tamilnadu

img

பீகார் பாஜக - ஜேடியு ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடி ஸ்ரீஜன் ஊழல்... ஐஏஎஸ் அதிகாரி உட்பட 59 பேர் மீது குற்றப்பத்திரிகை

புதுதில்லி:
ரூ. 2 ஆயிரம் கோடி தொடர்புடைய ஸ்ரீஜன் ஊழல் வழக்கில், பீகார்முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது சிபிஐகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.‘ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சமிதி’ என்னும் தொண்டு நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் பாகல்பூரில் மனோரமா தேவி என்பவரால் தொடரப்பட்டது. 2009 முதல்கிராமப்புறப் பெண்களுக்கு ஊறுகாய் செய்யப் பயிற்சி அளித்து  விற்பனை செய்து வந்தது. அத்துடன், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பெறாமலேயே, ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கட்சிகளின் செல்வாக்கில் கூட்டுறவு வங்கி ஒன்றை அமைத்து இயங்கி வந்தது. 

ஐஏஎஸ் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ராமையா பொதுமக்களின் வரிப்பணத்தை இந்த வங்கியில் செலுத்தியதுடன், தொண்டு நிறுவன வங்கியின் அலுவலகம் செயல்படவும் இடவசதியை அளித்தார். இதனால் பலரும் இந்த நிறுவனத்தை அரசு நிறுவனம் என்றே எண்ணத் துவங்கி பணத்தைப் போடத் தொடங்கினர்.நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி அரசும் மனோரமா தேவிக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது. ‘ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சமிதி’தொண்டு நிறுவன அலுவலகத்துக்கு, பாஜக தலைவரும், பீகார் துணை முதல்வருமான சுஷில் மோடி மற்றும்அமைச்சர் கிரிராஜ் உள்ளிட்ட பலரும்சென்று வந்தனர்.இந்நிலையில் பீகார் மாநில அரசுநிதியை, ஸ்ரீஜன் தொண்டு நிறுவனத்துக்கு அளித்ததாகப் புகார் எழுந்துஅந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப் பட்டது. இந்த வழக்கில்தான் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

இவர்களில் ராமையா, நிதிஷ் குமாருக்கு மிகவும் வேண்டியவர்.  ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவர் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரிடம் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;