tamilnadu

img

வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்

எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை, அக். 21- வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை   எஸ்.ஐ முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சங்கத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மங்கலம் ரோட்டில் உள்ள கேவிஆர் நகரில் பொதுமக்கள் தங்களது நகைகளை அங்கே இருக்கக்கூடிய தனியார் நகை அடகுக் கடையில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 20 அன்று மதியம் சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவன பங்குதாரர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து  மக்கள் தங்கள் நகையை பறிகொடுத்து விட்டோமே என ஆயிரக்கணக்கில் சம்பந்தப்பட்ட நகைக்கடை முன்பு கூடியுள்ளனர். இதனால் நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரின் நகைகளையும் கட்டாயம் திருப்பித் தருகிறோம் என்று கூறியுள்ளனர். மக்கள் தங்களது நகைகளை வாங்குவதற்கு அலைமோதிக் கொண்டிருந்தனர். சம்பந்தப்பட்ட பொது மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஞானசேகர்  உதவியுள்ளார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த கேவிஆர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், முழு விவரம் விசாரிக்காமல், கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தோழர் ஞானசேகரை கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று காவல் நிலையத்தில் வைத்தும் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

சம்பவம் அறிந்து வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் காவல் நிலையம் சென்றதும் வழக்கம் போல காவல்துறை வருத்தம் தெரிவித்துவிட்டு தோழரை அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து மக்கள் நலனுக்காக போராடக்கூடிய இதுபோன்ற இயக்கங்கள் மீதும், தலைவர்கள் மீதும் முதலில் சமூக விரோதியிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து கொள்வதும் பிறகு தப்பித்துக் கொள்வதும் காவல்துறையின் வழக்கமாக உள்ளது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. சம்பந்தப்பட்ட கேவிஆர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மீது தமிழக அரசாங்கமும் காவல்துறையும் துறை ரீதியான  நடவடிக்கை எடுத்திடவும், அடகு வைத்த பொதுமக்களின் நகையை மீட்டுத்தரவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் , மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

;