tamilnadu

img

ஆய்வு தெரிவிக்கும் உண்மைகள்

*    ஆய்வு நடத்தப்பட்டவர்களில் 44 சதவீதத்தினர் மேற்கு வங்கத்திலிருந்தும், 32 சதவீதத்தினர் பீகாரிலிருந்தும் புலம் பெயர்ந்தவர்களாக உள்ளனர். 72 தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்திலிருந்தும், 2 பேர் நேபாளத்திலிருந்தும், 40 பேர் காஷ்மீரிலிருந்தும் புலம் பெயர்ந்து தில்லிக்கு வந்துள்ளனர்.

*    கிட்டத்தட்ட 58.5 சதவீதத்தினர் கிழக்கு தில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்குதான் பெருமளவில் ஆடைகளையும், துணிப் பைகளையும் தயாரிக்கும் குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. ஊரடங்கு நிலை அறிவிக்கப்பட்டவுடன், அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டதோடு, தொழிலாளர்களுக்கு கூலியும் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, இத்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் நூல்களை கத்தரிக்கும் பணியில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டு வந்த வீடுசார் தொழிலாளர்களாக ஈடுபட்டு வந்த எண்ணற்ற பெண்களும் தற்போது வேலையை இழந்துள்ளனர். 

*    இவர்களில் பெரும்பாலானவர்கள் தினக்கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். இத்தொழிலாளர்களில் 28 சதம் பேர் மட்டுமே மாதந்திர ஊதியம் பெற்று வந்தனர். 35 சதம் பேர் பீஸ் ரேட் காண்டிராக்ட் தொழிலாளர்களாகவும், 23 சதம் பேர் தினக் கூலிகளாகவும், சுமார் 13 சதம் பேர் சுயதொழில் புரிபவராகவும் இருந்து வந்துள்ளனர். இத்தகைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 58 சதவீதம் பேர் எத்தனை நாட்களுக்கு தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் எதுவும் இல்லாத நிலையிலேயே வேலை செய்து வந்துள்ளார்கள் என்பதை இந்த ஆய்வு அம்பலப்படுத்துகிறது.

*    வருமானம் - ஊரடங்கு நிலைக்கு முன்னர் இவர்களது வேலைக்கு கொடுக்கப்பட்ட கூலி குறித்த விவரங்கள் அதிர்ச்சியில் உறையச் செய்வதாக உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 4 சதவீதத்தினர் மாதத்திற்கு 5,000 ரூபாய்களுக்கும் குறைவான வருமானத்தையும், 52 சதவீதத்தினர் மாதத்திற்கு 5,000 முதல் 10,000 ரூபாய் வரையிலான வருமானத்தையும், 35 சதவீதத்தினர் மாதந்தோறும் 10,000 முதல் 15,000 வரையிலான வருமானத்தையுமே ஈட்டி வந்துள்ளனர். இத்தகைய குறைந்த வருமானத்தில், தங்களது சொந்தத் தேவைகளை குறைத்துக் கொண்டு ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு கணிசமான தொகையை அனுப்பி வந்துள்ளனர். தங்களது சம்பாத்தியத்தில் 2000 முதல் 8000 வரையிலான ரூபாய்களை மாதந்தோறும் ஊரிலுள்ள தங்களது குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளனர். விலைவாசி அதிகமாக உள்ள தில்லி போன்ற நகரத்தில் இத்தகைய குறைவான ஊதியத்தில் ஊருக்கும் அனுப்பிய பின்னர் கையில் இருக்கும் தொகையில் இவர்களது வாழ்க்கைத்தரம் மிக மோசமாகவே இருந்துள்ளது. 

*    உணவுப் பொருட்கள் கையிருப்பு – 29 சதவீதத்தினரிடம் அரிசியும், 51 சதவீதத்தினரிடம் கோதுமையும், 52 சதவீதத்தினரிடம் பருப்பு வகைகளும், 54 சதவீதத்தினரிடம் சமையல் எண்ணெயும் இருக்கவில்லை. தங்களது கையிருப்பில் இவை இருப்பதாக சொன்னவர்களிடமும் கூட, நபர் ஒருவருக்கு 650 கிராம் அரிசியும், 300 கிராம் கோதுமையும், 200 கிராம் பருப்பு வகைகளும், 130 மில்லிலிட்டர் சமையல் எண்ணெய்யுமே இருக்கின்றன. 

*    அரசு உதவிகள் – 65 சதவீதம் பேருக்கு உணவுப் பொருட்களாகவோ அல்லது சமைத்த உணவாகவோ அரசின் உதவி எதுவும் கிடைக்கவில்லை. இத்தகைய உதவி கிடைக்கப்பெற்றவர்களில், சுமார் 75 சதவீதத்தினர் கொடுக்கப்பட்டவற்றின் அளவு போதுமானதாக இருக்கவில்லை. 

*    அரசு உதவி - தில்லி அரசு ரேஷன் அட்டையோ அல்லது ஆதார் அட்டையோ இருப்பவர்களுக்குத் தான் உணவு தானியங்களை ரேஷன் மூலம் கொடுக்கிறது. மற்றவர்கள் சமைத்த உணவை விநியோகிக்கும் அரசு சமையலகங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். இந்நிலையில், ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 500 பேருக்கு ரேஷன் அட்டையோ அல்லது ஆதார் அட்டையோ கிடையாது. எனவே, தில்லி அரசு கொடுக்கும் உணவு தானியங்களைப் பெறுவதற்கான தகுதி இவர்களுக்கு இல்லை. 

*    அரசு அளிக்கும் நிதியுதவி – ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதத்தினருக்கு வங்கிக் கணக்கு கிடையாது. எனவே, அரசு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் நிதியுதவியும் இவர்களுக்குக் கிடைக்காது. 

நாடு முழுவதிலும் உள்ள பல லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையும் இதுவாகவே இருக்கும். இத்தகைய தொழிலாளர்களின் யதார்த்த நிலை குறித்து எதுவுமே ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை என்பதையே ஊரடங்கு நிலையில் மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் அறிவிக்கும் கொள்கைகள் பறைசாற்றுகின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயர் மிகுந்த வாழ்வின் ஒரு சில அம்சங்களையே இந்த ஆய்வு நமது பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது. இனி வரும் காலத்தில், இத்தகைய தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், கண்ணியமான வாழ்விற்காகவும் இந்திய தொழிற்சங்க இயக்கம் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

தொகுப்பு: எம்.கிரிஜா