புதுக்கோட்டை:
அதிமுக இரட்டைத் தலைமையில் ஆளுமையோடுதான் உள்ளது என்றார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன். தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசியது:
வலுவான ஓற்றைத் தலைமை கடந்த தேர்தல்களில் அதிமுக தோற்றது என்ற ராஜன்செல்லப்பாவின் கருத்துக்கு பதிலளித்த அவர், தற்போது உள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற இரட்டைத் தலைமை ஆளுமையோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ராஜன் செல்லப்பா கருத்து அவரது சொந்த கருத்து.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் தவறானது. சசிகலா ஜெயிலில் இருந்து வந்தால் அவரைச் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுமா என்ற கேள்விக்கு, சசிகலா, தினகரனைத் தவிர யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றார். தைல மரங்களிலால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வறட்சியை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளதே என்றதற்கு, இதுகுறித்து, ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்டும்.
வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை ஏற்படுத்தும் வகையில் அவை வசிக்கும் இடங்களில் உணவு பயிர்களை பயிரிடவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து சோலார் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, முதன்மைதலைமை வனப் பாதுகாப்பாளர் (சென்னை) டாக்டர்.பி.துரைராசு, தமிழ்நாடு வனத்தோட்ட கழக தலைவர் மற்றும் முதன்மை தலைமை வன பாதுகாப்பாளர் ரவிகாந்த் உபாதயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.