திருச்சி,பிப்.22- ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மார்ச் 23-ந் தேதி மறியல் போராட்டம் நடத்துவோம் என கி.வீரமணி தெரிவித்தார். திருச்சி புத்தூர் பெரியார்-மணியம்மை நூற்றாண்டு விழா அரங்கில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.21) நடந்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு பிரச்சனையால் 9 உயிர்கள் பலியாகி இருக்கிறது. அடுத்து நெக்ஸ்ட் தேர்வு என வாழ்நாள் முழுவதும் தேர்வு இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா நிறைவேற்றுவதில் மத்திய அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகி உள்ளது. தமிழக அரசும் இதில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை. இது தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை மீண்டும் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23ஆம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு என்ற பெயரால் மதவாத அணுகுமுறையை எதிர்த்து சென்னையில் 25ஆம் தேதி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.