tamilnadu

img

தோழர் கே.வரதராசனின் அனுபவச் செறிவுடன் செங்கொடிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

கொ ரோனா ஊரடங்கு காலத்தில் நமது செங்கொடி இயக்கம் சில முக்கிய மூத்த தலைவர்களை இழந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே.வரதராசன், கட்சியின் விருதுநகர் மாவட்ட முதுபெரும் தலைவரும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான எம்.மீனாட்சி சுந்தரம், புதுக்கோட்டை மாவட்ட முதுபெரும் தலைவர், முன்னாள் மாவட்டச் செயலாளர் ப.சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட மூத்த தலைவர், கறம்பக்குடி மக்களின் அன்பைப் பெற்ற தலைவர் தோழர் உடையப்பன், சிதம்பரம் நகர முன்னாள் செயலாளர் வி. நடராஜன்  உள்ளிட்ட பல தோழர்கள் மரணமடைந்தார்கள். துயரம் என்னவென்றால், இந்த மகத்தான தோழர்களின் இறுதி நிகழ்ச்சியில் ஏராளமான தோழர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்போ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.

பெரும் வேதனை
கட்சியினுடைய மூத்த தலைவரும் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான அன்புத் தோழர் கே.வரதராசன் அவர்கள் பூரண உடல் நலத்துடன் இருந்தார். இந்நிலையில் மே 16-ந்தேதி காலை 11 மணி அளவில் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி அவர்களிடமிருந்து அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது. தோழர் கே.வரதராசன் அவர்களது உடல்நிலை திடீரென்று கடுமையாக நலிவுற்றிருக்கிறது என்றும் மருத்துவர்கள் அவரை உடனடியாக கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். உடனடியாக அவரை கோயம்புத்தூர் கொண்டுசெல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம். ஆனால் அதற்கான ஆயத்தம் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த2 மணி நேரத்திலேயே தோழர் கே.வரதராசன் அவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சி செய்திதான் கிடைத்தது. கட்சியினுடைய மாநிலமையத்தில் இருந்த தோழர்கள் அனைவருக்கும் இது பேரதிர்ச்சியாக இருந்தது. தோழர் கே.வரதராசன் அவர்கள் நம்மை பிரிந்து விட்டார் என்றசெய்தியை நம்பமுடியவில்லை.

ஊரடங்கு  கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் நாம் எதிர்கொள்கிற பல்வேறு துன்பங்களில் பெரிய துன்பம் எதுவென்றால், தோழர் கே.வரதராசன் போன்ற மகத்தான தலைவர்களது  இறுதி நிகழ்ச்சிக்கு கூட நாம்எல்லோரும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதுதான். தங்களது வாழ்நாளையே உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணித்த மேற்கூறிய தோழர் களின் இறுதி நிகழ்வுக்கு உரிய முறையில் அனைவரும் செல்ல முடியாதது பெரும் வேதனையை ஏற்படுத்தியது.ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பாதகமில்லாமல் மாநில மையத்திலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு  உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட  மாநிலச்செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மற்றும் திருச்சிமாவட்ட தோழர்கள் கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சி நடந்தது.  தோழர் கே.வரதராசன் அவர்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளராக, மாநிலச் செயற்குழு உறுப்பினராக, அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக என பல பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். தற்போதும் கட்சியின் மத்தியக்குழு சிறப்பு அழைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். கட்சியின் பல்வேறு மாவட்டக்குழுக்களுக்கு பொறுப்பாக இருந்து செயல்பட்டது, தீக்கதிருக்கு பொறுப்பாளராக, கலை, இலக்கிய அரங்கத்திற்கு வழிகாட்டியாக செயலாற்றியது எனப் பல பரிமாணங்களை கொண்டிருந்தவர் அவர்.

ஒரு விவசாயி என்ற உணர்வோடு
கட்சியினுடைய பல்வேறு அரங்கங்களுக்குப் பொறுப்பாக,  அவர் செயல்பட்ட போதிலும், பிரதானமாக அவர் தனது அரசியல் ஸ்தாபன வாழ்க்கை முழுவதிலும் ஒரு விவசாயி என்ற உணர்வோடு, விவசாய அரங்க பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை.கிராமப்புற விவசாயிகளைத் திரட்ட வேண்டும், கிராமப்புற இந்தியாவில் ஒரு வர்க்க அணிசேர்க்கையை உருவாக்கவேண்டும், விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களது உரிமைகளை முன்னிறுத்த வேண்டும் என்கிற முறையில் விவசாயிகளின் மூச்சாக தன்னை உருவாக்கிக் கொள்வதில்தான் முனைப்புடன் செயல்பட்டார். 1982ல் கரூரில் விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தோழர் கே.வரதராசன் மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார்.  இதற்கு முன்னரே நானும் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினராக இருந்ததால் நான் அவரோடு சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல்  விவசாயிகள் சங்க பணிகள், இயக்கங்கள், கூட்டங்கள் என அவரோடு நெருக்கமாக பழகவும்,செயல்படவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் அரங்கத்தின் தலைவர்களாக என்.சங்கரய்யா, என்.வரதராஜன், கோ.வீரய்யன். வி.ஏ.கருப்புசாமி, ஏ.லாசர், ஈரோடு முத்துசாமி, வி.தம்புசாமி போன்ற தோழர்கள் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டார்கள். 1990கள் வரை தோழர் கே.வரதராசனும் நானும் விவசாயிகள் சங்கத்தின் பல்வேறு கமிட்டிகளில் செயல்பட்டோம். அகில இந்திய கிசான் கவுன்சில் என்றுஅழைக்கப்படுகிற விவசாயிகள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் களாகவும் பணியாற்றினோம்.

இந்நிலையில் 1989-களில் கட்சியின் தென்னாற்காடு செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.  இதனைதொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டை தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரத் தில் நடத்தினோம். இம் மாநாட்டில்  தோழர் கே.வரதராசன் அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் கழித்து 1999ல் கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தோழர் கே.வரதராசன் மாநிலத் தலைவராகவும், நான் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டோம். இதைத்தொடர்ந்து கேரளா மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்க மாநாட்டில் தோழர்கே.வரதராசன், அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர் அவர் அகில இந்திய மையப் பணிகளுக்காக தில்லி சென்றார்.அப்போது முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் விவசாயிகள் இயக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 2014ல் கடலூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவர், பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தோழர் ஹன்னன் முல்லா பொறுப்பேற்றார்.  அந்த மாநாட்டில் அவரும் நானும் அகில இந்திய துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டோம்.

சிறுகுறு விவசாயிகளின் நலனுக்காக
கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துகொண்டது முதல் விவசாயிகள் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட இந்தக் காலம் முழு வதிலும், கே.வரதராசன் அவர்களுக்கு அடிப்படையான ஒரு சிறப்பம்சம்உண்டு. அது என்னவென்றால், கிராமப்புறங்களில் பெரும் நிலப்பிரபுக்கள்,கந்துவட்டி காரர்கள், பெரும்பணக்காரர்கள் ஆகியோரிடமிருந்து சிறு-குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான்.சிறு-குறு விவசாயிகளின் நிலங்களைப் பாதுகாப்பது, இலவச மின்சாரம்,கடன் தள்ளுபடி, மானியங்கள் அளிப்பது போன்ற அரசின் கொள்கை சார்ந்த எந்தப் பிரச்சனைகளாகவும் இருக்கட்டும்; அனைத்திலுமே சிறு-குறு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அழுத்தமான கருத்துக்களை முன்வைத்தார்.சிறு-குறு, நடுத்தர விவசாயிகளின் வர்க்க நலனை அடிப்படையாகக் கொண்டே கோரிக்கைகள் அமைய வேண்டும்,  போராட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று உறுதியாக அவர் வழிகாட்டுவார். கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் ஆகியோரைத் திரட்டி நிலப்பிரபுக்கள்,  லேவாதேவிகாரர்களை எதிர்த்து ஒரு வர்க்கப் போராட்டத்தை கூர்மையாக நடத்திட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

நமது குரல் யாருக்காக?
கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் அவர் முன்மொழிந்தஅறிக்கை மற்றும் பிரதிநிதிகள் விவாதத்திற்கு அவர் அளித்த தொகுப்புரைஇன்னும் மனதில் நிற்கிறது. அடுக்கிய மூட்டையில் அடி மூட்டையாக இருப்பவர்களுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதே அவரது உறுதியான அணுகுமுறையாக இருந்தது. இதையே கொல்கத்தாவில் நடந்த கட்சியின் பிளீனம் (சிறப்பு மாநாடு)தன்னுடைய அறிக்கையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது: “கிராமப்புறங்களில். விவசாயத் தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர துறையில் பணியாற்ற கூடிய அன்றாட உழைப்பாளிகளை அணிதிரட்டி கிராமப்புறத்தில் செல்வந்தர் பகுதியை எதிர்த்து கூர்மையான போராட்டத்தை நடத்த வேண்டும்.” கிராமப்புற  மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ஊழியரும் இதனை பிரதான கடமையாக கொண்டு நிறைவேற்ற வேண்டும். உலகமய தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாகி வரும் சூழ்நிலையில் விளைபொருட்களுக்கு விலை நியமிப்பது போன்ற ஒருசில பிரச்சினைகளில் பொதுவான கோரிக்கைகளை எழுப்பினாலும் அடிப்படையில்  கிராமப்புற உழைப்பாளி வர்க்கத்தின்  கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்துவதும் அந்த உழைப்பாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதுமே பிரதானமான குறியாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிலத்திற்கான பேரியக்கம்
அதேபோல தமிழகத்திலும் சரி, அகில இந்திய அளவிலும் சரி, நிலச்சீர்திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்பதற்கான போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார். தமிழகத்தில் 2006ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில்நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா கோரி மிகப்பிரம்மாண்டமான போராட்டம்நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றார்கள். இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க அகில இந்தியபொதுச் செயலாளர் என்கிற முறையில் தோழர் கே.வரதராசன் பொருத்தமான முறையில் வழிகாட்டினார். நேரடியாக கலந்து கொண்டார். இப்போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு பட்டா வழங்குவதற்கான அரசாணையையும், தரிசு மேம்பாடு திட்டத்தையும் அறிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் தோழர் கே.வரதராசன் அவர்களது பங்கும் வழிகாட்டலும் முக்கியமானது. குறிப்பாக கர்நாடகத்தில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யக்கூடியவிவசாயிகள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். சுமார் 40லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களில் அவர்கள் சாகுபடி செய்கிறார்கள். பட்டா இல்லாத அரசுபுறம்போக்கு நிலங்கள் இவை. இந்த விவசாயிகளை அணிதிரட்டி நிலத்திற்கானப் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தியதில் தோழர் கே.வரதராசனுக்கு பிரதான பங்கு உண்டு. இதன் மூலம் சில லட்சம் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.

அதேபோல ஆந்திரப் பிரதேசத்தில் குத்தகை விவசாயிகள் பிரச்சனைமிக முக்கியமானதாகும். இப்போதும் கூட அங்கு குத்தகை விவசாயிகள் 60சதவீதத்திற்கும் மேலாக குத்தகை தரவேண்டிய நிலைமை இருக்கிறது. அங்கு குத்தகை விவசாயிகளை அணிதிரட்டி பெரிய போராட்டங்களைஉருவாக்கியதில் கே.வரதராசனுக்கு முக்கியப் பங்கு உண்டு. ராஜஸ்தானில் 2013ல் விளைநிலங்களுக்கு பாசன மேம்பாட்டிற்கான போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. ஸ்ரீகங்காநகர் மாவட்டம் உள்பட பல மாவட்ட ஆட்சியரகங்களை, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி முற்றுகையிடச் செய்த பிரம்மாண்டமான போராட்டங்களைஅகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்தியது. ஜெய்ப்பூரில் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. ஒருவாரகாலம் தலைமைச் செயலகத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. அதன்பிறகுதான் ராஜஸ்தான் விவசாயிகளோடு மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்திஒப்பந்தம் போட்டது. இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் என்ற முறையில் வழிகாட்டிய தோழர் கே.வரதராசன், அங்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்து போராட்டத்தில் பங்கேற்கவும் வழிகாட்டவும் செய்தார்.எனவே அடித்தட்டு சிறு, குறு, நடுத்தர, ஏழை-எளிய விவசாயிகளின் பிரச்சனைகளை, கோரிக்கைகளை வலுவாக முன்னெடுப்பது என்பது தான் அவரது அணுகுமுறையே.  

இரட்டைக்குழல் துப்பாக்கி
அதேபோல சிறு, குறு, நடுத்தர விவசாயிகளும்,விவசாயத் தொழிலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதிலும், விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் கிராமப்புற இந்தியாவில் கூட்டாக பல கோரிக்கைகளை கையிலெடுத்து அணிதிரட்ட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். பல விவசாயிகள் சங்கங்கள், கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களைத்தான் தமது முதல் எதிரியாக சித்தரிக்கக்கூடிய பின்னணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என வழிகாட்டியவர் .விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் பேசிய தோழர்கே.வரதராசன், விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் என்பவை இரண்டு வேறு வேறு அமைப்புகள் அல்ல; மாறாக நிலப்பிரபுத்துவத்தையும், சுரண்டலையும் எதிர்த்து போராடுகிற இரட்டைக்குழல் துப்பாக்கி  என்பதை முன்னிறுத்தினார்.விவசாயிகள் சங்க ஸ்தாபனப் பணிகள் மட்டுமல்லாமல், சித்தாந்த தெளிவுடன், கிராமப்புற இந்தியாவில் அடிப்படை பிரச்சனையாக இருக்கக்கூடிய சாதி, வர்க்கம் என்பதை மிகச்சரியாக மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்து முன்வைத்தவர் அவர். இந்தியாவில் அடிப்படையானது வர்ண வேறுபாடா அல்லது வர்க்க வேறுபாடா என்பது தொடர்பாகதொடர்ந்து பெரிய விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. இதை எப்படி அணுக வேண்டும் என்கிற மிகச்சரியான புரிதல் அவருக்கு இருந்தது. வர்ணாசிரம தர்மம், பிராமணியம் ஆகியவற்றை எதிர்த்து அவர் எழுதிய எழுத்துக்கள் சித்தாந்த தெளிவை அளிப்பதாக அமைந்தன. பிறப்பால் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்; சமஸ்கிருதம் அறிந்தவர்; எனவே அவருக்கு இயல்பாகவே கிடைக்கப்பெற்ற வர்ணாசிரமம் தொடர்பான விசயங்களை உள்வாங்கிக் கொண்டு அதன் அநீதி குறித்து தெளிவாக ஆய்வுசெய்தார்.

கர்நாடகாவில் உள்ள உடுப்பியில் ஒரு பெரிய போராட்டத்தை தோழர்கே.வரதராசன் முன்னெடுத்தார். அங்கு ஸ்ரீகிருஷ்ணா மடம்  இருக்கிறது.அந்த மடத்தின் டிரஸ்டியாக பேஜவாஸ்திரி என்பவர் இருந்தார். அவர் விஸ்வஇந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவரும் ஆவார். அந்த மடத்தில்பிராமணர்களுக்கு தனியாக உணவு; மற்றவர்களுக்கு தனியாக உணவு பரிமாறுவது வழக்கமாக இருந்து வந்தது. தோழர் கே.வரதாசன் கவனத்திற்குஅது வந்தவுடன் அதில் வலுவாக தலையிட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக இத்தகைய பிரச்சனைகளை கையிலெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தலித் மற்றும் பழங்குடி மக்களை ஒடுக்குகிறநடவடிக்கைகளுக்கு எதிராக அம்மக்களை அணிதிரட்ட வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்பட்டார். அந்த முனைப்பில் உருவானதுதான் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். அந்த சங்கத்தை வழிநடத்துவதில், வாச்சாத்தி போராட்டத்தை வழிநடத்தியதில் முக்கியப் பங்கு அவருக்கு உண்டு.தீண்டாமை கொடுமைகளை எதிர்த்த போராட்டத்தில் அகில  இந்திய அளவில் விரிவுபடுத்திச் செல்ல வேண்டும் என்பதிலும் முனைப்பாக அவர் செயல்பட்டார். அந்த அடிப்படையில் உருவான தலித் சோசன் முக்தி மஞ்ச் (தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி) அதை உருவாக்குவதில் முக்கியப் பங்கு ஆற்றினார்.

ஸ்தாபனப்பணியில் முன்னுதாரணமாக...
அதேபோல கட்சி மற்றும் அரங்கங்களின் கமிட்டிக் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றில் அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. அறிக்கைகளை முன்மொழியும் போது சரி, அவற்றுக்கு தொகுப்புரை வழங்கும்போதும் சரி, மிகவும் ரத்தினச் சுருக்கமாக, அதே நேரத்தில் அணிகளுக்கு உணர்த்த வேண்டிய விசயங்களை கூர்மையாக உணர்த்தி, உணர்வுபெறச் செய்து பணியாற்றச் செய்வதில் சிறப்பான பங்கினை ஆற்றினார். மாநாடுகளில் அல்லது கமிட்டிக் கூட்டங்களில் பிரதிநிதிகள்தான் நிறைய பேச வேண்டுமே தவிர  தலைவர்கள் அதிகம் பேசவேண்டியதில்லை என்று கூறுவார். பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றை பொருத்தமான முறையில் செயலாக்கம் பெறச் செய்வதுதான் பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணி என்றும் அவர் குறிப்பிடுவார். எனவே கட்சி ஸ்தாபனக் கூட்டங்களை நடத்துவதில் அவர் ஒரு முன்னுதாரணமாக செயல்பட்டார்.அதேபோல விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் என தொடர்ச்சியாக நடக்கும் கமிட்டிக் கூட்டங்களில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, காரசாரமான விவாதம் நடப்பது உண்டு. அந்த விவாதங்களை பொறுமையாக கேட்டு உரிய முறையில் பொருத்தமான பதில்களை அவர் அளிப்பார். அந்த காரசாரத்தை அத்தோடு அவர் மறந்துவிடுவார். மாறுபட்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வார். மாறுபட்ட கருத்துக் கூறிய தோழர்களோடு தனிப்பட்ட முறையில் அவர் ஒருபோதும் முரண்பட்டதில்லை. அவருடன் எந்தத் தோழராக இருந்தாலும் உரிமையோடு பேசலாம். உரிமையோடு விமர்சிக்கலாம். அதேபோல அவரும் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பேசுவார். தோழமை என்பதன் சிறந்த இலக்கணமாக அவர் திகழ்ந்தார்.

குமரி முதல் இமயம் வரையுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விவசாய பிரச்சனைகளை முன்னெடுக்க செல்லும்போது அந்தந்த மாநில மொழிகளில் பேசுவதற்காக கடுமையான முயற்சி எடுத்துக்கொண்டவர். அதன் விளைவாக மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் அந்தந்த மாநிலத்தில் உரையாற்றும் தனித்திறன் கொண்டவர். அனைத்திற்கும் மேலுமாக  தான் மட்டுமின்றி தனது குடும்பத்தினர் பலறையும் மார்க்சிஸ்ட் கட்சியின் இயக்கங்களில் ஈடுபடுத்தினார். அவரது துணைவியார் மாதர் சங்க இயக்கத்தில் பணியாற்றியவர். அவரது சகோதரர்கள் சகோதரிகளின் பிள்ளைகள் இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பணிகளில் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களையெல்லாம் செங்கொடி இயக்கத்தில் இணைத்த பெருமை தோழர் கே. வரதராசனுக்கு உண்டு. 

அத்தகைய மகத்தான தலைவரை கட்சி இழந்திருக்கிறது. அவர் மறைந்து ஜுன் 16 அன்று ஒரு மாதம் முடிகிறது. எனினும் தோழர் கே.வரதராசன் அவர்கள் நம்மோடு இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. தோழர் கே.வரதராசன் அவர்களது புகழை முன்னெடுத்துச் செல்வோம். அவர் ஆற்றிய அரசியல் ஸ்தாபனப் பணிகளை உள்வாங்கிக் கொண்டு, அவர் அளித்துச் சென்றுள்ள அனுபவச் செறிவை உள்வாங்கிக் கொண்டு செங்கொடி இயக்கத்தின் பயணத்தை இன்னும் வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்வோம். 

===கே.பாலகிருஷ்ணன்===

மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;