tamilnadu

img

பிப்.26 பெங்களூரில் ரயில்வே கால அட்டவணை மாநாடு... ரயில் கால அட்டவணை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்

திருநெல்வேலி:
ரயில்வேத் துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் ரயில் கால அட்டவணையை ரயில்வேத் துறை வெளியிட்டது. இந்த ஆண்டிற்கான ரயில் கால அட்டவணையை தயாரிக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த அட்டவணையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களின் நேரத்தை மாற்றி புதிய நேரத்தில் இயக்குதல், வேகத்தை அதிகரித்தல், முனையங்கள் மாற்றம் போன்ற அறிவிப்புகள் இடம்பெறும். ரயில்வே கால அட்டவணையில் மத்திய-மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் நீட்டிப்பு செய்தல், ரயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்து இயக்குதல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும்.இதற்காக ரயில் கால அட்டவணை மாநாடு நடைபெறும். இந்த ரயில் கால அட்டவணை மாநாட்டில் இந்தியாவில் உள்ள 73 ரயில்வே கோட்டங்களில் உள்ள காலஅட்டவணை கட்டுப்பாட்டாளர் மற்றும் 17 ரயில்வே மண்டலங்களில் உள்ள முதன்மை கால அட்டவணை கட்டுப்பாட்டாளர்கள் கலந்து கொள்வர். 

இவர்கள் ரயில்வே கால அட்டவணையில் புதிய ரயிலுக்கான அறிவிப்புகள், தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் நீட்டிப்பு, ரயில்களின் சேவைகள் அதிகரித்தல், காலஅட்டவணை மாற்றம் செய்தல், புதிய ரயில்கள் நிறுத்தம், வழித்தடங்களை மாற்றி இயக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 2020-க்கான இந்த ரயில் கால அட்டவணை மாநாடு பெங்களூரில் பிப்ரவரி 26 முதல் பிப்.28 வரை நடைபெற இருக்கிறது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் கால அட்டவணையில் எவ்வாறு எல்லாம் திட்ட கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் வேகமாக செய்து வருகின்றனர். கோட்ட அளவில் இந்த பணிகள் முடிவு பெற்று மண்டலத்துக்கு அனைத்து திட்ட கருத்துருக்களும் சென்றுவிட்டன.

இந்த மாநாட்டில் ஒவ்வொரு மண்டலத்திலிருந்து திட்ட கருத்துருவை அடுத்த ரயில்வே மண்டலத்தை சார்ந்த ரயில் கட்டுப்பாடு மற்றும் இயக்க பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விவாதித்து ரயில் பெட்டிகளின், ரயில் இன்ஜின்களின் இருப்பு, ரயில்கள் இயக்கப்படும் வழித்தடம் மற்றும் காலம், ரயில் பெட்டி பராமரிப்பு நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டியல் தயார் செய்யப்படும்.      குமரிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு ரயில்கால அட்டவணை மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நாகர்கோவில் - சென்னை தாம்பரம் ரயிலின் சேவையை அதிகரித்தல், கன்னியாகுமரி – வாரணாசி வாராந்திர ரயில், கன்னியாகுமரி – வாஸ்கோடகாமா வாராந்திர ரயில் போன்ற ரயில்களை இயக்க திட்டம் கருத்துரு வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட சேவைகள் ஆகும். இது மட்டுமில்லாமலும் பல வழித்தடங்களில் பல்வேறு ரயில்கள் இயக்க விவாதிக்கப்பட்டு முனைய வசதி இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது.

;