றாண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கமும் சேர்ந்து தாக்கிய நிலையில், இந்திய பொருளாதாரம் உண்மையிலேயே மிக மிகக் கடுமையான சரிவை, மீள முடியாத மந்தத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசாங்கத்திடம் இதற்கு மாற்றாக, இதிலிருந்து மீள்வதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

;