tamilnadu

img

கார்ப்பரேட்டுகளுக்கு நன்றிக்கடன் செலுத்திய மோடி 2 அரசின் பட்ஜெட்

புதுதில்லி:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள மோடி-2 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட், தேர்தலில் தங்களுக்கு நிதி அளித்த அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ள ஒரு பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மோடி-2 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள விமர்சன அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பட்ஜெட் மற்றும் அது தொடர்பாக அளித்துள்ள உரை அனைத்திலுமே தங்களுக்கு உதவிய பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்திலேயே எண்ணற்ற உறுதிமொழிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கார்ப்பரேட்டுகளின் பிடி, இந்திய நாட்டின் பொருளா தாரத்தின்மீது மேலும் இறுகும். சர்வதேச நிதிச் சந்தைகளுடன் இந்தியப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைவு மேலும் வலுப்படும். இந்த பட்ஜெட்டில் இந்திய உழைக்கும் மக்களுக்கு – தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் – எதுவுமே இல்லை.  தங்களின் வேலை வாய்ப்புகளும், வாழ்வாதாரங்களும் சுருங்கி வரும் நிலையில் அவற்றிலிருந்து விடுபடு வதற்கான திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாமல் அவர்கள் தங்களைத் தாங்களே எப்படியாவது காப்பாற்றிக்கொள்ளும் விதத்தில் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறார்கள்.

நிதி அமைச்சரின் உரை, கார்ப்பரேட் ஆதரவு ‘சீர்திருத்தங்கள்’ எண்ணற்றவற்றைப் பட்டியலிட்டிருக்கிறது. (ஓய்வூதியத்துறை உட்பட) இந்தியப் பொருளாதாரமும்,  அந்நிய நிதிமூலதனங்களின் நேரடி முதலீட்டுக்காக மேலும் விரிவான முறையில் திறந்து விடப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை, ரயில்வேதுறை, மெட்ரோ வளர்ச்சி போன்றவை மட்டுமல்ல, சமூக நலத் திட்டங்களும்கூட ‘சோஷியல் ஸ்டாக் எக்சேஞ்ச்’ (‘Social Stock Exchange’) என்ற பெயரிலும் ‘பிபிபி’ 
என்கிற அரசு-தனியார் பங்கேற்பு (PPP) என்கிற மாடலின்கீழ் தனியாரிடம் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

திக்கற்ற நிலையில் விவசாயிகள்
மிகவும் திக்கற்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ள, இந்திய விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது குறித்தோ அவர்களுக்குக் கடன் நிவாரணம் அளிப்பது குறித்தோ எதுவுமே கூறப்படவில்லை.  தொழிலாளர்களுக்கு, ‘சீர்திருத்தம்’ என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்கள் மேலும் மோசமான முறையில் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

கள்ள மவுனம்
நிதி அமைச்சர் இவ்வாறாக ஏராளமாகப் பேசியுள்ள அதே சமயத்தில், பட்ஜெட்டில் வழக்கமாக அளிக்கப்பட வேண்டிய  மத்திய அரசாங்கத்தின் 2019-20ஆம் ஆண்டுக்கு வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கை கள் குறித்தும், செலவினங்கள் குறித்தும் உண்மையான விவரங்கள் எதுவும் முழுமையாகக் கூறப்படவில்லை. நாட்டின் பொருளா தாரம் மிகவும் கடுமையாக இருக்கிறது என்று அனைவருக்குமே தெரியும். எனினும் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மந்தம், விவசாய நெருக்கடி நிலை, தொழில்கள் ஸ்தம்பித்த நிலையில் இருப்பது மற்றும் வேலையின்மை (joblessness) முதலியவை குறித்து பட்ஜெட்  முற்றிலுமாக மவுனம் சாதித்திருக்கிறது.

உண்மைக்கு மாறான கணக்குகள்
அதுமட்டுமல்ல, 2018-19ஆம் ஆண்டில் அரசுக்கு வரப்பெற்றுள்ள வருவாய் மற்றும் அரசின் செலவினங்கள் தொடர்பான உண்மை யான விவரங்கள் அரசுக்குத் தற்சமயம் தெரிந்துள்ளபோதிலும் அவற்றைக்கூட இந்த பட்ஜெட்டில் வெளிப்படுத்திட நிதியமைச்சர் முன்வரவில்லை. அதற்குப் பதிலாக, பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இருந்த திருத்திய மதிப்பீடுகளே இப்போதும் இறுதி பட்ஜெட்டிலும் அப்படியே தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள்
கூறிய பட்ஜெட் மதிப்பீடுகளை விடவும், இடைக்கால பட்ஜெட்டின்போது திருத்தப்பட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும்,  உண்மையாக அரசுக்கு வந்த வருவாயும், செலவினங்களும் குறைவாக இருந்ததால் அதனை மூடி மறைப்பதற்காகவே வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பட்ஜெட் கணக்குகளையே மிகவும் சூழ்ச்சித் திறனுடன் கையாண்டிருப்பது, 2019-20ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளவை தொடர்பான நம்பகத்தன்மையைக் குறைப்பதற்கும் தேவைப்படின் அந்த சமயத்தில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்குமே உதவிடும்.   

