tamilnadu

img

இந்த கொள்ளை நோய் புதிய உலகுக்கான பாதை - அருந்ததி ராய்

இன்றுள்ள நிலையில் யாராவது, புதியவர்களை யாரும் முத்தம் கொடுக்க முடியுமா? பேருந்துகளில் தாவி குதித்து ஏற முடியுமா? குழந்தைகளை பள்ளிக்கு கவலைப்படாமல் அனுப்ப முடியுமா? வாழ்க்கையின் சிறு சிறு சந்தோஷங்களை அவற்றோடு உள்ள அபாயங்கள் குறித்து யோசிக்காமல் அனுபவிக்க முடியுமா? நம்மில் போலி தொற்றுநோய் நிபுணர் இல்லாதவர் யாரும் உண்டா? நம்மில் எத்தனை போலி வைரலாஜிஸ்ட், புள்ளிவிவர நிபுணர் மற்றும் தீர்க்கதரிசிகள். அதியசங்கள் நடந்திடதா என இரகியமாக வேண்டாத விஞ்ஞானியோ அல்லது மருத்துவரோ உண்டா? விஞ்ஞானத்திற்கு பணிந்து போகாத -குறைந்த பட்சம் இரகசியமாகவாவது- எதாவது மதகுருமார் உண்டா?

ஒரு புறத்தில் வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் நகரங்களில் பறவைகளின் பாடல்களையும், மயில்கள் போக்குவரத்து சந்திப்புகளில் நடனமாடுவதையும், வானங்கள் அமைதியாக இருப்பதையும் பார்த்து சிலிர்க்காதவர்கள் யாரேனும் உண்டா? தற்போது கணிப்புகள் இறப்புகளின் எண்ணிக்கை லட்சங்களையும் அதைத் தாண்டியும் செல்லும் என்கின்றன. இந்த வைரஸ் உலக வாணிப தடங்கள், சர்வதேச மூலதனங்கள் செல்லும் பாதையிலிலெல்லாம் சென்றுள்ளது. இந்த கிருமி கொண்டு வரும் பயங்கரமான நோய்  மனிதர்களை அவர்களின் நாடுகளிலும், நகரங்களிலும் வீடுகளிலும் முடக்கிக் போட்டுள்ளது.

ஆனால், மூலதனப் பாய்ச்சலை போலில்லாமல், இந்த வைரஸ் பரவுவதைத்தான் விரும்புமே தவிர லாபத்தை விரும்பாததால், தன்னையறியாமல், ஓரளவுக்கு (மூலதனப் பாய்ச்சலின் ) எதிர்த்திசையில் பயணிக்கிறது. இது குடியேற்ற கட்டுபாடுகள், பயோமெட்ரிக், டிஜிட்டல் கண்காணிப்பு இன்னும் இதைப் போன்ற அனைத்து வகையான புள்ளிவிவர  பகுப்பாய்வுகளை கேலி செய்யும் விதமாக, உலகின் பணக்கார நாடுகள், உலகின் பலம் வாய்ந்த நாடுகள், ஆகியவற்றை மிகவும் பலமாக தாக்கி, முதலாளித்துவ என்ஜினை பெரும் குலுக்கலுடன் நிறுத்தியுள்ளது. இது தற்காலிகம்தான் என்றாலும், இந்த இன்ஜினின் உட்பாகங்களை நாம் சோதிப்பதற்கும், அவை பற்றிய ஒரு கணிப்பிற்கு வருவதற்கும், நாம் இன்ஜினையே சரி செய்து ஓட்டிவிடலாமா அல்லது முற்றிலும் புதிய என்ஜின் வாங்க வேண்டுமா என்பது பற்றி நாம் முடிவெடுக்கவும் போதுமான கால அவகாசம் உள்ளது. 

