tamilnadu

img

அச்சுறுத்தும் தேர்வுகள் - ச.சீ.இராஜகோபாலன்

5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் வைக்கப்படும் என்று தமிழகக் கல்வித்துறை விடாப்பிடியாகச் செயல்படுகின்றது. அவர்கள் பயிலும் பள்ளியிலல்லாது வேறு பள்ளியில் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய அறிவிப்பு குழந்தைகள் பற்றிய புரிதல் சற்றும் இல்லாமையையே எடுத்துக் காட்டுகின்றது. மாணவர் மட்டுமல்ல, ஆசிரியர்களும் நம்பத் தகுந்தவர் அல்ல என்ற அவநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. 7 மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தம் பள்ளிக்கு மாறான சூழலில் தேர்வு எழுதுவது எளிதல்ல. சிலர் பதற்றமடையலாம், வேறு சிலர் அதனைச் சுற்றுலாப் பயணம் போல் கருதி மகிழ்ச்சி அடையலாம். ஒரு பள்ளிக்கு மாறாக மற்றொரு பள்ளியே தேர்வு மையம் என்பது ஓரளவிற்கு மகிழக்கூடியது. நல்ல வேளை காவல் நிலையத்தைத் தேர்வு  மையமாக்காததற்கு நன்றி தெரிவிப்போம். விவேகத்தோடு பின்வாங்கியதற்குப் பாராட்டுகள்.  வகுப்பாசிரியரே மாணவரை மதிப்பிடுவது பல முன்னேறிய நாடுகளில் பின்பற்றும் நடைமுறை. தன் கற்பித்தலில் உள்ள நிறை குறைகளைக் கண்டறிந்து தம்மை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர்க்கு அது உதவும். கோத்தாரிக் கல்விக் குழு, பேரா.யஷ்பால் குழு அறிக்கைகளைப் படித்துப் புரிந்து கொண்டிருந்தால் அறிவிற்குப் புறம்பான இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். குழந்தை உளவியலில் அடித்துக் கூறுவது, இரு குழந்தைகள் ஒன்று போன்றவரல்ல. ஒவ்வொரு குழந்தையின் உடல் வளர்ச்சியைப் போலவே, மன வளர்ச்சியும் மாறுபடும்.  சிலரது கற்றல் வேகம் குறைவாக இருக்கக்கூடும். அதனால் கற்க அருகதையற்றவர் என்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. மெதுவாகக் கற்றவர் பலரும் பின்னாளில் சிறந்து விளங்குவதைக் காண முடியும். 

ஒரு ஆண்டு பள்ளித் தேர்ச்சிப் பட்டியலைத் தயாரிக்கும் பொழுது குறைந்த அளவு மதிப்பெண்களைக் குறிப்பிட்ட வேளையில் 90% நாட்கள் பள்ளிக்கு வந்தவர்களுக்கு மதிப்பெண்ணைப் பாராது தேர்ச்சி கொடுக்கப்படும் என்ற விதியைச் சேர்த்தேன். ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 90% நாட்கள் பள்ளிக்கு வந்தும் 30% மதிப்பெண் பெற முடியாவிட்டால் குறை மாணவரிடம் மட்டுமில்லை, நாமும் பொறுப்பேற்க வேண்டாமா என்று கேட்டேன். கல்வித் துறையும் அவ்விதியை ஏற்க மறுத்து மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சிப் பட்டியலைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். சிற்றூர்களில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பயின்று வருகின்ற மாணவர் ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் சிறந்து விளங்குவர். அதனால் ஆங்கிலம் தவிர்த்து அவர்களுக்குத் தேர்ச்சி கொடுக்கப்பட்டு நாளும் ஆங்கில இலக்கண வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி தேர்ச்சி வழங்கப்பட்டவரில் ஒருவர் இங்கிலாந்து சென்று தொழிற்கல்வி பெற்று சிறந்த தொழில் முனைவராக இருந்ததையும், மற்றொரு மாணவர் மருத்துவக் கல்வியில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றதையும், மூன்றாமவர் கணித வல்லுநராகத் திகழ்ந்த உண்மை நிகழ்வுகளைச் சுட்டி என் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள இயலாமையைக் கல்வி இயக்குநருக்குத் தெரிவித்தேன். அதற்கு பதில் கொடுக்க முடியாது கிடப்பில் போட்டனர். 

ஆசர் அறிக்கைகள் கற்றல் அடைவுகளில் உள்ள குறைகளை ஆண்டு தோறும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் கல்வித்துறைக்கு அவை எந்த அதிர்வையும் அளிக்காதது வியப்பல்ல. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. அவற்றைக் கொண்டு கள ஆய்வு மேற்கொண்டு தக்க குறைதீர் செயல்களை மேற்கொள்வதே குழந்தைகளின் முழுமையான கற்றலை உறுதி செய்யும். வேறு பள்ளியில் சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கைவிடுவது முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுகிறேன். பொதுத் தேர்வையே நிறுத்துவது விவேகமாகும்.

;