கூலிக்கு ஒப்பாரி வைக்க
இழவு வீட்டுக்கு போன திருட்டு கூட்டம் …..
பாட்டிலேயே பக்குவமாய் பரிமாரி ……
பந்தலிலே கிடந்த பாவைக்காய்களை
குறிவைத்து திருடிச் சென்ற கதையை ….
நெடுங்காலமாய் சொல்லி வந்த நமக்கு …..
இன்று அது நிஜக்கதையாய்,
கண்முன்னே தெரிகிறது.
கொரோனா …. கொரோனா என்று
எண்திசையும் கலகலத்து கிடக்கும் காலம்.
அது ஆயிரம் …. பல்லாயிரமாய்
பல்கி பெருகிக் கொண்டிருக்கும் நேரம்.
மரணத்தின் குறியீட்டுக் கோடுகள்
உயர்ந்து கொண்டே போகும் போது
ஊரடங்கு சங்கு ஊதி எங்கும் நிசப்தம்.
வேலையில்லை… கூலியில்லை …
உபதேசத்துக்கு மட்டும் பஞ்சமேயில்லை
என வாழ்வே அழிந்து கிடக்கிறது ….
நிலைகுலைந்து நிற்கிறது.
சமூகத்தின் நிலையறியா …..
சக மனிதன் துயரறியா ….
உழைப்பின் மதிப்பறியா …..
உண்மை எனும் ஒளியறியா ……..
மனுதர்ம திமிர் கூட்டம்….
திடீர்-திடீர் அறிவிப்புகளை செய்து
சாமானியரை சாகடித்து கொண்டிருக்கிறது.
மூச்சுக்கு மூச்சு பேச்சான ஒரே நாடு ….
ஒரே காலில் திக்கற்று …. திசையற்று ….
நடந்தே சாகின்றார் …. ரயிலேறி சாகின்றார்…
சாலைகளில், வீதிகளில்
விழுந்தே சாகின்றார் எம் சகோதரர்கள்.
புலம் பெயர்ந்தோரின் சவக்காடாய் மாறிவிட்ட
இந்திய இழவு வீட்டில்….. இதுதான் சமயமென….
குரூர கூட்டம்…… கார்ப்பரேட்டுகளுக்காய் கூவும் கூட்டம்.
நெஞ்சிலே ஈரமின்றி கிஞ்சித்தும் இரக்கமின்றி
கூலிக்கு மாரடித்து….. கூவுகின்ற சாக்கினிலே …..
ஏழு பத்து ஆண்டுகளாய் ….
உதிரமும்…. உழைப்பும் சிந்தி
உருவாக்கி வைத்திருந்த …..
ஈடில்லா செல்வங்களை,
பொதுத்துறை சொத்துக்களை
அள்ளிக்கோ…. பறித்துக்கோ …..
அத்தனையும் எடுத்துக்கோ என
கூவிக் கூவி விற்கிறது.
தேசத்தின் துகில் உரிகிறது.
எழுக என் தோழனே … திண்தோள் மறவனே …..
தட்டியெழுப்பு சக மனிதனையும்.
மேதினத்தின் ஆன்மாவையே பறிக்க
பாரதத்தின் மண்ணிலிருந்து அப்புறப்படுத்த
அணி சேர்ந்திடு ……. அலையாய் புறப்படு ……
கொரோனாவையும் வெல்வோம்
குறுமதியாளரையும் வெல்வோம்.