tamilnadu

img

நீதித் துறை குறித்து எழும் கேள்விகள் - உ.வாசுகி

மோடி 2019ல் பெரும்பலத்தோடு  ஆட்சிக்கு வந்த பிறகு,  அயோத்தி வழக்கு தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வாய்தா போடப்பட்டு  விசாரிக்கப்பட்டது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இது மத்திய அரசுடனான  சமரசப்போக்கின் விளைவா எனக் கேள்விகள் எழுகின்றன.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களின் ட்வீட்டுகள் மீது, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை விவரங்கள் ஊடகங்களில், இணையதள பத்திரிகைகளில் வெளிவருகின்றன. ஏற்கனவே, பாஜக அரசின் மீதான விமர்சனங்களில் ஒன்றாக, அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப் பட்ட தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், தேர்தல் ஆணை யம், நீதித்துறை போன்றவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் வகையில் அல்லது அரிக்கப்படும் விதத்தில் அரசின் நடவடிக்கைகள் அமைகின்றன என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இதை ஒட்டி, இத்தகைய அமைப்புகளிலிருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு பதவி எதுவும் வழங்கக் கூடாது என்பதையும் முன்வைத்து வருகிறது. ஓய்வு பெற்ற பின்னும், வாய்ப்பு வசதிகள், வாழ்க்கைத் தரம், அதிகாரம்  நீடிக்கத்தக்க விதத்தில் பதவிகள் கிடைக்கும் என்பதற்காக, தற்போதைய பொறுப்பின் போது அரசுக்கு சாதகமான சமரசப் போக்கைக் கடைப்பிடிக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலிருந்து இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டது. மற்ற அரசியல் கட்சிகள் பெரிதாக இக்கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை.

அவ்வப்போது முன்னுக்கு வந்த நிகழ்வுகளில் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், முக்கியமானவற்றைத் தொகுத்து ஒன்றாகப் பார்க்கும் போது, மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டும் போக்கு குறித்த சித்திரம் தெளிவாகத் தெரிகிறது.

ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில், நீக்கப்பட்ட அரசியல் சாசன பிரிவு 370 பற்றிய 23 வழக்குகள் ஓராண்டு காலமாக நிலுவையில் உள்ளன. கைது செய்யவில்லை என்று மறுத்துக் கொண்டே, வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் கட்டுப்படுத்தப்படும் விவகாரத்தில், ஆள் கொணர்வு மனுக்கள் பல தாக்கல் செய்யப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்தது உள்ளிட்ட ஒன்றிரண்டு ஏற்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுகள் வந்தன, பெரும் பகுதி மனுக்கள் நிலுவையில் உள்ளன.   உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, சைஃபுதீன் சோஸ், பார் அசோசியேஷன் தலைவர் மியான் அப்துல் கயூம் போன்றவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் போட்ட ஆள்கொணர்வு மனுக்கள் சந்தித்த பிரச்சனைகள் வெவ்வேறு ரகமானவை. உமர் அப்துல்லாவுக்காக அவரது சகோதரி போட்ட மனுவில், வாய்தா வரும் முன்னரே, அரசு அவரை விடுதலை செய்துவிட்டது; எனவே அந்த மனு பயனற்றதாகிவிட்டது. மெஹபூபாவுக்காக அவரது மகள் பிப்ரவரியில் போட்ட மனுவில் இப்போது வரை உத்தரவு கிடைக்கவில்லை. சைபுதீன் சோஸுக்காக அவரது மனைவி போட்ட மனுவில், அவர் கைதே ஆக வில்லை, அவரது பாதுகாப்புக்காக சிலரை நியமித்திருக் கிறோம், அவ்வளவு தான் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து விட, நீதிமன்றம் அந்த அடிப்படையில், இம்மனு பயனற்றது (infructuous) எனத் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தை சில தொலைக்காட்சிகள் அம்பலப்படுத்தின; ஆயினும் நீதிமன்றமும், அரசும் மவுனம் சாதிக்கின்றன. தள்ளுபடி செய்த உத்தரவு இதுவரை இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. வேறு உத்தரவுகளும் வரவில்லை. மியான் அப்துல் கயூம் வழக்கு வாதாடப்பட்டு, அதன் பகுதியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாகப் பிரயோகிக்கப்படுவது குறித்து அதிகம் பேசுகிறோம், ஜனநாயக உரிமைகளை முடக்கக் கூட்டிய அதே போன்ற சட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீரில் உள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட 4 பேர் உட்பட பலர், இச்சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவராத படிக்குக் கைது செய்யப்பட்டனர். மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் இந்தக் கடுமையான சட்டம் தக்க வைத்துக் கொள்ளப்பட்டது. 

