tamilnadu

img

பாஜக - ஜேடியூ மோதல் முற்றியது

பாட்னா:
பீகார் மாநிலத்திற்கு வெளியே வெறெந்த மாநிலங்களிலும், பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.

அத்துடன், ராமர் கோயில், பொது சிவில் சட்டம் போன்றவற்றில் பாஜகவுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) - பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும், பாஜக-வைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி துணைமுதல்வராகவும் இருந்து வருகின்றனர். 
இருப்பினும் அண்மைக்காலமாக, பாஜக-வுக்கும் ஜேடியூ-வுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மத்திய அமைச்சர் பதவி ஒதுக்கீட்டில் இருகட்சிகளுக்குமான மோதல் தீவிரம் அடைந்தது. ஜேடியூ விற்கு ஒரு அமைச்சர் பதவி மட்டுமே தருவோம் என்று மோடி கூறிவிட்டதால், கடுப்படைந்த நிதிஷ் குமார், பீகார் அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, தனது கட்சியைச் சேர்ந்த 8 பேருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கினார். பாஜக-வினர் ஒருவருக்குக் கூட இடம் அளிக்கா மல் பதிலடி கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், பாஜக தலை வர்கள் நிதிஷ் குமாரை விமர்சிப்பதும், பதிலுக்கு நிதிஷ், பாஜக தலைவர்களை விமர்சிப்பதுமாக, மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இந்த பரபரப்பான சூழலிலேயே, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், ஞாயிற்றுக்கிழமை யன்று நடைபெற்றது. நிதிஷ்மார், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 
இதன் முடிவிலேயே, பாஜகவுடன் பீகாரைத் தவிர வெறெங்கும்  கூட்டணி இல்லை என்று ஐக்கிய ஜனதாதளத்தின் முதன்மைப் பொதுச்செயலாளர் கே.சி. தியாகி அறிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“மோடி அரசில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு அடையாள பிரதிநிதித்துவமாக ஒரு அமைச்சர் பதவி அளிப்பதாக கடந்த மே 29-ஆம் தேதி சந்திப்பின்போது, நிதிஷ் குமாரிடம் அமித் ஷா தெரிவித்தார். ஆனால், அடையாள பிரதிநிதித்துவம் தேவையில்லை என்று நிதிஷ் குமார் கூறிவிட்டார்.மறுநாள், பாஜக-வின் பீகார் மாநில பொறுப்பாளர் பூபேந்திர யாதவை நிதிஷ் குமாரிடம் அமித் ஷா அனுப்பிவைத்தார். அவரிடமும் அதே கருத்தை நிதிஷ் குமார் தெரிவித்துவிட்டார். அமித் ஷா தொலை பேசியில் தொடர்பு கொண்ட போதும், எங்களின் உறுதியான நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில், விகிதாச் சார பிரதிநிதித்துவம் அளிக்க பாஜக முன்வந்தாலும் நாங்கள் அரசில் சேர மாட்டோம்.பீகாரில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். பீகாருக்கு வெளியே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம் பெறாது. ஜார்க்கண்ட், காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஐக்கிய ஜனதாதளம் தனித்து போட்டியிடும். 
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்க முயன்றால், அதை ஐக்கிய ஜனதாதளம் கடுமையாக எதிர்க்கும் இந்த நிலைப் பாட்டை நிதிஷ் குமார் ஏற்கெனவே பல தடவை கூறியுள்ளார்.

அதுபோல், ராமர் கோவில் விவகாரம்,பொது சிவில் சட்டம் ஆகிய பிரச்சனைகளிலும் சமரசம் செய்து கொள்ளமாட் டோம். அயோத்தி பிரச்சனையை நீதி மன்றம் மூலமாகவோ அல்லது கருத்து ஒற்றுமை அடிப்படையிலோ மட்டுமே தீர்க்க வேண்டும். இவ்வாறு கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.இதன்மூலம் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக மோதல் முற்றிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

;