புதுக்கோட்டை, ஆக.16- மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமுஎகச மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகளின் சார்பில் கல்வி உரிமைக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தேசிய கல்விக்கொ ள்கை எதிர்ப்பியக்க கூட்டு நடவடிக்கை குழு வட்டார ஒருங்கிணைப்பாளர் மா.குமரேசன் தலைமை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் மல்லிகா, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சாமிநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட நிர்வாகி முத்து, உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரத் தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிரு ஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணைத் தலைவர் கருப்பையா, மாநில செயற்குழு உறுப்பினர் பேச்சியம்மாள் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் ஆக.18-ல் புதுக்கோட்டையில் நடைபெறும் கல்வி உரிமை மாவட்ட மாநாட்டிலும், ஆக.23 அன்று திருச்சியில் நடைபெறும் மாநில சிறப்பு மாநாட்டிலும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர், அரசு ஊழியர், மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.