tamilnadu

img

மோடி அமித்ஷா மீது நிதிஷ் குமார் கடுப்பு!

புதுதில்லி:
பீகாரில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி பெரும் வெற்றிபெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39-ஐ பாஜக கூட்டணி கைப்பற்றியது. பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16, லோக் ஜன சக்தி 6 இடங்களைக் கைப்பற்றின. 

இதனைத் தொடர்ந்து லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று விட்டார். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறவில்லை. வியாழனன்று நடைபெற்ற விழாவில், ஐக்கிய ஜனதாளம் சார்பிலும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவருக்குக் கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதனிடையே, 16 இடங்களில் வென்றுள்ள தங்களுக்கு 2 அமைச்சர் பதவி வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம் கேட்டதாகவும், ஆனால், ஒரு அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று அமித்ஷா திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும், இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, முழுமையாகவே அமைச்சர் பதவி வேண்டாம் என்று நிதிஷ் குமார் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியை நிதிஷ் குமாரும் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

“6 இடங்களை வென்ற ராம்விலாஸ் பஸ்வானின் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, 16 இடங்களில் வென்ற எங்களுக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் பாஜகவோ, அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது ஒரு சம்பிரதாயம்தான் என விளக்கம் அளித்தது. நாங்கள் சம்பிராதயமாக அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை. அதனால் ஒரு அமைச்சர் பதவி என்பதை நிராகரித்திருக்கிறோம்” என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.