tamilnadu

img

இந்தியாவின் கடன் ரூ. 82 லட்சம் கோடி..

புதுதில்லி:

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் உலக வங்கியில் இந்தியா வாங்கியிருக்கும் கடன் 82 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும், மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் மட்டும் 28 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் நிலை குறித்து, கடந்த 2010-11 முதல் மத்திய அரசு ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி அண்மையில் வெளியான அரசுக் கடன் பத்திரத்தின் 8-ஆவது பதிப்பில்தான், இந்த கடன் விவரங்கள் தெரிய வந்துள்ளன. அதுபற்றிய விவரங்கள் வருமாறு:


மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாக இருந்துள்ளது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளில், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்துள்ளது. 


அதாவது, நாடு விடுதலை அடைந்ததில் இருந்து, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியா பெற்ற மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி ஐந்தாண்டுகளில் மட்டும் 28 லட்சம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கியுள்ளார். இதன்மூலம் 48 லட்சம் கோடியாக இருந்த மொத்த கடன் மதிப்பு 73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொதுக் கடன் 51.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் சந்தைக் கடன் 47.5 சதவிகிதம் உயர்ந்து 52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.2014-ஆம் ஆண்டு இறுதியில் தங்கப் பத்திரங்கள் மீது எந்த ஒரு கடனும் இல்லாமல் இருந்தது. தங்கத்தை நாணயமாக்கல் திட்டத்தின் கடன் 9,089 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, தங்கத்தின் பெயரிலும் மோடி அரசு கடன் பெற்றுள்ளது.


அரசின் இந்தக் கடன்கள் எல்லாம் நடுத்தரக் காலச் சரிவுப் போக்கு மற்றும் நிதி பற்றாக்குறை என்பது ரிஸ்க் வாய்ந்தவையாக உள்ளது. இந்த கடன் அதிகரிப்பால் தற்போது நாட்டில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அரசின் பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த அறிக்கை முடிவுகள், செப்டம்பர் 2018 காலகட்டத்திற்கு உட்பட்டவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, 2016-ஆம் ஆண்டு மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்கமே, இந்தியாவின் கடன் அதிகரிப்புக்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர்தான் இந்தியாவின் பொருளாதாரம் மிக மிக மோசமான நிலையை அடைந்ததாகவும், இதையொட்டியே இந்தியா அதிக அளவில் கடன்களை வாங்கியிருக்கிறது என்பதும் அரசின் அறிக்கை மூலம் புலனாகியிருக்கிறது.


உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது கூட இந்திய அரசு இவ்வளவு கடன்களை வாங்கவில்லை, ஆனால் இப்போது அதிக கடன்களை இந்தியா வாங்கியிருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.நாட்டின் நடப்பு நிதிப்பற்றாக்குறை நவம்பர் வரையிலான 8 மாதங்களில் மட்டும் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது; இந்த பற்றாக்குறையானது, ஆண்டு வருவாயைக் காட்டிலும் ரூ. 6.24 லட்சம் கோடி அதிகம் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


;