புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர்அளித்த பேட்டியின் போதுதெரிவித்தது:
தமிழகத்தில் போதுமான அளவில்கொரோனா பரிசோதனைக் கருவிகள் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்பொழுது அனைவருக்கும் இலவசமாக அரசின் சார்பில்தடுப்பூசி போடப்படும். காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக முதல்கட்டமாக ரூ.700 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டையில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டில் 50 மாணவர் சேர்க்கையுடன் கல்லூரி தொடங்கப்படும். மாவட்டத்தில் திருவப்பூர், கருவப்பிளான் கேட்ஆகிய இரண்டு இடங்களிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி மூலமாக இரண்டு தொழில்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில்ஒன்று இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 2700 பேர் வேலை வாய்ப்பைப் பெறும் இந்த தொழில் கூடத்தில் 85 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 54 கோடி ரூபாய் மதிப்பில் 272 ஏரிகள்குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப் பட்டுள்ளது.காவிரி கடைமடைப்பகுதி குறிப்பிட்ட காலத்தில் தூர்வாரப்பட்ட தால் டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் 23 லட்சம் மெட்ரிக்டன்னாக இருந்த நெல்கொள்முதல் இந்த ஆண்டு 32 லட்சம் மெட்ரிக்டன்னாக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்கருவிகள் வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.8.44 கோடி அளவில் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர்த் தேவைக்காக கூட்டுக்குடிநீர் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.