tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

பள்ளிப்பாளையம் வேலுச்சாமி

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் விசைத்தறிகள் நிறைந்த பகுதி. இப்பகுதியில் தொழிலாளர்கள் கொத்தடிமை களாக வைத்து வேலைவாங்கப்பட்டனர். 14 மணி நேரம் வரை கடுமையான சுரண்ட லுக்கு உட்படுத்தப்பட்டனர். அடிப்பது, உதைப்பது, கொலை செய்து ஆற்றில் விடுவது போன்ற அராஜகங்களும் நடைபெற்றன. 1971இல் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் உதயமானது. 1974இல் போனஸ் கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர். விடுதலை போராட்ட வீரர் தோழர் வி.ராமசாமி, தோழர் கே.நாராயணன் போன்ற தலைவர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள் புனையப்பட்டன. பண்ணை அடிமைகளைப் போல நடத்தப்பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக பாதுகாக்கப்பட்டுள்ளனர். பாக்கி என்ற பெயரில் கொடுத்த பணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டது தடுத்து நிறுத்தப்பட்டது.

வேலுசாமியை ஈர்த்த சிஐடியு

மேற்கண்ட போராட்டங்களில் ஈர்க்கப்பட்ட விசைத்தறி தொழிலாளர் தோழர் வேலுசாமி சிஐடியு சங்கத்தில் இணைந்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினர். 1988இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 2002 முதல் அக்ரஹாரம் கிளைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், ரேசன் முறைகேடு, சட்டவிரோதமாக காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தவும், சாயப்பட்டறை மற்றும் சாக்கடை கழிவுகள் ஆற்றில் கலப்பதை எதிர்த்தும் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பிரச்சனைகளுக்காகவும் மக்களை திரட்டி பல போராட்டங்களை நடத்தியுள்ளார். ஏழைகளுக்கு மருத்துவ உதவி கிடைத்திடவும், காவிரி ஆற்றின் ஒரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சமயங்களிலும் பல உதவிகளைச் செய்துள்ளார். படிக்க வசதியற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டு புத்தங்கள் நண்பர்களின் உதவியுடன் வாங்கிக் கொடுத்தார்.

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தின் போது சிறை சென்ற வேலுசாமி காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளானார். 2004இல் பள்ளிபாளையம் நகரில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும் பல வழக்குகள் போடப்பட்டு சிறை சென்றார். பல பொய் வழக்குகளை சந்தித்தவர் தோழர் வேலுசாமி. இத்தகைய பின்னணியில்தான், கந்துவட்டித் தொழில் செய்து வந்த குண்டர்கள் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த பெண் விசைத்தறி தொழிலாளி தரவேண்டிய வட்டிப்பணத்திற்காக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர். அத்துடன் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் விற்றனர்.

கந்துவட்டிக் கும்பலின் இந்த அக்கிரமங்களைக் கண்டு தோழர் வேலுசாமி கொதித்தெழுந்தார். இக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என களமிறங்கி போராடியவரை 2010 மார்ச் 10 அன்று கயவர்கள் வெட்டி வீழ்த்தினர்.  கொடியவர்களின் மிரட்டலைக் கண்டு அஞ்சாது உயிரைத் துச்சமென நினைத்து களப்பணியாற்றிய தோழர் வேலுசாமி வீழ்த்தப்படவில்லை; விதைக்கப் பட்டுள்ளார்.

தியாகி வேலுச்சாமி நினைவுநாள் (மார்ச் 10)