tamilnadu

img

நீரின்றி அமையாது உலகு

நாம் வசிக்கின்ற பூமி பல கோடி ஆண்டுகள் வயதினைக் கொண்டது. இந்த பூமிக்கு நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மிக முக்கியமானவை.

தண்ணீர்

நீர் பற்றாக்குறை அபாயகரமான நிலையில் உள்ளது. உலக அளவில் 200 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரம் குழந்தைகள் நீர் சம்பந்தப்பட்ட நோயினால் இறக்கின்றனர். தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகள், தெற்கு ஆசிய நாடுகளில் தற்போது தண்ணீர் பிரச்சனை கள் உள்ளன என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இந்தி யாவில் 40 சதவீதம் மக்களுக்கு சுத்தமான நீர் கிடைக்க வில்லை. தினசரி 160 குழந்தைகள் நீர் சம்பந்தமான நோயினால் இறக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், சாலைகள் அமைக்கும் போது சின்ன கால்வாய்கள், ஓடைகள், நீர்வழித்தடங்கள், ஏரிகள், குளங்கள், சின்ன சின்ன நீர் நிலைகள், கோடிக்கணக்கான குட்டி நீர்வழித்தடங்களை நாம் இழந்து வருகிறோம். 

கடல்நீர்

உலகில் நான்கில் மூன்று பங்கு கடல் நீர், ஒரு பங்கு நிலம் உள்ளது. 97.5 சதவீதம் நீர் கடலில் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் நீரில் 2 சதவீதம் நீர் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் உள்ளது. 0.25 சதவீதம் நீர் பூமிக்கு அடியில் உள்ளது. 0.25 சதவீதம் நீர் மட்டுமே ஆறுகள் மற்றும் குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ளது.  கடலில் பல ஆறுகளின் கழிவு நீர் வந்து சேர்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மீன் வகைகள் கடலில் உயிர் வாழ்கின்றன. மீன்களின் எண்ணிக்கையை விட கடலில் தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளது. கடல் உலகின் மிகப்பெரிய குப்பை தொட்டியாக மாறி வருகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய 3.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்தி செய்ய 12 லிட்டர் தண்ணீர் தேவைப்படு கிறது. ஆக ஒரு லிட்டர் தண்ணீருடன் பாட்டில் உற்பத்தி செய்ய சுமார் 15 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 

ஆகாயம்

ஆகாயம் நச்சுபுகைகளால் நிரம்பியுள்ளது. பூமியிலி ருந்து ஆகாயம் வரை உள்ள காற்று மாசுபட்டுள்ளது. பசுமை  குடில் வாயுக்கள் ஆகாயத்தில் உள்ளது. பசுமைக்குடில் வாயுக்கள் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கு நன்மை செய்யும் வாயுக்களாகும்.  இந்த வாயுக்கள் சூரியஒளியின் வெப்பத்தை குறைத்து பூமிக்கு அனுப்புகிறது. பூமியிலி ருந்து நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சுவாயுக்கள் பசுமைக் குடில் வாயுக்களை கெட்டு போக செய்து அதன் அடியில் நச்சுவாயுக்கள் படிந்துள்ளன. இதனால் சூரியனிடமிருந்து வரும் ஒளி பூமியில் பட்டு மீண்டும் ஆகாயத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே பூமி வெப்பமாக மாறுகிறது. 

நிலம்

நிலம் மாசுபட்டுள்ளது. மண்வளம் கெட்டுப் போயுள்ளது. நகர்ப்புறமாக மாறுவதால் நிலம் மாறி வருகிறது. நிலங்கள் தொழிற்சாலைகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும், சாலை மற்றும் பாலம் அமைக்கவும் மாற்றப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்த போது 20 சதம் மக்கள் நகர்ப்புறத்திலும், 80 சதம் மக்கள் கிராமப்புறத்திலும் இருந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் நகர்ப்புறத்தில் 52 சதம் மக்களும் கிராமப் புறத்தில் 48 சதம் மக்களும், வாழ்ந்து வருகிறார்கள். இதனால் தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநக ரங்களில் 40 சதம் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லா மல் குடிசை பகுதியில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் நிலம் எதற்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வதால் நீர், நிலம், காற்று, ஆகாயம் பாதிக்கப்பட்டுள் ளது. ஏராளமான நீர்வழித்தடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லுயிர்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே நிலம் எதுக்கு தேவையோ அதற்கு வசதியாக நிலம் மாற்றப்படுகிறது. 

