tamilnadu

img

குற்றவாளிகளை பாதுகாப்பதா?

தமிழக அரசு, காவல்துறையைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, நவ.15-  பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகளை  தப்பவிடும் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினர் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர்  உ.வாசுகி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பொள்ளாச்சியில் இளம்பெண் களை மிரட்டி பாலியல் வல்லறவு செய்து, அதனை வீடியோவாக பதிவு  செய்து பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்தோர் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு கைது செய்யப் பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆளும் கட்சிப் பிரமுகர்களுடன் தொடர்பிருந்த நிலையில் அவ்வழக்கை நீர்த்துப் போகும் வகையில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் நட வடிக்கைகள் இருந்தன. இதை யடுத்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக அவ்வழக்கு சிபிசிஐடி வசம்  சென்று, பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது. 

இதுதொடர்பான விசாரணை தற்போது மிகவும் மந்தமாக நடை பெற்று வரும் நிலையில், சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் மீது பதியப் பட்ட குண்டர் சட்டம் தற்போது உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக, காவல்துறை யினரின் நடவடிக்கை குற்றவாளி களை தப்பவிடும் நோக்கில் உள்ள தாலும்,  போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்காததாலும்  இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி களான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தப்பவிடும் வகையில் திறனற்று செயல்படும் காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து பொள்ளாச்சியில் அனைத்து கட்சி கூட்டமைப்பு மற்றும்  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் நவம்பர் 15 வெள்ளியன்று தடையை மீறி கண்டன ஆர்ப்பாட் டம் மாதர் சங்க  மாவட்டச் செய லாளர் அ.ராதிகா தலைமையில் நடை பெற்றது. 

அகில இந்திய துணைத் தலை வர்  உ.வாசுகி கண்டன உரையாற்றி னார். திமுக மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ்,  மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே,மகாலிங்கம், திமுக மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், விசிக மாவட்ட செயலாளர் ச.பிரபு,   தந்தை பெரியார் திரா விடர் கழகத்தின் நிர்வாகி இரா.மனோ கரன்,  மனிதநேய மக்கள் கட்சியின்  ஷேக் அப்துல்லா,  மனிதநேய ஜன நாயக கட்சியின் ராஜா ஜெம்சா, தமு முக முத்துபாய், ஆதித்தமிழர் பேரவையின் தி.செ.கோபால் மற்றும் மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர்  சி.ஜோதிமணி, பங்கஜ வள்ளி, ராஜலட்சுமி ,சுதா, சாமுண்டீஸ்வரி,  விஜயலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்தனர்.

உ.வாசுகி குற்றச்சாட்டு

முன்னதாக உ.வாசுகி தலைமை யில் மாதர் சங்க நிர்வாகிகள் வெள்ளி யன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து உ.வாசுகி செய்தியாளர் களிடம் பேசுகையில், ‘‘காவல்துறை யின் திறமையற்ற நடவடிக்கைகளால் தான் பொள்ளாச்சி பாலியல் குற்ற வாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து  விடுவிக்கப்படிருக்கின்றனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப் படுகிற சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் எதிரிகளை கடைசிவரை சிறையில் அடைப்பதற்கு அனைத்து வித முயற்சிகளையும் காவல்துறை யினர் மேற்கொள்கின்றனர். ஆனால் முக்கிய வழக்கான பொள்ளச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறையினர் ஆரம்பம் முதல்  அலட்சியப்போக்குடனே செயல் பட்டனர்” என்று குற்றம்சாட்டினார்.  இவ்வழக்கு தொடர்பாக ஆவணப்படுத்துதல் தெளிவற்ற முறையில் இருந்தது. குற்ற வாளிக்கும் அவர்களது குடும்பத்தின ருக்கும் வழக்கு சம்பந்தமான தகவல்களை தர வேண்டும். இந்த இரண்டு செயல்களையும் காவல்துறை செய்யாததால்தான் 2 முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக முன்னாள் காவல் துறை கண்காணிப் பாளர் பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு  சார்பில் ரூ.25 லட்சம் கொடுக்க  வேண்டும் என கூறியிருக்கிறது. இந்நிலையில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே அரசு செயல்படுகிறது. காவல்துறையின ரின் இத்தகைய செயலைக் கண்டி த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்து அனுமதி கேட் டால் காவல் துறை அனுமதி மறுக் கிறது.  கேட்டால் நீதிமன்ற தீர்ப்பு களை விமர்சிக்க அனுமதியில்லை என்கின்றனர். நீதிபதிகளைத்தான் விமர்சிக்கக்கூடாது, நீதிமன்ற தீர்ப்பு களை விமர்சிப்பது அவமரியாதை யாகாது என்று உ.வாசுகி கூறினார். 

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை கண்டித்து ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்பு கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியபோது இந்த காவல் துறை எங்கே சென்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  காவல் கண்காணிப்பாளருட னான சந்திப்பின்போது மாதர் சங்க  நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் ஷீலாராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
 

 

;