tamilnadu

img

புதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கொரோனா: முதியவர் பலி

புதுச்சேரி:
புதுச்சேரியில் சனிக்கிழமையன்று (ஜூலை 11)  புதிதாக 64 பேருக்குக் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரு முதியவர் உயிரிழந்தார். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,300 
ஆகவும், இறப்பு எண்ணிக்கை 18 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்  கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் சனிக்கிழமையன்று 870 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 64 பேருக்கு (7.5 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 39 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 9 பேர் ஜிப்மரிலும், 10 பேர் காரைக்காலிலும், 5 பேர் ஏனாமிலும், ஒருவர் மாஹேவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ரெயின்போ நகரைச் சேர்ந்த 74 வயது ஆண் நபர் சளி, இருமல், மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக கடந்த 9 ஆம் தேதி மாலை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் அன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்குத் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.அவருக்கு நீரிழிவு நோய் அல்லது ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்தவிதமான பாதிப்பும் இல்லை. நோய் முற்றியதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை 22 பேர், ஜிப்மரில் 18 பேர், கோவிட் கேர் சென்டரில் 11 பேர், காரைக்காலில் 2 பேர் என 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 389 பேர், ஜிப்மரில் 107 பேர், கோவிட் கேர் சென்டரில் 62 பேர், காரைக்காலில் 43 பேர், ஏனாமில் 25 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 24 ஆயிரத்து 485 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 22 ஆயிரத்து 819 பரிசோதனைகள் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இன்னும் 282 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன” எனத் தெரிவித்தார்.

;