tamilnadu

img

தமிழக மக்களின் தீர்ப்பும், சிலரின் தகிப்பும்

இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருமுறைக்குப் பலமுறை நன்கு சிந்தித்து தீர்மானகரமாக தீர்ப்பளித்துள்ள தமிழக மக்களை கண்டு உள்ளூர உதறல் எடுத்துள்ள பாஜக கூட்டம், ஒப்பாரி வைக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்க மனமில்லாமல் அவதூறுகளை அள்ளி வீசுகிறது. அவர்களின் கடும் கோபம் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் மீதும் தமிழக முற்போக்கு பாரம்பரியத்தின் மீதும் பாய்ந்துள்ளதையும் பார்க்கமுடிகிறது.

தமிழக மக்களை பார்த்து பக்தியில்லாதவர்கள், கடவுள் இல்லை என்பவர்களுக்கு ஓட்டுப்போட்டு விட்டார்கள், சிந்திக்கத் தெரியாதவர்கள், ஊழலை ஆதரிப்பவர்கள், நாட்டுக்காக வாக்களிக்காதவர்கள், நோட்டுக்காக வாக்களித்தவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள், இனி தமிழக மக்கள் மோடியிடம் எதையும் கேட்கக் 
கூடாது, நீங்கள் ஓட்டுப்போட்டு அவர் ஜெயிக்கவில்லை, தமிழகத்திற்கு எந்த திட்டமும் வராது, தமிழக மக்கள் தவறு செய்து விட்டார்கள், அவர்கள் தேர்வுசெய்த 38 நாடாளு
மன்ற உறுப்பினர்களும் வேஸ்ட் என்று பகிரங்கமாக ஊளையிட்டு அழுது புலம்புவதை, காணமுடிகிறது.

இந்த புலம்பல்களை அவர்கள் பேஸ்புக், வாட்ஸ்ஆப், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளாக, மீம்ஸ்களாக வெளியிட்டு தங்களின் புண்பட்ட மனதை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வடநாட்டு மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்களாம், ஆனால் தமிழக மக்களின் தீர்ப்பை மட்டும் ஏற்கமாட்டார்களாம். பாஜகவுக்கு வாக்களித்வர்கள்தான் உண்மையான இந்தியர்கள், பாஜகவை ஆதரிக்காதவர்கள் இந்தியர்களே இல்லை என்கிற அளவிற்கு அவதூறுப் பிரச்சாரங்களை அள்ளிவிட்டு மக்களை குழப்புகிறார்கள்.

உண்மையில் தமிழக மக்கள் தான் மோடியின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சிகுறித்த தங்களது சரியான மதிப்பீட்டை தேர்தலில் ஓட்டுகள் மூலம் சரியாக தெரிவித்துள்ளார்கள். பாஜக மற்றும் மோடியின் போய்ப் பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கிய தமிழக மக்கள் இப்படி ஒரு சரியான தீர்ப்பை நாடாளுமன்றத் தேர்தலில் அளிக்காமல் போயிருந்தால் அது உலக அரங்கில் இந்தியாவிற்கே ஒரு தலைகுனிவாகக்கூட போயிருக்கக் கூடும்.

இந்திய தேச மக்கள் முழுமையும் மோடியின் பொய்ப் பிரச்சாரத்திற்கு, அவதூறுகளுக்கு, இந்துத்துவா மதவெறி உணர்வுகளுக்கு, குறுகிய தேசிய வெறிப் பேச்சுக்களுக்கு ஆளாகிவிட்டார்களோ.! என்ற அவப்பெயரைத் துடைத்து உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத்தை காத்துநிற்கிறார்கள் தமிழர்கள்.ஏனெனில் உலக பிரசித்திபெற்ற பத்திரிகைகளான லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் ஏடும், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் ஏடும் இந்தியத் தேர்தலில் மோடி பெற்ற வெற்றி என்பது உலகத்திற்கே அவமானம் என்று கூறியுள்ளது. அந்த ஏடுகள் மோடி தேர்தலில் மேற்கொண்ட பொய்ப்பிரச்சாரங்களை, அவதூறுகளை, இத்துத்துவா மதவெறிப் பேச்சுக்களை, குறுகிய தேசிய வெறி தூண்டுதல்களை வரிசையாக பட்டியலிட்டு சுட்டிக்காட்டியுள்ளன.

