tamilnadu

img

உத்தேச மின்இணைப்பு கட்டண உயர்வுகளை கைவிட சிபிஎம் முன்வைக்கும் ஆலோசனைகள்

  •  2019ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழக மின்வாரியம் ரூ.7,860 கோடி நஷ்டத்தில் இயங்குவதாகவும் அது இந்த ஆண்டு இறுதியில் ரூ.13,350 கோடியாக உயரும் என்றும் இந்த வருவாய் இடைவெளியை ஈடுசெய்ய ரூ.20,000/ கோடி அளவு மின்கட்டணத்தை உயர்த்த உள்ளதாகவும் செய்திகள் நாளிதழில் வெளிவந்த போது உத்தேசித்துள்ள மின்கட்டண உயர்வால் பல பாதிப்புகள் உருவாகும் என்பதால் உயர்த்தவுள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தது.
  • மின்துறை அமைச்சர், இந்த செய்தி பரிமாற்றங்களுக்கு இடையில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வுகள் ஏதும் இருக்காது என உறுதிபட அறிவித்தது செய்திகளாக வெளிவந்தன. இவையாவும் ஏப்ரல், மே மாதங்களில் வெளிவந்த செய்திகளாகும்.
  • இவைகளுக்கிடையில் 13.09.2019 அன்று தமிழக மின்வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதை எதிர்கொள்ள புதிய மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம் ஆகிய கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது வியப்பாக உள்ளது.
  • ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்த அறிவிப்பால் மின்சார இணைப்புக்கான பதிவு கட்டணம் ரூ.50/ல் இருந்து ரூ. 400/ஆகவும்,
  • ஒரு முனை இணைப்புக்கான வைப்புத்தொகை  ரூ. 200/ல் இருந்து ரூ. 1,000/ஆகவும்,
  • மும்முனை இணைப்புக்கான வைப்புத் தொகை  ரூ. 600/ல் இருந்து ரூ. 1.800/ஆகவும்,
  • தொழிற்சாலை குறைந்த மின் இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ. 600/ ல் இருந்து  ரூ. 2000/ ஆகவும்,
  • அதிக மின் இணைப்புக்கான வைப்புத் தொகை  ரூ. 800/ல் இருந்து ரூ.3,100 ஆகவும்,
  • மின் இணைப்பு வழங்குவதற்கு இடத்தை ஆய்வு செய்ய இதுவரை கட்டணம் ஏதும் கிடையாது.  உத்தேசித்துள்ளதில் ஒரு முனை இணைப்புக்கு ரூ. 580/ ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 1520/ கட்டண உயர்வாகவும் 
  • வீதப்படி மாற்றம் ரூ. 185/ என்பது ரூ. 1000/ ஆகவும்,
  • மின் கட்டணம் செலுத்த முடியாமல் போனால் அபராத தொகை ரூ. 60/ என்பதை ஒரு முனை இணைப்புக்கு ரூ. 650/ ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 750/ ஆகவும்,
  • காசோலை திரும்ப பெறப்பட்டால் ரூபாய் 300/ கட்டண செலவாக உள்ளதை குறைந்தபட்சம் ரூ. 250/ மற்றும் மின் கட்டண தொகையில் 5 சதவீதம் என உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கண்டவை போன்ற இணைப்புக் கட்டண உயர்வுகளை மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்த உத்தேசித்துள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ. 1500/ கோடியை வருவாய் உயர்வாக வர வாய்ப்புள்ளதாக ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதே உத்தியைத் தான் 2010ஆம் ஆண்டும் கடைப்பிடித்து பல ஆயிரம் கோடி ரூபாயை மின் நுகர்வோர்களிடம் வசூலித்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

