tamilnadu

img

கலாச்சாரமற்ற முறையில் கலாச்சாரத்தை வளர்ப்பது - டி ஜே எஸ் ஜார்ஜ்

லூட்டியன் தில்லியை மோடி வகை தில்லியாக மாற்றுவதற்கான திட்டங்கள், பெரும்பாலான இந்தியர்களை
முட்டாள்தனமான தற்புகழ்ச்சி கொள்ள வைத்திருக்கின்றன. அந்த திட்டங்கள் கைவிடப்படப் போவதில்லை.
தங்களை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக மற்றவர்கள் காண வேண்டும் என்று விரும்புகின்ற
தலைவர்கள் ஒருபோதும் தங்களைத் தாங்களே முன்னிறுத்திக் கொள்வதற்கான திட்டங்களைக்
கைவிடுவதில்லை. கடந்த 12,000 ஆண்டுகளில் இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி
குறித்த முழுமையான ஆய்வை இந்திய அரசு ஏன் ஊக்குவிக்கின்றது என்பதை அது விளக்குவதாக
இருக்கிறது.
‘முஸ்லீமாக இருந்த போதிலும், மறைந்த குடியரசுத் தலைவr ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தலைசிறந்த
தேசியவாதியாக இருந்தார்’ என்பது போன்ற கருத்துக்களால் புகழ்பெற்றிருந்த அமைச்சரான மகேஷ் சர்மா
2016இல் குழு ஒன்றை அமைத்தார். உதவித்தொகை மற்றும் படிகளைப் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர,
அந்தக் குழு நிச்சயமாக வேறு எதையும் செய்யவே இல்லை.

இப்போது இந்தப் புதிய குழுவும் எதையும் செய்வதற்கான உத்தரவாதத்தைத் தரவில்லை. தவறான
எண்ணத்தின் அடிப்படையிலான தீர்ப்பாக இதைக் கருத வேண்டியதில்லை. அமைக்கப்பட்டிருக்கும் குழுவின்
அமைப்பு சார்ந்து எழுந்திருக்கும் தர்க்கரீதியான முடிவாகும். இந்தக் குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஒரே பொருளாதார வர்க்கம் (மேல் நடுத்தர), ஒரே பிராந்தியம் (வட இந்தியா), ஒரே மொழி (ஹிந்தி)
அடையாளம் கொண்டவர்களாகவே இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் இருக்கின்றனர்.
தெற்கில் இருந்து யாருமோ, எந்தவொரு பெண்ணுமோ அல்லது தலித்துகளோ அதில் இடம்
பெற்றிருக்கவில்லை. சிறுபான்மையினத்திற்கான பிரதிநிதிகளும் இல்லாத நிலையில், இந்தியக்
கலாச்சாரத்தைப் பற்றி பேசவோ அல்லது 12,000 ஆண்டுகளைக் கற்பனை செய்வதற்கோகூட
திறமையற்றதாகவே அந்தக் குழு இருக்கிறது.
இந்த 12,000 ஆண்டுகளை நம்மை ஆளுகின்ற தேசபக்தர்களால் விரும்பத்தக்க காலமாகத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளத் தூண்டியது எது? அதுதான் நமக்குத் தெரிந்திருக்கும் நாகரிகத்தின் தொடக்க காலமாகும். 12,000
ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவடைந்து, ஒப்பீட்டளவில் காலநிலை வெப்பமடையத் தொடங்கிய
போது ஹோமோ சேபியன்ஸ் என்ற மனித இனம் துணைக்கண்டத்தில் குடியேறியது. அந்தக் காலத்தை
முழுமையாக உள்ளடக்குவதன் மூலம், தேசபக்தி இல்லாத கருத்துக்கள் எதுவும் நுழைந்து விடாத வகையில்
எந்த இடைவெளிகளும் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த அந்தக் குழு விரும்புகிறது.
ஆனாலும் தனக்கானதொரு தோற்றத்தை அந்தக் குழு உருவாக்கத் தவறிவிட்டது. உண்மையில் அந்தக் குழு
திறமையற்றது என்றே பலராலும் கருதப்படுகிறது. தெளிவான அறிவுஜீவியான முன்னணி கர்நாடக
இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணா, இந்திய அரசாங்கத்தின் மதவெறி, சாதி, ஆணாதிக்க
அணுகுமுறைக்கான சான்றாகவே அந்தக் குழுவின் அமைப்பு இருக்கின்றது என்று கூறுகிறார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் பிற்போக்குத்தனமான, வகுப்புவாத
உணர்வுகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இத்தகைய பொதுப்புத்தியிலிருந்து எழுகின்ற

குரல்களால் அதிக அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ‘இந்திய வரலாற்றின் உண்மையான நிறம்
காவி, கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நாம் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும்’ என்று
ஆர்.எஸ்.எஸ் துணைப் பொதுச்செயலாளரான மன்மோகன் வைத்யா முன்வைத்த ஆலோசனை
அவர்களுடைய அணுகுமுறையைக் காட்டுவதாகவே இருக்கிறது.
வரலாற்றைத் திருத்தி எழுத யோகி ஆதித்யநாத் விரும்பினார் என்றாலும், சூழ்நிலைகள் அவருடைய
யோசனைகளைக் கைவிடுவதற்கு அவரைக் கட்டாயப்படுத்தின. கட்டாயத்தால் தாஜ்மஹால் போன்ற
முகலாய படைப்புகள் தொடர்ந்து இருக்க வேண்டிய துயரத்தை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனாலும் தாஜ்
அருகே அமைக்கப்பட்டிருக்கும் முகலாய அருங்காட்சியகத்தின் பெயரை, சிவாஜியின் பெயரைக் கொண்டு
அவர் மாற்றியமைத்தார்.