இந்த கொள்ளை நோயைக் கட்டுபடுத்தும் அதிகார மையங்கள் யுத்தம் பற்றி பேசுவதில் விருப்பம் கொண்டவர்கள். அவர்கள் யுத்தம் என்ற வார்த்தையை தற்போது நோயைக் கட்டுபடுத்த பயன்படுத்துகிறார்களே, அது உருவகமாக அல்ல, மாறாக, அதன் உண்மையான அர்த்தத்திலேயே. ஆனால், உண்மையில் இது ஒரு யுத்தமாக மட்டும் இருந்திருக்குமானால், அமெரிக்காவைவிட தயாரிப்பில் மேம்பட்ட நாடு ஏதும் உண்டா? இந்த யுத்தத்தில் அதன் முன்னணி படைவீரர்கள் கோரும் ஆயுதங்கள் கையுறைகள், முகக்கவசம் போன்றவைகளாக இல்லாமல் துப்பாக்கிகள், ஸ்மார்ட் குண்டுகள், பதுங்குமிட அழிப்பான்கள், நீர்முழ்கிகள், போர் ஜெட் விமானங்கள் மற்றும் அணுகுண்டுகள் என்பதாக இருந்தால் அவற்றில் ஏதாவது தட்டுப்பாடுகள் இருந்திருக்குமா?

ஒவ்வொரு இரவும், நியூயார்க் கவர்னரின் பத்திரிக்கையாளர் சந்திப்பை உலகின் மறுபக்கத்திலிருந்து ஒருவித ஈர்ப்புடன், விளக்க முடியாத அனுபவத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.  நாம் புள்ளி விவரங்களை கவனிக்கிறோம், அமெரிக்காவில் மருத்துவமனைகளில் இடமின்றி நிரம்பி வழிவதைப் பற்றிய கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும், குறைவான ஊதியம் கொடுத்து, அதிக வேலை பார்க்கும் செவிலியர்கள் குப்பை தொட்டியின் உள்புறத்தில் போடப்படும் பைகளால் மாஸ்க் தயாரித்தும், பழைய மழை கோட்டுகளை உடற்கவசமாக பயன்படுத்தியும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது பற்றியும், அமெரிக்க மாகாணங்கள் இடையே வென்டிலேட்டர்கள் வாங்குவதில் ஏற்பட்ட போட்டிகள் பற்றியும், மருத்துவர்களிடையே எந்த நோயாளி உயிர் வாழ வேண்டும், எந்த நோயாளி இறக்க வேண்டும் என்ற கடினமான முடிவு எடுக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைமை குறித்தும் செய்திகளை கேட்கிறோம். நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம்,“ஓ கடவுளே இதுதான் அமெரிக்காவா!” என்று!

நமது கண் முன்னேயே காட்சிகள் விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், இது எதுவும் புதிதல்ல. அது பல ஆண்டுகளாகவே கட்டுபாட்டை இழந்து பாதாளத்தை நோக்கி இழுத்து செல்லும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கின்ற இரயிலின் சிதைந்த பாகங்கள். இந்த பிரச்னைக்கு முன்பே (வசதிகள் இல்லாத) நோயாளிகளை அமெரிக்க (தனியார்) மருத்துவமனைகள், அவர்கள் ஆபத்தான நிலையில் வந்து சேர்ந்த போதும் அவர்களை டிஸ்சார்ஜ் செய்து தெருமுனைகளில் இரகசியமாக கொண்டு இறக்கிவிட்ட காணொலி காட்சிகளை யாரும் மறந்து விட முடியுமா? 

அமெரிக்காவில் வசதி குறைவானவர்களுக்கு மருத்துவமனை கதவுகள் மூடிக்கொண்ட ஏராளமான சந்தர்ப்பங்கள் உண்டு. அவர்கள் எந்தளவிற்கு நோயினால் மோசமாக பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதோ அதனால் எந்தளவுக்கு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பதோ அங்கு பொருட்டல்ல. இந்த வைரஸ்களின் சகாப்தத்தில்- இதற்கு முன் அவ்வாறு இருந்ததில்லை- ஏழை மனிதர்களின் நோய், பணம் படைத்த சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இன்னும், இப்பொழுதுகூட, பெர்னி சாண்டர்ஸ், அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கோரிக்கையை வலியுறுத்திய செனட்டர், வெள்ளை மாளிகைக்கான போட்டியில் ஒரம்கட்டப்பட்டுள்ளார் அவருடைய கட்சியிலேயே. 

அப்படியெனில் என்னுடைய நாட்டை பற்றி, ஏழை-பணக்காரர் அடங்கிய எனது நாட்டை, இந்தியா பற்றி, என்ன சொல்வது? இது நிலப்பிரபுத்துவத்திற்கும், மத அடிப்படைவாதத்திற்கும், சாதிக்கும், முதலாளித்துவத்திற்கும் இடையே தொங்கிக் கொண்டிருக்கிறது, தீவிர வலதுசாரி இந்து தேசியவாதிகளால் ஆளப்படுகிறது. 

டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் மாநிலத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த போது, இந்தியாவில் பல லட்சக்கணக்கான குடிமக்கள், முஸ்லீம்களுக்கு எதிரான வெட்கக் கேடான பாரபட்சமான, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர்.   இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்கப்படுகிறார். அதாவது குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தாளியாக வந்த அமேசான் காடுகளை தின்றழிக்கும், கோவிட்19 என்பதையே மறுக்கும் பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சனோரா தில்லியை விட்டு சென்று சில நாட்களில். அடுத்த மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ பயணம் இருந்தது. அவரின் இந்தியப் பயணத்தின் போது அவருக்கு 10 லட்சம் பேர்களைக் கொண்ட வரவேற்பு குஜராத்தில்ஒரு விளையாட்டரங்கில்   நடத்தப்படும் என்ற உறுதிமொழியால் அவர் ஆசை காட்டப்பட்டிருந்தார். இவையனைத்தும் அதிக செலவு பிடித்தது, மற்றும் ஏராளமான காலத்தை எடுத்துக் கொண்டது.

அதற்கு அடுத்து, பாரதிய ஜனதா கட்சி தனது வழக்கமான விளையாட்டை நடத்தாவிட்டால் நிச்சயம் தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலையில் தில்லித் தேர்தல்கள் நடக்க இருந்தன. அது தன்னிடம் எதிர்பார்க்கப்பட்டதை செய்தது,எவ்வித கட்டுபாடும் இன்றி, இந்து தேசியவாத பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. அந்த பிரச்சாரம் முழுவதும் உடல்ரீதியான வன்முறைகள் மற்றும் “துரோகிகளை” சுட்டு வீழ்த்துவது வரை பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.  எவ்வாறாயினும், அது தோற்றது. அந்தத் தோல்விக்கு தில்லியின் முஸ்லீம்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு அதற்கான தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்துத்வா கும்பல்கள், காவல்துறையினரின் பக்கபலத்தோடு வடகிழக்கு டெல்லியில், வீடுகள், கடைகள், மசூதிகள் மற்றும் பள்ளிகளை தீயிட்டு கொளுத்தினர். இந்த தாக்குதலை எதிர்நோக்கியிருந்த முஸ்லீம்கள் திருப்பி தாக்கினர். 50க்கும் அதிகமான இந்துக்களும் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டனர். 

அந்தந்த பகுதிகளில் உள்ள இறந்தவர்கள் புதைக்குமிடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தஞ்சம் புகுந்தனர். அதிகாரிகள் கோவிட் 19 குறித்து முதல் கூட்டம் நடத்தப்பட்ட போது,அருவருப்பான, நாற்றமெடுக்கும் நகரின் கழிவு நீர்ப் பாதைகளிலிருந்து, சிதைக்கப்பட்ட உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கை கிருமி நாசினி(ஹேண்ட் சானிடைசர்) என்று ஒன்று இருப்பதை  மக்கள் முதல் முதலாக கேட்டறிந்தனர். 

மார்ச் மாதமும் மிகவும் பரபரப்பான மாதம்தான். முதல் இரண்டு வாரமும் மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு அதற்கு பதிலாக அங்கு பாஜக அரசு நிறுவுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மார்ச் 11ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு(டபிள்யு ஹெச்.ஓ.) கோவிட்-19 உலக கொள்ளை(தொற்று) நோய் என அறிவித்தது. இரண்டு நாள் கழித்து மார்ச்13 தேதி சுகாதார அமைச்சகம்,“இது ஒரு மருத்துவ அவசர நிலை இல்லை” என அறிவித்தது. 

இறுதியாக, மார்ச் 19ஆம் தேதி இந்திய பிரதம மந்திரி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பிரான்ஸ் மற்றும் இத்தாலியிடமிருந்து நடைமுறைகளை கடன் வாங்கினார். அவர் “சமூக விலகலின்” தேவை குறித்து நமக்கு தெரிவித்தார்(சாதி பிரிவுகளை கடைபிடிக்கும் ஒரு சமூகத்தில் இது எளிதில் புரிந்து கொள்ள முடிவது). மேலும், அவர் மார்ச் 22 தேதி ஒரு நாள் “மக்கள் ஊரடங்கு” நடத்த அழைப்பு விடுத்தார். அவர் தனது அரசு இந்த நெருக்கடியை கட்டுப்படுத்த என்ன செய்யப் போகிறது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை, ஆனால், அவர் மக்களை தங்கள் பால்கனியில் வந்து மணிகளையும், தட்டுகளையும் பானைகளையும் தட்டி சுகாதாரப் பணியாளர்களுக்கு வணக்கம் தெரிவிக்க சொன்னார். 