  • ஓர் ஆண்டுக்கு 6 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை புதிய மின் நுகர்வோர்கள் மின் வாரியத்தோடு இணைய உள்ளார்கள் என்பதை பார்க்கும் போது வாரியம் அபரிமிதமாக நிர்ணயிக்கும் மின் இணைப்புக் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், மீட்டர் காப்புக் கட்டணம், வைப்புத் தொகைக் கட்டணம் போன்றவை வசதி உள்ளவர்களுக்கே மின்சாரம் வசதி; இல்லாதவர்கள் மின்சாரத்தை நுகரவே முடியாத நிலையை ஆளும் அரசுகள் உருவாக்கி வருகின்றன. இது மின்சாரத்தை சந்தைமயமாக்கும் செயலாகும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
  • மின் இணைப்புக் கட்டண உயர்வுக்கு அரசு கூறும் காரணங்கள் வார்தா, கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள சில ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகி உள்ளது.  இவைகளை ஈடுசெய்யவே இணைப்புக் கட்டண உயர்வு என கூறுகின்றன.  இயற்கைப் பேரிடர்கள் எப்போதோ ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி. அதை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளிக்க வேண்டுமே தவிர பருவகாலங்களில் ஏற்படும் செலவுகளுக்கு, நிரந்தர ஆதாரமாக உள்ள மின்கட்டண உயர்வு என்பதை கையாள்வது சரியல்ல, இயற்கைப் பேரிடர்களுக்கு ஏற்படுகின்ற செலவுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டுமே தவிர கட்டண உயர்வாக அறிவிப்பது என்பதும் ஏற்புடைய ஒன்றல்ல.
  • மின் விநியோக கட்டமைப்பில் ஏற்படுகின்ற நிதி இழப்பீடுகளை மாநில அரசே எதிர்கொள்ள வேண்டும் என்று உதய் திட்டத்தில் கையொப்பம் இட்ட தமிழக அரசு மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட நிதி இழப்பீட்டை சரிசெய்ய கட்டண உயர்வு முறையை கையாள்வது ஏற்கத் தக்கதல்ல.
  • அரசு உத்தேசித்துள்ள மின் இணைப்புக் கட்டண உயர்வால் மின் வாரியத்திற்கு ரூ. 1500/ கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று சொல்வதும் தமிழக அரசு காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்ய சர்வதேச அளவில் இல்லாத பேங்கிங் சிஸ்டத்தை கையாள்வதின் மூலமாக  மின்வாரியத்திற்கு வருடத்திற்கு ரூ. 800/ கோடி இழப்பீடு ஏற்படுகிறது. இந்த பேங்கிங் முறையை கை விட்டாலே மின்சார வாரியத்திற்கு வருடத்திற்கு ரூ. 800/ கோடி மீதமாக வாய்ப்புள்ளது.
  • காற்றாலை மின்சாரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ஒரு அலகிற்கு ரூ. 3.39/ பைசாவாகும்.  ஆனால் தற்போது காற்றாலை மின்சாரத்திற்கு ரூ. 2.50/ பைசா என்று குறைந்துவிட்ட பிறகும் ஏற்கனவே நிர்ணயித்த கட்டணமாக ரூ. 3.39 பைசா கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதால் பல கோடிரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது. இதை மாற்றியமைப்பதன் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க வாய்ப்புள்ளது.
  • சூரிய ஒளி மூலம் அதானி நிறுவனத்திடமிருந்து மின்சாரம் பெறுவதற்கு ஒரு அலகு ரூ. 7.01/ பைசா என்று ஒப்பந்தம் காணப்பட்டது பல்வேறு காரணங்களால் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செலவு ரூ. 2.50/ பைசாவாக குறைக்கப்பட்ட பிறகும் அதானி நிறுவனத்திடம் இருந்து பெறும் மின்சாரத்திற்கு ரூ. 7.01 பைசா மற்றும் ரூ. 5.40/ பைசாவை அளித்து மின்சாரத்தை வாங்குவதால் பல கோடி ரூபாய் அதானியின் கொள்ளைக்கு வழி வகுத்துள்ளது.  இதை மாற்றுகின்ற விதமாக அதானியோடு செய்து கொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தை மாற்றி அமைப்பதன் மூலமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பீட்டை தடுக்க முடியும்.
  • அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் போடப்பட்ட பழைய கொள்முதல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மின் கொள்முதல் விலையை  குறைக்கக் கூடிய வகையில் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
  • உச்சக்கட்ட மின் தேவை நேரங்களில் நமது அனல்மின் நிலையங்களின் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்திவிட்டு மின்சார கொள்முதல் சந்தையில் மின்சாரத்தை வாங்குவதினால் ஆண்டுக்கு சுமார் ரூ.  750/ கோடி மின்வாரியத்திற்கு கூடுதல் செலவாகிறது.
  • காற்றாலை மின்சாரக் கொள்முதலில் உள்ள பேங்கிங் சிஸ்டத்தை மாற்றியமைப்பதன் மூலம் உச்சகட்ட மின் தேவையின் போது நமது மின் நிலையங்களை முழுவதுமாக இயங்கச் செய்வதன் மூலமாகவே தற்போது உத்தேசித்துள்ள ஆண்டுக்கு ரூ. 1500/ கோடி மின் இணைப்பு கட்டண உயர்வை தவிர்த்திட முடியும் என்பதை அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறோம்.
  • மின்வாரியத்திற்கு தேவையான நிதியை தற்போது அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் இருந்து 9 சதவீதமான வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதை கைவிட்டு தமிழ்நாடு கட்டமைப்பு மற்றும் நிதி மேலாண்மை கழகத்திடமிருந்து 12 சதவீதத்திற்கு கடன் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் வாங்கினால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பீட்டிற்கு வழி வகுக்கும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
  • விலைவாசி உயர்வு, போதுமான மழையின்மை, மின்வெட்டு, தரமான மின்சாரம் கிடைக்காதது ஆகிய காரணங்களால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சூழ்நிலையில் புதிய மின் இணைப்பு தருவதற்கான கட்டணங்களை அபரிமிதமாக உயர்த்துவதன் மூலம் புதிய மின் நுகர்வோர்கள் மின்வாரியத்தில் இணைவது என்பது மிகவும் குறைய வாய்ப்புள்ளது.
  • வாரியத்திற்கும் ஏற்படும் நிதி இடைவெளியை மேலே சொல்லப்பட்டவைகளை முறையாக கையாள்வதன் மூலம் ஏற்படும் நிதி இடைவெளியை குறைக்க முடியும் என்று சொல்லி, இவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
;