tamilnadu

img

அரசாணை மழை தருமோ?

மின்னஞ்சலில் வந்திருந்த அரசாணையைஅச்சிட்டு அவையினருக்கு கொடுத்துவிட்டுவாசிக்கத் தொடங்கினான் சித்ரகுப்தன்

“மழை வேண்டி யாகம் நடத்திட
இந்து அறநிலைய கோவில்களுக்கு உத்தரவு” 

“தோள்களில் உரசிய மேகத் திட்டினை
கதாயுதத்தால் நெட்டித் தள்ளியபடி
“பலே பலே சபாஷ்…” என்றான் எமதர்மபிரபு

“கீழவையிலும் இதுதான் விவாதமோ” என்றபடி நுழைந்த நாரதனிடம்
“சொர்க்க மேலவையிலுமா?” என்று கேட்டுவிட்டு 
கேலக்ஸி அதிரச் சிரித்தான்
 

பத்து நாட்களாக யாகதாக கூட்டத்தொடரால் 
கைலாயமலையே அல்லோல கல்லோலப்படுகிறது 
பரமசிவன் தங்களை அழைத்துவரச் சொன்னாரென 
மூச்சு வாங்கிய நாரதனை அழைத்துக் கொண்டு 
சித்ரகுப்தனோடு தனிவிமானத்தில் 
சொர்க்கத்திற்கு வந்திறங்கினான் எமராஜன்
 

“வரச்சொல்லி வாட்ஸப்பில் செய்தி அனுப்பியதை பார்க்கவில்லையோ?”
வாயிலில் நுழைகையிலே மறித்தாள் பார்வதி
“மிஷன் சக்தி தாக்குதலால் செயற்கைகோள்கள் பழுதாகி
எனது ஆண்ட்ராய்ட் போனுக்கு நெட்வொர்க் கிடைக்கவில்லை தேவி”
சமாளித்து முறுவலித்தான் சண்டமாருதன்
“அதிருக்கட்டும் யாக அரசாணை குறித்து உமது கருத்தென்ன?”
இடைமறித்த பரமசிவனுக்கு நாரதன் பதிலிறுத்தான்
“ஆணையில் பிழை இருக்கிறது மன்னா”
“என்ன பிழையா..?”
“ஆம் மன்னா, இந்து அறநிலைய கோவில்களில் யாகம் எனில்
பள்ளிவாசல் தொழுகைக்கும் ஆலய ஜெபங்களுக்கும் ஆணை இல்லையோ?”
சினம் கொண்ட பரமனோ செருமிக் கர்ஜித்தான்
“மழைக்கு ஏது மதம்? ஆணை மதச் சார்பற்றவை என்பதை மறந்தீரோ?”
 

புலித்தோலில் சம்மணமிட்டபடி சற்று யோசித்து
“மழை வருணனின் துறைதானே, வரச் சொல்லுங்கள் அவனை..”
“வந்தேன் மன்னா” இந்த பழிக்கெல்லாம் நான் ஆளாவதில்லையென
சரணாகதி அடைந்து ஒதுங்கி நின்றபடி வாய்திறந்தான் வருணன்
“ஒன்று சொல்லட்டுமா, சாலை போடுவதாக 
மரங்களையெல்லாம் வெட்டிவிட்டு 
மழைக்கு ஆணை போட்டால் வருமா?” 
 

“கவனமாக பேசுங்கள், எட்டுவழிச் சாலை வேறு கிடப்பிலிருக்கிறது வருணா…”
“தமிழ்நாட்டில் பாலைவனத்திற்கு அடிக்கல் நாட்டுங்கள், நான் வருகிறேன்”
என்றபடி அவையிலிருந்து வெளியேறினான் கோபமாக...
சொர்க்கத்தின் முதல் அறையிலிருந்து எட்டிப் பார்த்த காமராசர்
“நான் கட்டிக்கொடுத்த அணையிலெல்லாம் 
மழைநீரை சேமிச்சிருக்கனும், அததான் நான் சொல்றேன்”
 

இரண்டாவது அறையின் ஜன்னலோரமாய் பார்த்தபடி கலாம்
“கோவில்களின் உள்ளிருக்கிற கிணறுகளிலிருந்து 
தண்ணீர் எடுத்தாலே பாதிப் பஞ்சம் நீங்கும்” என்று சொல்லிவிட்டு 
கீதையை கைகளிலேந்தி வீணை வாசிக்க சென்று விட்டார்
 

“தூர்வாரிய ஏரி குளங்களை பராமத்து செய்யவில்லை” 
என்றபடி வராண்டாவில் நடந்துக் கொண்டிருந்த கலைஞருக்கு 
நேரெதிரே நடந்து வந்த ஜெயலலிதா
“மழை நீர் சேகரிப்புத் தொட்டியில் நீருமில்லை, தொட்டியுமில்லை”
என்றபடி எதிர்புறமாக நடந்து சென்றார் 
 

விவாதங்களின் அனல் பறக்க 
ஐயோவென சிவன் தனது தலையில் 
கைவைத்த இடத்தில் கங்கை 
தண்ணீரை பிறைபோல பொழிந்தாள்
“தண்ணி வந்துருச்சு தண்ணி வந்துருச்சென...” 
படுக்கையிலிருந்து விருட்டென எழுந்தவனின் தலையில் 
காலிக் குடத்தால் நங்கென இடித்த மனைவி 
“நானே தண்ணிலாரி வந்து 
பதினைஞ்சு நாளாச்சுனு 
வேதனையில இருக்கேன், இதுல கனவு வேற.”