புதுக்கோட்டை, ஜூன் 24- வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை என்ற இணையத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும், இணைய வழி யாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” ‘Tamil nadu Private Joo Portal’ (www.tnprivatejoos.tn.gov.in) என்ற இணையதளம் 16.06.2020 முதல் செயல்படுகிறது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இவ்விணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணிடங்களை இவ்விணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து காலி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்கிறது.
வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவை, கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக் கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலைநாடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான அரிய சேவை உருவாக்கி தரப்பட்டுள்ளது. எனவே, இச்சேவையை வேலைநாடுநர்களும் மற்றும் வேலை அளிப்போர்களும் பயன்படுத்தி பயன்பெறலாம்.