tamilnadu

img

கொரோனாவுக்கு எதிரான பிரிக்ஸ் நாடுகளின் சாதனை - அதுல் அனேஜா

புதிய வளர்ச்சி வங்கியின் (NBD) நிதி கட்டமைப்பை நாம் இயற்கை பேரிடர்களை சமாளிக்க உதவும் மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனாகிருமிக்கெதிரான இவ்வுலகளாவிய போராட்டத்தில், வளர்ந்துவரும் பொருளாதாரங்கள், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா, இந்நோய் தொற்றினால் தளர்ந்திருக்கும் பல நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியா, இத்தருணத்தில், வேகமாக வளர்ந்துவரும் உலகின் மருந்தகம் எனும் பெயரை நிலைநாட்டியுள்ளது. உலகிலே ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிப்பில் முதலில் இருக்கும் இந்தியா, சார்க் நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மட்டுமல்லாது, ரஷ்யா, பிரேசில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அம்மருந்தை ஏற்றுமதி செய்துள்ளது. இது, இந்தியா பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து ஒரு மருந்து தயாரிப்புக் கூட்டணி/உடன்பாடு ஒன்றை முன்னெடுக்க, நல்ல சந்தர்ப்பத்தை அளித்துள்ளது. இக்கூட்டணி, தடுப்பூசிகள் தயாரிப்பு குறித்தும் முனைவுடன் ஆராயலாம்.

உலகின் தொழிற்கூடம்

கோவிட்-19 தொற்று குறித்து எச்சரிப்பு விடுப்பதில் தாமதித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு இருந்தும், சற்றும் தளராமல் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா,  உலகின் தொழிற்கூடம் எனும் தன் பலத்தைக் கொண்டு, திறம்பட செயல்பட்டுள்ளது. தரம் குறித்த விமர்சனங்கள் இருக்கும்போதிலும், சீனா, உலகம் முழுதும் பல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  முககவசம், கையுறை, தற்காப்பாடை மற்றும் சோதனைக் கருவிகளை அளித்து, இந்நோய்கெதிரான உலகின் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. அதன் ‘ஹெல்த் சில்க் ரோடு’ கொள்கையின் படி, உலகிலேயே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிய இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. சீனா அனுப்பிய 31 டன் எடையிலான முக கவசம், மருந்துகள், தற்காப்பாடைகள், சுவாசக் கருவி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மார்ச் 12-ஆம் தேதி ரோம் நகருக்கு சென்று சேர்ந்தது. ஆறு நாட்கள் கழித்து ஒரு சீனக் குழு நேராக மிலன் நகருக்குப் பறந்தது. விரைவிலேயே, சீனா ஐரோப்பா நோக்கி ஒரு வான்வழி மருத்துவ உதவிப் பாலம் அமைத்துவிட்டிருந்தது.

சொந்த மண்ணில் நோய்தோற்றுடன் போராடிக்கொண்டிருக்கிற, ரஷ்யாவும் தனது மருத்துவர்களையும் கிருமியியல் நிபுணர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தது. ‘ரஷ்யாவிலிருந்து அன்புடன்’ என்ற விமானக் குழு இத்தாலிக்கு அனுப்பப் பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வேண்டுகோளின் படி, மருந்துகளும், மருத்துவ நிபுணர்களும் ஏற்றிவந்த ரஷ்ய ஆன்டோனௌ-124, நியூ யார்க் நகரின் ஜான் கென்னடி விமானநிலையத்தில் தரையிறங்கியது. சோவியத் காலத்திலிருந்தே, ரஷ்யாவிடம்  உயிரியல் தாக்குதல், அணுக்கதிர்வீச்சு மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல் போன்ற அவசர நிலைகளைச் சமாளிக்கத் தேவையான உயர்தர சேவைகள் தயார் நிலையில் உள்ளன.

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தற்போதைய சுழற்சிமுறைத் தலைவரான தென்னாப்பிரிக்கா, கோவிட்-19-க்கெதிரான ஒரு அகில-ஆப்பிரிக்க திட்டத்தினை இயற்றிக்கொண்டிருக்கிறது. பிரிக்ஸ் நாடுகளில், பிரேசிலின் திட்டத்தில் மட்டுமே சிறிது திருத்தங்கள் தேவை. பயணத் தடை, ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனை ஆகியவற்றை செயல்படுத்துவதில் பிரேசில் காட்டும் தயக்கம் நோய்தொற்று அதிகமாக வழிவகுத்துள்ளது.

வருங்காலத்திற்கான மாதிரி

மனிதாபிமான உதவி மற்றும் இடர்கால நிவாரணம் (Humanitarian Assistance and Disaster Relief - HADR) அளிப்பதில் தங்களது கூட்டு பலத்தினை வெளிப்படுத்திய கையோடு பிரிக்ஸ் நாடுகள், கோவிட்-19க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் தங்களது செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிய ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுடன் பணியாற்றவேண்டும். ஒரு சீரான மனிதாபிமான உதவி மற்றும் இடைக்கால நிவாரணக் கட்டமைப்பை உருவாக்க, பிரிக்ஸ்  நாடுகள் ஏற்கனவே உள்ள இடர்கால பணிகள் கட்டமைப்பை மறுசீரமைத்து, பலதரப்பட்ட இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கத் தேவையான வளங்கள் மற்றும் நிதியை ஒதுக்கி, வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய தெற்கு மீது சிறப்பு கவனத்துடன் செயல்பட வேண்டும். 

ஷாங்காயில் அமைந்த பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி (NBD), கோவிட்-19 சூழ்நிலையைச் சமாளிக்கத் தேவையான நிதியொதுக்குதலில் எடுக்கவேண்டிய பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டது. ஏப்ரல் மாதம் நடந்த நிர்வாகிகள் மன்ற சந்திப்பில், வங்கித் தலைவர்  கே.வி.காமத், சீனா மற்றும் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு 1 பில்லியன் டாலர் அவசரக் கடன் அளிப்பது மட்டுமல்லாது, பிரிக்ஸ் நாடுகளுக்கு மேலும் 10 பில்லியன் டாலர் ‘இடர்கால உதவி’ நிதி ஒதுக்குமளவிற்கு புதிய வளர்ச்சி வங்கிக்கு நிதிவலிமை உள்ளது என்று அறிவித்தார். இந்நோய் தொற்றை சமாளிக்க உகந்த புதிய வளர்ச்சி வங்கியின் நிதி மேலாண்மை கட்டமைப்பை இனி வரும் இயற்கை பேராபத்துகளைச் சமாளிக்க ஏதுவான மாதிரியாகக் கொள்ளலாம்.

நன்றி :  தி (இந்து ஆங்கிலம்)
- தமிழில் : விகாஷ் ஷிவ்ராம்


 

;