காடுகள்

காடுகள் இல்லையென்றால் நாம் வாழ முடியாது. இப்போது நாம் நான்கில் மூன்று பங்கு காடுகளை இழந்துள் ளோம். கார்பன் டை ஆக்சைடை மரங்கள் எடுத்துக் கொள்கின்றன. மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனை மரங்கள் வெளியிடுகின்றன. காடுகள் மூலம் மனிதனுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் ஏராளமான உணவு பொருட்கள் கிடைக்கின்றன. அடர்ந்த காடுகள் மூலம் ஏராள மான மழை பொழிவு கிடைக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழித்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

நிலத்தடி நீர்

நிலத்தடி நீர் இல்லையென்றால் இந்தியாவின் பொரு ளாதாரம் பாதிக்கப்படும். 70 சதம் விவசாயம் நிலத்தடி நீரை நம்பியுள்ளது. 80 சதம் மக்கள் குடிநீருக்காக நிலத்தடி நீரை பயன்படுத்துகிறார்கள். 90 சதம் தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை நம்பியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 சதம் திருவாரூர் மாவட்டத்தில் 60 சதம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 80 சதம் நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது. திருப்பூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் 1500 அடிக்கு கீழ் சென்றுள்ளது. தெற்கு ஆசியாவின் உயர்நிலை நீர்தேக்கத்தொட்டி என்பது இமயமலையாகும். தென்இந்தியாவின் உயர்நிலை நீர்தேக்க தொட்டி என்பது மேற்கு தொடர்ச்சி மலையாகும். இங்கு உள்ள பனிப்பாறைகள், மழைப்பொழிவுகளால் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, மகாநதி, கிருஷ்ணா, கோதா வரி, காவிரி உள்ளிட்ட நதிகளுக்கு நீர் வருகிறது. காடுகளை மேலும் நாம் இழந்தால் மழையே வராது. பூமியிலுள்ள நீர், நிலம், காற்று, ஆகாயம், காடுகளை அழித்தால் இன்னும் இருபது ஆண்டுகளில் மனிதன் வாழ தகுதியற்ற இடமாக பூமி மாறிவிடும் என்று ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது.  நீடித்த வளர்ச்சிக்கு இயற்கையை பாதுகாத்த வளர்ச்சி தான் மிக முக்கியம். எனவே, நீர், கடல் பகுதி, விவசாயம், காடு கள், வாழுமிடம் பாதுகாக்கப்பட வேண்டும். 

காவிரி

காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டி.எம்சி தற்போது 60 டி.எம்.சி நீரை மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. ஆண்டுக்கு 0.4 சதம் அணையின் கொள்ளளவு குறைந்து வருகிறது. அணை யில் ஏராளமான மண், வண்டல் படிந்து மேடாகிவருகிறது. காவிரியின் உபநதிகளான நொய்யல்,பவானி, அமரா வதி உள்ளிட்ட நதிகளுக்கு நீர் வருவதில்லை. திருப்பூர், கோவை மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பனியன், ஜட்டிகளால் 35 ஆயிரம் கோடிக்கு அந்நிய முதலீடு கிடைக்கிறது. ஆனால் அதற்கு பயன்படுத்தப்படும் கெமிக் கல்களால் நொய்யல் ஆறு இல்லாமலே போய்விட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்த பாளையம் அணை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலி தாவால் 1991ல் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததே கிடையாது.  காவிரி ஆற்றுப் படுகையில் 9900 தொழிற்சாலைகள் உள்ளன. நூற்றுக்கணக்கான பெரிய, சிறிய நகரங்கள், கிராமங்கள் உள்ளன. ஆற்றின் மிகப் பெரிய சொத்து மணல். ஆற்றில் மணல், நீர் இருந்தால் தான் ஆறு. இந்த இரண்டும் இல்லையென்றால் அது இறந்த ஆறு. தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவுகளாலும், மணல் மாபியாக்களாலும் ஆக்கிரமிப்புகளாலும் ஆற்றின் மண லையும், அதன் அகலத்தையும் நாம் இழந்துள்ளோம். 

