கொச்சி, ஜுலை 3- கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலின் முடிவுகளில் இடது ஜனநாய முன்னணி (எல்டிஎப்) பெற்றுள்ள வெற்றி , ‘இறுதித் தீர்ப்பு’ எழுதக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) யின் மிக மோசமான ஆட்சி காலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெற்ற 17 இடங்களையே இப்போதும் அந்த முன்னணியால் பெற முடிந்துள்ளது. 2015இல் எல்டிஎப் வெற்றி பெற்ற 23 வார்டுகளில் 22 வார்டுகளை இப்போது எல்டிஎப் வென்று தனது ஆதரவு தளத்தை நிரூபித்துள்ளது. பாஜக – யுடிஎப் - பிடிஜேஎஸ் கூட்டு கோட்டயம் மாவட்டத்தில் ஒரு இடத்தை இடது ஜனநாயக முன்னணியிடமிருந்து கைப்பற்றியது. அதன் காரணமாக எல்டிஎப்க்கு ஒரு இடம் குறைந்தது. கேரளத்தில் மக்களவைத் தேர்தலில் எல்டிஎப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்து 70 நாட்களில் நடந்த இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி இடது ஜனநாயக முன்னணி ஊழியர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. மக்களவை தேர்தலின்போது மிகவும் பின்தங்கி விட்ட பல வார்டுகளிலும் நல்ல முன்னேற்றத்துடன் தனது வெற்றியை எல்டிஎப் ஈட்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு பிந்தைய மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளவும் இம்முடிவு உதவியிருக்கிறது. 14 மாவட்டங்களைக் கொண்ட கேரளத்தின் 13 மாவட்டங்களில் இந்த தேர்தல்கள் நடந்தன. பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎப் அரசு தனது மூன்றாம் ஆண்டை நிறைவு செய்துள்ள பின்னணியில் இந்த வெற்றியை பெற முடிந்துள்ளது. யுடிஎப் ஆட்சியின் இதே காலகட்டத்தில் நடந்த தேர்தலில் அந்த அரசின் மீதான அதிருப்தியின் காரணமாக இடது ஜனநாயக முன்னணியால் பெரும் வெற்றி பெற முடிந்தது. இதுபோன்ற வெற்றியை இப்போதும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலையை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதியான ராணியில் உள்ள அங்ஙாடி பஞ்சாயத்து ஒன்றாம் வார்டு யுடிஎப்பிடமிமிருந்து எல்டிஎப்புக்கு கிடைத்துள்ளது. சபரிமலையின் பெயரால் கலவரங்கள் நடத்திய பாஜகவுக்கு வெறும் 9 ஓட்டுகள் மட்டுமே இங்கு கிடைத்தது. சபரிமலையின் பெயரால் மக்களவைத் தேர்தலின்போது தங்களை திசைதிருப்பியதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதை இது நிரூபித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் யுடிஎப் வரலாறு காணாத பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்குட்பட்ட மாந்தாடு வார்டை யுடிஎப்பிடமிருந்து 177 ஓட்டுகள் அதிகம் பெற்று எல்டிஎப் கைப்பற்றியது. ராகுல் காந்திக்கு 500க்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக அளித்த பகுதி இது. பினராயி ஆட்சிக்கு எதிரான மனநிலையோ யுடிஎப்புக்கு ஆதரவு அலையோ இங்கு காணப்படவில்லை.
இந்த தேர்தலில் பாஜகவால் ஓரிடத்தில்கூட குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை. மொத்தத்தில் ஒரு இடம் கூடுதலாக பெற்றது என்பது சேர்த்தலா நகரசபையில் யுடிஎப்பிடமிருந்து கைப்பற்றியதுதான். கண்ணூர் தர்மடம் பஞ்சாயத்து ஒன்பதாம் வார்டில் சென்றமுறை 211 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்ற பாஜக இம்முறை 58 ஓட்டுகளை மட்டுமே அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளது. காயம்குளம் நகரசபையில் எல்டிஎப் வென்ற வார்டில் பாஜக வெறும் 6 ஓட்டுகளையே பெற முடிந்துள்ளது. கோழிக்கோடு கொடுவள்ளி நகரசபைக்கு நடந்த தேர்தலில் எல்டிஎப் பெற்ற பெரும்பான்மை 263லிருந்து 306ஆக உயர்ந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் இங்கு யுடிஎப் முன்னிலை பெற்றிருந்தது. கேரளத்தில் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் இடதுசாரிகள் தகர்ந்து போவார்கள் என்று கூக்குரலிட்டவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் பதிலளித்துள்ளனர். கேரளத்தில் இடதுசாரிகளின் தோல்வி தற்காலிகமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்தது சரியானது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன.