tamilnadu

img

வென்று உயர்ந்தது செங்கொடி.. கீழ்வேளூர் ராதாமங்கலத்தில் மக்களின் சக்தியாய் மார்க்சிஸ்ட் கட்சி

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்தில், தேவூருக்கு அருகே, கடுவையாற்றின் வடக்குக் கரையில் அமைந்திருக்கிறது ராதாமங்கலம் ஊராட்சி. வெண்மணி தியாக பூமி இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. எனவே, கீழ்வேளூர் ஒன்றியம் என்பது நீண்ட நெடுங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி உயர்ந்துப் பறக்கும் வர்க்கப் போராட்ட பூமியாக என்றும் சுடர்வதாகும்.

இந்த பூமியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வளர்ந்து, கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், ஒன்றியத் துணைப் பெருந்தலைவராகவும், மற்றும்கட்சி வழங்கிய உயர்ந்த பதவிகளிலும் இருந்து தங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, வேறு கட்சிகளுக்கு, எதேதோ பெற்றுக் கொள்வதற்காக ஓடிப்போய், இன்று முகவரி காணாமற்போய் வீழ்ந்து கிடக்கும் சிலரின் வரலாறும் இந்த மண்ணில் உண்டு…

ராதாமங்கலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பு வகித்துக் கொண்டு, கட்சிவிரோதச் செயல்களில் ஈடுபட்ட மைக்காக, ஒரு நபர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே, அவர் வேறு கட்சியில் இணைந்து ‘எட்டப்பன்’ வேலைகளில் இறங்கினார்.  இந்தச் சமயத்தில்தான், உள்ளாட்சித் தேர்தலும் வந்தது. ராதாமங்கலம் ஊராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பாளரைத் தனது துரோகச் செயல்களால் தோற்கடித்தார் அந்த நபர்.கீழ்வேளூர் ஒன்றியமே தனது கையில் இருப்பதாகக் கனவுடன், ருசி கண்ட அந்தப் பூனை, கடந்த 28.06.2020. இரவில், ஒரு சிலரைச் சேர்த்துக் கொண்டு, ராதாமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை இறக்கி, கொடிமேடையை அடித்து நொறுக்கி, தான் இணைந்த ஆளுங்கட்சியின் கொடியை ஏற்றிவிட்டார். இந்த அலுவலகத்தில் எங்கள் உழைப்பும் இருக்கிறது; இது எங்களுக்குத்தான் சொந்தம் என்று அவர் தம்பட்டமடித்தார்.இதற்கு முன்னால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குச் சென்ற சிலர், இதுபோலவே, இந்தக் கட்சி அலுவலகத்தில் எங்களின்உழைப்பும் இருக்கிறது. இது எங்களுக்கே உரிமை என்று சொந்தம் கொண்டாடி, சி.பி.எம். அல்லாத இரு கட்சியினருக்கிடையே மோதல் நடந்து அதில் ஒருவர் வெட்டுப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற சம்பவமும் இந்த ராதாமங்கலத்தில்தான் நடந்துள்ளது. மறுநாள், 29.06.2020.அன்று காலை, தகவல் அறிந்து, சி.பி.எம். மாவட்டச்செயலாளரும் கீழ்வேளூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, கீழ்வேளூர் ஒன்றியச்செய லாளர் ஜி.ஜெயராமன், ராதாமங்கலம் கிளைச் செயலாளர் எஸ்.மோகன்இங்கர்சால் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலரும் கீழ்வேளூர் காவல் நிலையத்திலும் நாகப்பட்டினம் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் நீதி கேட்டுப் புகார் மனு அளித்தனர்.இந்நிலையில், கடந்த 28.08.2020. அன்று, ராதாமங்கலம் கட்சி அலுவலகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே சொந்தம் என நாகப்பட்டினம் கோட்டாட்சியர்  தீர்ப்பு வழங்கினார்.

எந்த ராதாமங்கலத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி இறக்கப்பட்டுக் கொடிமேடை சிதைக்கப்பட்ட தோ, அதே இடத்தில், கட்சி அலுவல கம் முன்பு, கொடிமேடை கட்டப்பட்டு, மீண்டும் செங்கொடி உயர்த்தப்படும் உன்னத நிகழ்வில், செப்டம்பர் 9 அன்று, ராதாமங்கலம் ஊர் மக்களெல்லாம் ஒன்று கூடியிருக்க, சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மக்களின் வாழ்த்து முழக்கத்துடன் செங்கொடியை ஏற்றி உயர்த்தினார். நடந்தசம்பவங்களை விளக்கி, ஊர் மக்களுக்கு வாழ்த்துக் கூறி மாவட்டச் செயலாளர் நாகைமாலி சிறப்புரையாற்றினார்.

சி.பி.எம். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்,.என்.அம்பிகாபதி, என்.எம்.அபுபக்கர், ஒன்றியக் குழுஉறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள்உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். கிளைச் செயலாளர் எஸ்.மோகன் இங்கர்சாலின் இயக்கப்பாடல்கள் ஓங்காரமாய் ஒலித்தன. 

====ந.காவியன்====