சிவாஜியின் தாய்மொழி மராத்தியாக இருக்கும் போது, அவுரங்கசீப் அவரை ஆக்ராவில் கைதியாக அடைத்து
வைத்தது மட்டுமே, அந்த இடத்துடனான அவருடைய ஒரே தொடர்பாக இருக்கும் போது சிவாஜியின் பெயர்
ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? (சிறையிலிருந்த சிவாஜி காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தோ அல்லது சில

தகவல்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல, இனிப்புகள் நிறைந்த பெரிய கூடைக்குள் ஒளிந்து கொண்டோ
அங்கிருந்து தப்பித்திருந்தார்).

வரலாற்றைத் திருத்தி எழுதுகின்ற யோசனைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவளித்து வருவதில்
ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை. ‘நமது வரலாற்றை எழுதுவது நமது பொறுப்பு’ என்று அவர்
கூறியிருக்கிறார்.
அது உண்மையில் மிகச் சிறந்த கொள்கையாகும். ஆனாலும் ‘நமது வரலாற்றை எழுதுவது’ என்பது
பொதுவாக ‘நமது கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுதுவது’ என்பதாகவே இருக்கின்றது. குஜராத்தின்
வரலாற்றையும், 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பையும் அமித் ஷா எழுதுவதாகக் கற்பனை செய்து
பாருங்கள். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான பாடத்திட்டங்களுக்காக இந்திய வரலாறு குறித்த பாடப்
புத்தகங்களை மோடி அரசு எழுதுவதைக் கற்பனை செய்து பாருங்கள்.

அப்படி நடக்குமென்றால், வரலாற்றில் அது ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை. நாஜி ஐரோப்பாவில்
நடந்த யூதர்களின் ஒட்டுமொத்த இனப்படுகொலை, ஜெர்மனியின் நவீன வரலாற்றுப் புத்தகங்களிலே
தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஜப்பானியக் கொடுமைகள் வரலாற்றில் தனக்கென்று தனி
அத்தியாயத்தை உருவாக்கின. இந்தியர்கள் மற்றும் பிற நேசநாடுகளின் கைதிகளை நரமாமிசமாக
ஜப்பானியர்கள் உண்டதற்கான ஆதாரங்களை ஜப்பானிய வரலாற்றாசிரியர் தனகா கண்டறிந்தது ஜப்பானிய
பாடப்புத்தகங்களில் இடம்பெற முடியவில்லை.
உணர்ச்சி வெறியர்களின் பிடியிலிருந்து இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதே இப்போது உண்மையில்
தேவைப்படுகின்றது. குறுகிய எண்ணம் கொண்ட ஹிந்துத்துவத் திட்டத்துடன் ஆதித்யநாத்தும் அமித் ஷாவும்
வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, சிந்து நதி, தென்னிந்தியாவின் விவசாய சமூகங்கள் என்று வாழ்வு
குறித்த ஆற்றல்மிக்க கருத்தாக்கத்தை இந்தியக் கலாச்சாரம் நிறுவியிருந்தது.

கி.மு.நான்காம் நூற்றாண்டின் முடிவிலேயே இந்தியாவில் நன்கு வளர்ந்த நாகரிகம் முழுமையாக
மலர்ந்திருந்தது. அந்த நாகரிகம்தான் பின்னர் அரசியல் ஆதாயங்களுக்காக தங்களுடைய வகுப்புவாத
திட்டங்களைப் பரப்ப விரும்பியவர்களால் தவறாகத் திரிக்கப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டது.
பௌத்தம், சமணம், ஹிந்து மதம், சீக்கியம் மற்றும் பல வழிகளிலான பல கலாச்சாரங்களின் பிறப்பிடமாக
இந்தியா இருந்து வருகின்றது. துவக்கத்தில் அவையனைத்தும் வாழ்க்கை குறித்த தத்துவ விளக்கங்களாகவே
இருந்தன. பின்னால் வந்த அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெறுகின்ற நோக்கத்திற்காக அவற்றை
மதரீதியான தளங்களாக மாற்றினர். இப்போது அவர்கள் வென்றிருப்பதாகவே தெரிகின்றது. மதிப்புமிக்க
விழுமியங்கள் கொண்ட இந்திய அமைப்புகளுக்கு ஏற்படுகின்ற இழப்பு நிரந்தரமாகவே இருக்கப்
போகின்றது.

நன்றி: https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2020/oct/25/uncultured-way-of-

தமிழில்: சந்திரகுரு