அவர் சொல்லவிட்டது, அந்தக் கணம் வரையில் இந்திய பாதுகாப்பு சாதனங்களை, சுவாச கருவிகளை இந்திய சுகாதாரப் பணியாளர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் சேமித்து வைப்பதற்கு பதிலாக ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது என்பது.

ஆச்சர்யப்பட எதுவுமின்றி, நரேந்திர மோடியின் வேண்டுகோள் மிகுந்த உற்சாகத்துடன் நிறைவேற்றப்பட்டது. பானைகளை தட்டிக் கொண்டு பேரணிகளும், நடனங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றன. இதில் எதிலும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்த நாட்களில், ஆட்கள் மாட்டுச் சாண டிரம்களில் குதித்து குளித்தனர். பாஜக ஆதரவாளர்கள் மாட்டு மூத்திர பார்ட்டிகள் நடத்தினர். இவர்களால், பின்தங்கிவிடக் கூடாது என்று முஸ்லீம்கள் வைரஸ்க்கு இறைவனே விடை என்றும், ஆகவே, நம்பிக்கையாளர்கள் மசூதிகளில் பெரிய எண்ணிக்கையில் கூட வேண்டும் என அழைப்பு விடுத்தனர். 

மார்ச் 24 இரவு 8 மணிக்கு மோடி டிவியில் மீண்டும் தோன்றி அன்று நள்ளிரவிலிருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமைலாக்கப்படுகிறது என்று அறிவித்தார். சந்தைகள் மூடப்படும். அனைத்து போக்குவரத்தும், தனியார் மற்றும் பொதுத்துறை அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

அவர் இந்த முடிவை பிரதம மந்திரியாக எடுக்கவில்லை என்றும், குடும்பத்தின் மூத்த உறுப்பினராக எடுப்பதாகவும் தெரிவித்தார். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், 138 கோடி மக்களின் நாடு எந்த தயாரிப்பும் இன்றி 4 மணி நேர அவகாசத்துடன் அதன் அனைத்து செயல்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்படிப்பட்ட முடிவை அவரைத் தவிர யார் எடுக்க முடியும்? அவர் எடுத்த நடவடிக்கைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்றால், குடிமக்கள் ஒரு விரோதிகள் படை போலவும், அவர்களை எப்போதும் நம்ப முடியாது போலவும், ஆகவே அவர்கள் எதிர்பாராத நேரத்தில், அவர்களை கொரில்லா தாக்குதல் போல் மறைந்திருந்து தாக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது போலிருந்தது. 

நாம் பூட்டி வைக்கப்பட்டோம். 

பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை விரும்பும் மனிதர், எல்லா காட்சிகளுக்கும் தாயான இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.  திகைத்துப் போன உலகம் கவனித்துக் கொண்டிருந்தது, இந்தியா தன்னைத் தானே அவமானகரமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது-அதன் கொடூரமான கட்டமைப்புகள், சமூக மற்றும் பொருளாதார அசமத்துவம், மற்றும் பாதிக்கப்படும் மக்களைப் பற்றிய அதன் கடுமையான அலட்சியம் ஆகியவற்றை. 

இந்த ஊரடங்கு எப்படி இருக்கிறது என்றால், ஒரு இரசாயன பரிசோதனை செய்யும் போது எதிர்பாராமல் அதில் மறைந்துள்ள பொருட்கள் எல்லாம் ஒளிரத் தொடங்கினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கிறது. கடைகளும், உணவகங்களும், தொழிற்சாலைகளும் மற்றும் கட்டுமானத் தொழிலும் மூடப்பட்ட நிலையில், செல்வந்தர்களும், மத்தியதர வர்க்கமும் கேட்டட் கம்யூனிட்டிகளில் தங்களை மூடிக் கொள்ள, நமது நகரங்களும், பிரம்மாண்ட மாநகரங்களும் தொழிலாளி வர்க்க குடிமக்களை வெளியேற்றத் தொடங்கின – அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்- அவர்களை அவை தேவையற்ற தேங்கிய பொருட்களைப் போல நடத்தின. 

