tamilnadu

அரசுப் பள்ளியில் 15 மாணவிகள் திடீர் மயக்கம்

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி வடக்குப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை 15 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. பள்ளியில் வழக்கம் போல் காலை தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற பிரேயர் கூட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்தும், அதற்கு அரசு மருத்துவனைகளில் கிடைக்கும் சிகிச்சைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ஒரு சில மாணவிகளுக்கு அடுத்தடுத்து மயக்கம் ஏற்பட்டது.  மயங்க நிலையில் காணப்பட்ட 15 மாணவிகளையும் வடகாடு அரசு சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அவர்களில், காய்ச்சல், தலைவலி அறிகுறி இருந்த 7 மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைத்தனர். மற்றவர்களுக்கு குறைபாடுகள் ஏதும் இல்லாததால் முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டனர்.   காய்ச்சலுக்கான அறிகுறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போது அச்சத்தில் இவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி மாணவிகளுக்கு வேறெந்த குறைபாடும் இல்லை என திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் தெரிவித்தார்.

;