tamilnadu

img

‘கீழடி நம் தாய்மடி’ சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சிகாகோ:
உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன் மையை நவீன வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்” என்னும் மைய ஆய்வுப் பொருளை முன்வைத்து, 2019ம் ஆண்டு, ஜூலை 3 முதல் 7ஆம் நாள் வரை 10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் நடைபெறுகிறது.இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ்ஆய்வுமன்றத்தின் துணையோடு வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடத்தப்படுகிறது. பொதுவாக, தமிழ் குறித்து செய்யப்படும் ஆய்வுகளை பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் மேற்கொள்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்தும் அறிஞர் பெருமக்கள் பங்கு கொள்ளும் இந்த மாநாட்டில் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதி களில் “கீழடி நம் தாய்மடி” என்னும் தலைப்பில் கீழடி குறித்த சிறப்பு அமர்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்யஅகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் உரையாற்றுகிறார். கீழடி அகழாய்வில் முக்கிய பங்காற்றிய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் காணொலி வாயிலாக பங்கேற்று பேசுகிறார்.

அதேபோல் ஜூலை 4ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களால் கொண்டாடப்பட்டு வரும் மாபெரும் காப்பியமான “வீரயுக நாயகன் வேள்பாரி” குறித்தசிறப்பு அமர்வு நடைபெறுகிறது. அதில்நூலின் ஆசிரியரும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எம்.பி., ஓவியர் மணியம் செல்வன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.ஜூலை 5ஆம் தேதி “நாளை தலைமை” என்னும் தலைப்பில் மொரிசியஸ், கனடா,அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பங்கேற்கும் பேரமர்வில் சு.வெங்கடேசன் எம்.பி., சிறப்புரை நிகழ்த்துகிறார்.உலகம் முழுவதும் இருந்து தமிழ் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிற 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தற்போதைய அரசியல் சூழலில் பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

;