பலர் அவர்களுடைய முதலாளிகளாலும், வீட்டு உரிமையாளர்களாலும் விரட்டப்பட்டனர், பல பத்து லட்சம் வறிய மக்கள், பசியில் உள்ளவர்கள், குடிக்க தண்ணீர்கூட கிடைக்காதவர்கள், வயதானவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், பார்வையிழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், போக்கிடம் அற்றவர்கள் பொது போக்குவரத்து இல்லாமையால், தங்கள் வீடுகளை நோக்கி ‘நீண்ட பயணம்’ மேற்கொள்ளத் தொடங்கினர். அவர்கள் பல நாட்களாக தங்கள் ஊர்களான பதாவுன், ஆக்ரா, அசம்கர்க், அலிகார், லக்னோ, கோரக்பூர் ஆகிய நூற்றுக்கணக்கான கி.மீ. அப்பால் உள்ள இடங்களை நோக்கி பயணித்தனர். சிலர் வழியிலேயே மரித்துப் போயினர். 

தங்கள் ஊர்களுக்கு செல்வதால் மெல்லச் சாவதற்கு சாத்தியம் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். தாங்கள் வைரசையும் உடன் எடுத்துச் செல்கிறோம் என்பதும், அதன் மூலம் தங்கள் குடும்பங்கள், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் தொற்றுக்கு ஆளாகலாம் என்பதும், ஒருவேளை தெரிந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் தவித்துப் போய் தேடியது எல்லாம், கொஞ்சம் தெரிந்தவர்கள் அருகாமை, ஒரு தங்குமிடம் மற்றும் கொஞ்சம் கவுரமாக நடத்தப்படுவது, இவற்றோடு உணவு இவைகளைத்தான், ஒருவேளை அன்பு இல்லாவிடினும்கூட. 

அவ்வாறு அவர்கள் நடந்து கொண்டிருந்த போது அவர்களில்  சிலர், ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த கடப்பாடு கொண்ட காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர். இளைஞர்கள் உக்கி போட வைக்கப்பட்டனர் தவளை போல் குதிக்க வைக்கப்பட்டனர். நெடுஞ்சாலைகளில். பரேலி நகரின் வெளியில் இந்த குழுவினர் ஒரு கூட்டமாக சேர்த்து வைக்கப்பட்டு அவர்கள் மீது வேதிப் பொருட்கள் பீச்சியடிக்கப்பட்டது. 

சில நாட்கள் கழித்து, தப்பியோடும் மக்கள் கிராமங்களில் தொற்றை ஏற்படுத்தி விடுவார்கள் என  கவலைப்பட்ட அரசு, மாநில எல்லைகளை நடப்பவர்களுக்குகூட அடைத்தது. பல நாட்களாக நடந்த மக்கள் நிறுத்தப்பட்டனர், அவர்கள் எந்த நகரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நடந்து வந்தார்களோ அந்த நகரங்களின் முகாம்களுக்கே மீண்டும் கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

முதியவர்களிடையே இது  1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டபோது நடந்த மக்கட்தொகை புலம் பெயர்ந்ததை நினைவுபடுத்தியது. மக்கட்தொகை பெரும் எண்ணிக்கையில் கிளம்பியதற்கு இம்முறை மதம் காரணமில்லை, வர்க்கமே காரணம். இன்னமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இவர்கள் இந்தியாவின் மிகவும் வறியவர்கள் அல்ல. இவர்கள் சமீப காலம்வரை நகரங்களில் தங்களுக்கென வேலையும், திரும்பி செல்வதற்கு வீடுகளும் உடையவர்கள். வேலையில்லாதவர்கள், வீடற்றவர்கள், விரக்தியில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர் எங்கிருந்தார்களோ அங்கேயே தங்கிவிட்டனர், நகரங்களிலோ அல்லது இந்த துயரகரமான சம்பவத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நெருக்கடிக்கு உள்ளான ஊரகப் பகுதிகளிலோ. இவையனைத்தும் நடைபெற்ற காலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் கண்ணில் தென்படவில்லை.  தில்லியில் நடைபயணங்கள் ஆரம்பித்த போது, நான் அடிக்கடி எழுதும் ஒரு பத்திரிக்கையின் பாசை எடுத்துக் கொண்டு தில்லி - உத்திரபிரதேசம் எல்லையில் உள்ள காசிபூர் சென்றடைந்தேன். 

