tamilnadu

img

காரைக்காலில் 1000க்கும் மேற்பட்டோருக்கு காலரா: அவசரநிலை அறிவிப்பு  

காரைக்காலில் காலரா வேகமாக பரவி வருவதன் காரணமாக மாவட்டத்தில் பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.  

காரைக்கால் மாவட்டத்தில் சமீபகாலமாக மருத்துவமனைக்கு கடுமையான வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், குடிநீர் எடுக்கும் பகுதி, குடிநீர் தொட்டி மூலம் விநியோகிக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் செல்லும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த நிலையில், அது காலராவுக்கான அறிகுறியாக தெரிய வந்தது.  

இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் காலரா தொற்று அதிகரிப்பு காரணமாக பொது சுகாதார அவசரநிலையை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.  

புதுச்சேரியை சேர்ந்த சுகாதார குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் அனைத்து மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  

தொடர்ந்து, பொதுமக்களும் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுஇடங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்பான குடிநீரை உட்கொள்வதை உறுதி செய்யவும், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும், சரியாக கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும், பொதுக் கழிப்பிட வசதிகளை பயன்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும்,வ வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

;