வறட்சி, வெள்ளம்

கடந்த 100-150 வருடங்களில் மழையின் புள்ளிவிவரம் என்னவென்றால் 2 முதல் 3 வருடம் மழை குறைந்தால் அடுத்த 2 வருடம் மழை நன்றாக பெய்யும். 1901-2014 வரை மழை விபரத்தில் சில இடங்களில் அதிகம் மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், திருவாரூரில் நல்ல மழை பெய்துள்ளது. பருவ நிலையை சரியாக கணக்கிட வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக அரசு யாகம் நடத்தி வருகிறது. தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்க ளில் பெய்யும். இந்த பருவகாலம் நல்ல மழை பெய்யும். பெரிய பாதிப்புகள் தமிழகத்தில் இருக்காது. ஆனால் வடகிழக்கு பருவமழை புயலோடு தான் பெய்யும். பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.  2018ம் ஆண்டு காவிரியில் 180 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்தது. ஆனால் மறுபுறத்தில் வறட்சி பகுதியாக இருந்தது. இதற்கு காரணம் என்னவென்றால் கல்லணை க்கு கீழ் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்த கால்வாயின் நீளம் 46 ஆயிரம் கி.மீ உள்ளது. இப்போது இந்த கால்வாயில் பாதி காணாமல் போய்விட்டது. 950 ஏரிகள் கல்லணைக்கு கீழ் உள்ளது. ஆனால் ஏரிக ளுக்கு தண்ணீர் செல்வதற்கு கால்வாய்கள் இல்லை. காவிரி யை நவீனப்படுத்த முன்பு 13 ஆயிரம் கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. இப்போது 7 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கிட தமிழக அரசு கேட்டுள்ளது. இந்த திட்டங்கள் முழுமையாக நடைபெறாததின் விளைவே காவிரியில் தண்ணீர் கடலில் கலக்கிறது. ஏரிகள், குளங்கள் வறண்டு மறுபுறத்தில் வறட்சி ஏற்படுகிறது. 

நீர்வழிச்சாலை
நீர்வழிச்சாலை என்று புதிதாக கோஷம் தற்போது கிளம்பியுள்ளது. நீர்வழிச்சாலை அமைக்க வேண்டுமென் றால் ஆறு முழுவதும் குறைந்தபட்சம் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் ஆற்றில் செல்ல வேண்டும். அதுவும் ஆண்டு முழுவதும் செல்ல வேண்டும். ஆனால் அப்படி செல்லுகின்ற நிலை யில் இந்திய, தமிழக ஆறுகளில் தண்ணீர் இல்லை. எனவே, நீர்வழிச்சாலை என்பது சாத்தியமற்ற கோரிக்கையாகும். 

நீர் சேமிப்பு

பெய்கின்ற மழை நீரை சேமித்து வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய், குளம், ஏரி, ஆறு, கோவில் குளங்கள், கோடிக்கணக்கான நீர்வழித்தடங்களை தூர்வாரிட வேண்டும். உள்ளூரில் தண்ணீரை சேமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். பாசனத்தில் நவீன முறையைப் பயன்படுத்திட வேண்டும்.காடுகளை பாதுகாக்க வேண்டும். புதிய மரங்களை நடவேண்டும்.கரியமில வாயுக்களை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிடைக்கின்ற மழை நீரை எப்படி பயன்படுத்துகிறோம் என்கிற நீர் மேலாண்மையை கடைபிடித்து தண்ணீர் பட்ஜெட் சமர்பிக்க வேண்டும். ஆறுகளில் 2.5 கி.மீ முதல் 5 கி.மீக்குள் ஒவ்வொரு இடத்திலும்2.5 முதல் 3 அடி உயரம் உள்ள தடுப்பணை, கதவணை அமைத்திட வேண்டும். இவ்வாறு நீரை சேமித்திட மத்திய - மாநில அரசு கள் முன்வர வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் குடிப்ப தற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. 

(தமிழ்நாடு விவசாயிகள் சங்க பயிற்சி வகுப்பில் பேரா.ஜனகராஜ் உரையை தழுவி எழுதியது) 

கட்டுரையாளர் : மாநிலப் பொருளாளர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்


 


 


 

;