ஆளுநர் வருகை தந்த பாரதியார் பல்கலை. முன்பு போராட்டம்
கோவை, டிச. 18 – மக்களை பிளவுபடுத்தி,நாட்டை மத வெறிக்காடாக மாற்ற முயலும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரும்பப் பெறக்கோரியும் தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்தும் வடகிழக்கு மாநிலங்கள், தில்லி, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், தமிழ்நாடு, கேரளா உள்பட நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள்,மக்களின் எழுச்சிப் போராட்டம் புதனன்றும் தொடர்ந்தது. தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி மற்றும் கோவை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ள னர். கோவையில் புதனன்று பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழகம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பங்கேற்க வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு முன்பு ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் மாண வர்கள் கூறுகையில், மத்திய அரசின் கவனத்திற்கு எங்களது கோரிக்கைகள் செல்ல வேண்டும் என்பதற்காக ஆளுநர் வருகையின் போது இந்த போராட்டம் நடத்தப்படுவதாக ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
கோவை அவிநாசி சாலை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதனன்று வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், தில்லி காவல்துறை யினருக்கு எதிராகவும் பறை இசைத்தும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
144 தடை உத்தரவு
தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்து ள்ளன. இதனால் முக்கிய நகரங்களில் பாது காப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தில்லியில் போராட்டம் நடைபெற்ற வடகிழக்கு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.