அங்கு காட்சிகள் விவிலியத்தில் உள்ளது போல் இருந்தன. பைபிள் அங்கு இருந்ததைப் போன்ற எண்ணிக்கைகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தனிமனித விலகல் என்ற நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கிற்கு எதிர்நிலையில் - நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள். இது இந்தியாவின் நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் பொருந்தும். நகர்களின் பிரதான சாலைகள் காலியாக இருந்தன, ஆனால், ஏழைகள் சேரிகளிலும், குடிசைகளிலும் அடைத்து போடப்பட்டனர். 

நடந்து சென்றவர்களில் நான் பேசிய ஒவ்வொருவரும், வைரஸ் பற்றிய கவலையைக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் அது உண்மையான பயமாகவோ அல்லது அவர்களது வாழ்வை அலைக்கழிப்பதாகவோ உள்ளது. அதைவிட, அவர்கள் வரவிருக்கும் வேலையிழப்பு, பட்டினி, மற்றும் காவல்துறையின் வன்முறை ஆகியவற்றைப் பற்றியே மிகவும் கவலைப் பட்டனர். அந்த நாளில் நான் பேசியவர்களில், அவர்களில் முஸ்லீம் டெய்லர் குழுவும் அடங்கும், அவர்கள் சில வாரங்களுக்கு முன் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்கள், அவர்களில் ஒருவரது வார்த்தைகள் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அவர் ஒரு தச்சர், பெயர் ராம்ஜித், அவர் நேபாள எல்லையில் உள்ள கோரக்பூர் வரை நடந்தே செல்ல தீர்மானித்தவர். 

“மோடிஜி ஒரு வேளை இந்த முடிவை எடுத்த போது, அவரிடம் எங்களைப் பற்றி யாருமே சொல்லவில்லை போலும். ஒரு வேளை அவருக்கு எங்களைப் பற்றி தெரியாதிருக்கலாம்” என்றார். 

இதில் உள்ள “எங்கள்” என்பதற்கு பொருள் கிட்டதட்ட 460 மில்லியன் மக்கள். 

இந்தியாவில் மாநில அரசுகளே (அமெரிக்கா போலவே) அதிக இதயப்பூர்வமாக,  அதிக புரிதல்களுடன், செயல்படுகின்றன. தொழிற்சங்கங்கள், தனிநபர்கள் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து உணவு மற்றும் அவசர தேவைப் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின்(மாநில அரசுகளின்) பதற்றமான ‘நிதி வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு மிகவும் சாவகாசமாக மத்திய அரசு கவனம் செலுத்தியது. அப்போதுதான் அவர்கள் பிரதம மந்திரி தேசிய பேரிடர் நிதியில் உடனடியாக எடுத்துக் கொடுக்க பணமாக இல்லை என்பதை கண்டறிந்தனர். அதற்கு பதிலாக நலம் விரும்பிகளிடமிருந்து பெற்ற பணம் சற்றே மர்மமான பிஎம்-கேர்ஸ் என்ற ஏற்பாடுக்கு  பாயத் தொடங்கியது. மோடியின் படம் போட்ட உணவு பொட்டலங்கள் வெளிவரத் தொடங்கின.

இவைகளைத் தவிர பிரதமர் தனது யோக நித்திரை காணொலிகளை வெளியிட்டார், அதில் கட்டுமஸ்தான் உடல் கொண்ட மோடியை மார்ப் செய்த கார்ட்டூன் சித்திரம் யோகா செய்வது வெளியிடப்பட்டு மக்கள் தனிமையில் வீட்டினுள் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தன்னையே மோகிக்கும் இந்த போக்கு மிகவும் தொந்தரவு செய்கிறது. ஒரு வேளை இதில் ஒரு வேண்டுகோள் ஆசனாவை மோடி இணைத்து, அதில் மோடி பிரஞ்சு அதிபரை என்ன வேண்டலாம் என்றால், மிகவும் தொந்திரவு செய்யக்கூடிய ரபேல் ஜெட் விமான ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு அதற்கு பதிலாக அதற்கான நிதியான 7.8 பில்லியன் யூரோக்களை சில மில்லியன் மக்களின் பசியைப் போக்க அவசரகால நிதியாகப் பயன்படுத்தியிருக்கலாம். நிச்சயமாக பிரான்ஸ் அதனை புரிந்து கொள்ளும். 

