tamilnadu

img

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம்...

புதுதில்லி:
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் 600 முன்னணி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மருத்து கண்டுபிடிக்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO)தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கார்ப்பரேட் சாமியார் ராம்தேவுக்கு சொந்தமான ‘பதஞ்சலி’ நிறுவனம், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.‘பதஞ்சலி ஆயுர்வேதா லிமிட்டெட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சிக்கு இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், “தாங்கள் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொண்டவர்கள், 5 முதல் 14 நாட்களில் 100 சதவிகிதம் குணமடைந்து இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

“கொரோனா தொற்று பரவ தொடங்கியதுமே நாங்கள் அதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியாளர்களை அமர்த்தினோம். முதலில் சிமுலேஷன் செய்யப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸை தாக்கி அழிக்கக் கூடிய காம்பவுண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு கொரோனா நோயாளிகளுக்கு பதஞ்சலி மருந்து கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், 80 சதவிகிதம் பேர் விரைவில் குணமடைந்து விட்டனர். சுமார் 1000 பேரை பதஞ்சலி மருந்து 100 சதவிகிதம் குணப்படுத்தி இருக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்து பலனளிக்கும் என்பதை நிச்சயமாக எங்களால் சொல்ல முடியும்” என்று ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.“வேதங்களைக் கவனமாகப் படித்து கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கி இருக்கிறோம். வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சூத்திரங்களை கடைப்பிடித்து முழுக்க முழுக்க ஆயுர்வேத பொருட்களை கொண்டு, ‘பதஞ்சலி’ விஞ்ஞானிகள் இரவு - பகல் பாராமல் உழைத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பதஞ்சலியின் ஆராய்ச்சிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆரம்பத்திலேயே அனுமதி மறுத்து விட்டது. எனினும், ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையின் மூலம் ‘பதஞ்சலி’ தானாகவே ‘ஆய்வுகளை’ நடத்தி வந்தது. இதற்கு மருத்துவ விஞ்ஞானிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன. “பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்கு, மக்கள் ஒன்றும் கினியா பன்றிகள் அல்ல!” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்-கும் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். 

இந்நிலையில், போலி ஆயுர்வேத மருந்துகளுக்குப் பெயர்போன ‘பதஞ்சலி’ நிறுவனம் கொரோனா தொற்றுக்கு ஒரு சில வாரங்களில் 100 சதவிகிதம் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்து, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இந்திய சுகாதாரத்துறையும், பதஞ்சலி நிறுவனத்தின் அறிவிப்பு குறித்து, இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.