பாஜக கூட்டம் கூறுவதைப்போல் தமிழர்கள் அனைவரும் பக்தி இல்லாதவர்கள் அல்லர், மாறாக மதுரை சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கில் 
கூடினாலும் மாற்று மதத்தவருக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தாதவர்கள், பாஜக கூறும் போலீஸ் படையுடன் கூடிய மதவெறி பிள்ளையார் ஊர்வலத்தை ஆதரிக்காத சுத்தமான பக்தர்கள் தமிழர்கள்.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தமிழர்கள் ஓட்டுப்போட்டுவிட்டதாக அவர்கள் கூக்குரலிடுவதை காணமுடிகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவரும் இல்லாதவரும் இருவரும் இந்திய நாட்டில் வாழத் தகுதிபடைத்தவர்கள் என்ற நமது அரசியல் சாசணத்தின் கூறுகளை நீக்கமற அறிந்த தமிழர்கள் கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கைகளை அரசியலுடன் இணைத்தே காலம்பூராவும் அரசியல் ஆதாயம் அடைந்துவரும் பாஜகவையும் அதனுடன் சேர்ந்த அதிமுகவையும் ஒருசேர சேர்த்தே தோற்கடித்துள்ளனர்.

பாஜகவின் ரபேல் ஊழலைப் பற்றித்தெரிந்த காரணத்தாலும், ஊழலின் தலைவர்களாகவே வலம் வரும் தமிழக அதிமுக ஆட்சியாளர்களையும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் விரட்டி, விரட்டி துரத்தியுள்ளார்கள்.மோடியிடம் இனி எதையும் கேட்கக்கூடாது என்கிறார்கள் சங்கிகள், இதற்கு முன்பு மட்டும் தமிழகத்திற்கு எதைக்கொடுத்தார் மோடி, சென்னைப் பெருவெள்ளம், ஒக்கிப்புயல், வர்தா புயல், கஜா புயல் இப்படி பல இன்னல்களில் தமிழக மக்கள் தவித்தபோது மோடியின் அரசு தமிழகத்திற்கு என்ன? கூரையைப்பிரித்தா கொட்டியது, இப்போதும் அதுதான் தொடர்கதையாகப்போகிறது.

மத்திய அரசின் எந்த திட்டமும் இனி தமிழகத்திற்கு கிடைக்காது என பாஜக தலைவர்கள் மட்டுமல்ல தேமுதிக பிரேமலதாவும் கூறுகிறார். மத்திய அரசின் எந்த திட்டமாவது தமிழக மக்களை காப்பாற்றியதா? என்று பார்த்தால் “உபகாரம் செய்யவில்லை என்றாலும், உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாமே.!” என்பது போல மோடி அரசின் எல்லாத் திட்டங்களும் தமிழக மக்களுக்கு எதிராகத்தானே இருக்கிறது, அந்த திட்டங்கள் கிடைப்பதைவிட கிடைக்காமல் இருந்தால் எவ்வளவோ மேல் என்று தமிழக மக்கள் கூறுமளவுதானே இருக்கிறது.

ஸ்டெர்லைட், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச்சாலை, செயில் கேஸ் பைப்லைன், உயர்மின் கோபுரம் அமைத்தல், நூறுநாள் வேலை குறைப்பு, தனிநபர் வங்கிக் கணக்கில் கேட்காமலே பணம் எடுப்பது, நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, ஜிஎஸ்டி வரி, கேஸ்விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்கட்டணம், கேபிள் கட்டணம் உயர்வு இப்படி எந்த திட்டம் தமிழக மக்களை காப்பாற்றியது என்று பாஜக மற்றும் அதை ஆதரிப்பவர்கள் கூறமுடியுமா?

மேலும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான நல்ல திட்டங்களை நாடளுமன்றத்தில் வாதாடிப்பெறவும், மக்களுக்கு எதிரான மோடி அரசின் கொள்கைகளை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அம்பலப்படுத்தும் தைரியம் மிக்க அபார நாவன்மையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை தேர்வு செய்து தமிழக மக்கள் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளதால் அரண்டுபோயுள்ள பாஜவினர் அவர்களை பார்த்து வேறெதுவும் சொல்லமுடியாமல் “வேஸ்ட்” என்று நாமகரணம் சூட்டி அழைப்பதில்
இருந்தே நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால போராட்டக்குணமிக்க செயல்பாடுகள் பற்றி அவர்கள் அச்சத்துடன் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை முதலில் எதிர்த்து முழக்கமிட்ட வேலூர் புரட்சி நடந்த மண் தமிழ்மண். இப்படி வரலாறு நெடுக பல்வேறு வீரவரலாற்று மரபுகளை தன்னகத்தே கொண்ட தமிழகம் சிங்காரவேலர், வ.உ.சி, பெரியார், ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகிய தலைவர்களின் வழிவந்தது. அந்த முற்போக்கு மண்ணை பாசிச மதவெறி சக்திகள் அவ்வளவு எளிதாக கைப்பற்றி விடலாம் என்று கனவுகூட காணமுடியாது.

எனவே தான் கூறுகிறோம். தமிழக மக்கள் பாஜக கூட்டம் கூறுவதைப்போல் எந்த தவறையும் செய்யவில்லை. மாறாக மோடி அரசின் கடந்த ஐந்தாண்டுகால மக்கள்விரோத, தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சரியாக பொறுமையாக சிந்தித்து இந்தியாவின் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பாரம்பரியத்தை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் காத்துள்ளனர்.

===அந்தியூர் முருகேசன்====

;