ஊரடங்கு உத்தரவு அதன் இரண்டாவது வாரத்தை அடைந்த போது பொருட்களின் சப்ளை சங்கிலித் தொடர் அறுபட்டு போனதால், மருந்து மற்றும் அவசியமான பொருட்கள் குறையத் தொடங்கின. ஆயிரக் கணக்கான லாரி ஓட்டுனர்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மிகக் குறைவான தண்ணீர் மற்றும் உணவுடன் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றனர். அறுவடைக்கு தயாரான பயிர்கள் மெதுவாக வயல்களில் தேங்கத் தொடங்கின.

 இங்கு பொருளாதார நெருக்கடி உள்ளது. அரசியல் நெருக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதான ஊடகங்கள், கோவிட் பற்றிய கதைகளை  அவர்களின் 24x7 விஷம் கக்கும் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரத்தில் உள்ளடக்கிவிட்டனர். ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் தில்லியில் ஒரு கூட்டத்தை நடத்திய தப்ளிக் ஜமாத் என்னும் அமைப்பு, சிறந்த நோய் பரப்பாளராக மாற்றப்பட்டது. இது முஸ்லீம்களுக்கு களங்கம் கற்பிக்கவும், அவர்களை பூதங்களாக சித்தரிக்கவும் பயன்பட்டது. ஒட்டு மொத்தமான பிரச்சார தொனியைப் பார்க்கும் போது முஸ்லீம்கள் இந்த வைரசை கண்டுபிடித்து, அதனை வேண்டுமென்றே ஜிகாத் ஆக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதாகும். 

கோவிட் நெருக்கடி இன்னமும் வரலாம், வராமலும் போகலாம். நமக்கு தெரியாது. அது எப்போதாவது வருமென்றாலும், அதனை தகுந்த முறையில்,ஏற்கனவே நிலவும் நமது மத, சாதி மற்றும் வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் காலம் காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள எண்ணங்களின் அடிப்படையில் அவற்றை சந்திப்போம்.

இந்தியாவின் பொது மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் - ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுப் போக்கு, ஊட்டசக்து குறைபாடு மற்றும் இதர சுகாதார பிரச்சனைகளால் 10 லட்சம் குழந்தைகள் இறந்து போவதை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவை (இது உலகில் மொத்தம் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு). 

அனைத்து சுகாதாரப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் மருத்துவமனைகள் வைரஸ் தொற்றுக்காக மாற்றப்பட்டுள்ளன. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புகழ்பெற்ற விபத்து சிகிச்சை பிரிவு தற்போது மூடப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான புற்று நோயால் பீடிக்கப்பட்டவர்கள், அந்த பெரிய மருத்துவமனையின் வெளியில் உள்ள சாலையிலேயே தங்கியிருப்பவர்கள், அவர்களை புற்று நோய் அகதிகள் என்பர், அவர்களை விலங்குகளை விரட்டுவது போல் விரட்டிவிட்டனர். இந்தக் காட்சிகள் மனச்சாட்சியை தட்டியெழுப்பியுள்ளன.

வரலாறு நெடுகிலும், இதுபோன்ற கொள்ளை நோய்கள், மனிதகுலத்தை கடந்த காலத்திலிருந்து முறிவு ஏற்படுத்தி புதிய உலகைப் பற்றி கனவுகளையே விதைத்திருக்கிறது. இதுவும் அதிலிருந்து மாறுபட்டதல்ல. இது ஒரு முகப்பு, அல்லது ஒரு உலகிலிருந்து மறு உலகிற்கு செல்வதற்கு வாசல் என கொள்ளலாம். 

நாம் அந்தக் கதவின் வழியாக நடந்து செல்லும் போது, நமது தப்பெண்ணம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் சடலங்களை இழுத்து செல்லலாம், நமது அடங்காத லாபவெறி மற்றும் இடையறாத செல்வம் சேர்த்தல், நமது தரவுகளையும், செத்துபோன சிந்தனைகளையும், இறந்து போன நதிகளையும் புகைபடிந்த வானத்தையும் நாம் நமக்கு பின்னே சுமந்து செல்லலாம். அல்லது நாம் எந்த சுமையும் இன்றி சிறிய பயணப்பையுடன் புதிய உலகு பற்றிய சிந்தனையுடன் காற்று போல எடையின்றி அந்த கதவினை கடக்கலாம். அதற்காக போராடத் தயாராக இரு!

பைனான்சியல் டைம்ஸ் ஏடு 3 ஏப், 2020
தமிழில் : க.ஆனந்தன்

 

;