வரிவசூலில் படுதோல்வி
2019-20ஆம் ஆண்டுக்காக மத்திய வரிகளிலிருந்து வரப்பெறும் மொத்த வரு வாய் குறித்த மதிப்பீடுகள் இடைக்கால பட்ஜெட்டின்போது கூறப்பட்டதைவிட கிட்டத்தட்ட 91 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் பொருள், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரியில் சுமார் 98 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், வருமான வரியில்51 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும் மதிப்பிடப்பட்ட தொகையில் வசூலிக்கப் படாமல் குறைந்திருக்கிறது. வரிவசூலிக்கும் முறையில் இவர்கள் படுதோல்வி அடைந்திருப்பதையே இது காட்டுகிறது.இந்த பட்ஜெட்டில் மிகவும் அதிர்ச்சி யளிக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், வரிவசூலிப்பு முறையின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கண்டு அவற்றைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அரசுக்குத் தேவையான நிதியை நேரடி வரி மூலமாக அதிகரிப்ப தற்குப் பதிலாக, (அரிதிலும் அரிதான அளவில்
ஒருசில நடவடிக்கைகளே கூறப்பட்டிருக் கின்றன) நிதி அமைச்சர், கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி யிருப்பதாகும். அதேசமயத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் கூடுதல் கலால் வரி மற்றும் செஸ்வரி விதித்து, சாமானிய மக்கள்மீது சுமையினை ஏற்றுவதற்கு அவர் தயங்கவில்லை.

பொதுத்துறையை காவு கொடுக்கும் பயங்கரம்
மேலும் அரசுக்கு வருவாயைப் பெருக்கிட அரசாங்கம் தேர்வு செய்திருக்கும் மற்றுமொரு நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பதாகும். ஒரு பக்கத்தில், சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கள் ஈட்டியுள்ள லாபத்தில் கணிசமான தொகையைக் கறந்திடவும் அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கறந்திடும் தொகை ரூ.1.36 லட்சம் ரூபாய் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. அது இப்போது இந்த பொது பட்ஜெட்டில் 1.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டி ருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும்கூட இவர்களின் செலவினங்கள் தொடர்பாகக் கூறியுள்ள விவரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி)யின் விகித அளவே இருக்கிறது.மக்களுக்காக செலவிடும் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் மிகவும் சொற்பமாகவே தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

பெண்கள், தலித்துகளுக்கு அநீதி
பெண் நிதி அமைச்சர் அளித்துள்ள முதல் பட்ஜெட்டில் பெண்களுக்காக ஒதுக்கிவந்த தொகை என்பது 5.1 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட நிர்பயா நிதிக்குக்கூட எவ்வித உயர்வும் கிடையாது.தலித்/பழங்குடியினருக்கான நலத்திட்டங் களுக்குப் பெயரளவில் சற்றே உயர்வு காணப்படுகிறது. அவர்களின் மக்கள்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாக இருக்கும் நிலை தொடர்கிறது. தலித்துகளுக்கான நலத்திட்டங்களுக்கு 2.9 சதவீதமும், பழங்குடியினருக்கான நலத்திட்டங்களுக்கு 1.9 சதவீதமும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கான ஒட்டுமொத்த திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் ஈராயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

‘தூய்மை இந்தியா’ கூட அம்பேல்
சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமுமில்லை. வேலையின்மை மிகவும் அதிகரித்திருப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தர வாதச் சட்டத்தின் கீழான ஒதுக்கீட்டில் சென்ற  ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகையுடன் ஒப்பிடுகையில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் முதல் படாடோபத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்திற்கான பட்ஜெட் தொகையும் சுமார் 4,500 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது.2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாட்டின் உண்மையான பொருளா தார நிலையைப் பிரதிபலித்திட முற்றிலுமாக மறுத்திருப்பதையே பிரதிபலிக்கிறது. இவர்கள் கூறும் தனியார் மூலதனத்தின் மூலமான வளர்ச்சித் திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கோ, அல்லது நாட்டிலுள்ள விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்கோ உதவிடாது. எனவே, இந்த பட்ஜெட், நம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் மீது மேலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ள மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, வரவிருக்கும் காலங்களில் எண்ணற்ற போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும்.மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தக் கூடிய விதத்தில் கொள்கைகளைஉருவாக்கிட இந்த அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திட வேண்டும். அதற்காக நடைபெறும் போராட்டங்களில் நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.(ந.நி.)
 

;