அதேபோல் ஊரடங்கு, ரத்து செய்யப்பட்ட தொலை தொடர்புகள்  போன்றவை குறித்து போடப்பட்ட பல்வேறு வழக்குகளில், அவை கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைகின்றன என்று நீதி மன்றம் ஏற்றுக் கொண்டாலும், அரசின் உத்தரவுகளை ரத்து செய்யவில்லை, மாறாக, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றே தீர்ப்பு வழங்கியது. இந்த அரசு மறு பரிசீலனை எப்படி செய்யும் என்பது நமக்குத் தெரியும். இன்றுவரை பிரச்சனைகள் நீடிக்கின்றன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், 4 ஜி அலைவரிசை உபயோகத்தில் இருந்த போதும், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2 ஜி மட்டுமே செயல்படுகிறது. கோவிட் தொற்று பரவிக் கொண்டிருக்கும் சூழலில், துரித தொடர்புகளுக்காக 4 ஜி வேண்டும் என்று மே மாதம், ஒரு தன்னார்வ மீடியா அமைப்பால் போடப்பட்ட வழக்கில், அதை அமல்படுத்த வேண்டும் என்று கூறாமல், ஒரு கமிட்டி அமைத்து பரிசீலிக்க வேண்டும் என்று மட்டுமே மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் மாதத்தில், அந்த அமைப்பு, நிலைமையில் எவ்வித அசைவும் இல்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த போது, மத்திய அரசு, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், அது, 4 ஜி தர வேண்டாம் என்று பரிந்துரைத்து விட்டதாகவும்  தகவல் கொடுத்து விட்டது.

மோடி 2019ல் பெரும்பலத்தோடு ஆட்சிக்கு வந்த பிறகு, அயோத்தி வழக்கு தினசரி அடிப்படையில் உச்சநீதி மன்றத்தில் வாய்தா போடப்பட்டு விசாரிக்கப்பட்டது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் ஏராளமான வழக்குகள் நிலு வையில் வைக்கப்பட்டுள்ளன. இது மத்திய அரசுடனான  சமரசப்போக்கின் விளைவா எனக் கேள்விகள் எழுகின்றன.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்

விவாதப் பொருளான இந்த இடம் குறித்த வழக்கில், மசூதி இடிக்கப்பட்டது குற்றம் என்றும், நம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் நீதி வழங்க முடியாது, சட்ட அடிப்படையில் தான்  தீர்ப்பு வழங்க முடியும் என சொல்லிக் கொண்டே, உச்சநீதிமன்றம் தனது விளக்கத்திற்கு முரணாகவே தீர்ப்பு வழங்கியது பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீர்ப்பில் இடம் பெற்ற விமர்சனத்துக்குரிய 6  அம்சங்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டது. அண்மையில், ஒரு தனிப்பட்ட அறக்கட்டளை நடத்திய பூமி பூஜையில் உத்திரப்பிரதேச நிர்வாகம் முழு மூச்சாக இறங்கியது, அம்மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் பங்கேற்ற தும், பிரதமர் முதல் செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டியதும் போன்றவை நடந்ததற்கு நீதிமன்றத் தீர்ப்பு ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் தலைமையின் ஒரு பகுதி யினர் மதச்சார்பின்மை  கோட்பாட்டின் அடிப்படையில் விமர்சிப்பதற்கு பதிலாக, பாஜக நிறத்தின் ஒரு மங்கிய பிம்பமாகத் தோற்றமளித்ததை இந்நாடு பார்த்தது.  

வழக்குகளை பாகுபாட்டுடன் நீதிபதிகளுக்கு ஒதுக்குவது...

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்

- என்ற திருக்குறளைத் தவறாகப் பிரயோகித்து, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை சில குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கினார் என்று, பிரசாந்த் பூஷன் மட்டும் கூறவில்லை. 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனம் வெதும்பி வெளிப்படையாக சுட்டிக்காட்டினார்கள். தலைமை நீதிபதியாக  ரஞ்சன் கோகோய் இருந்த போது தான், அயோத்தி தீர்ப்பு வெளியானது,  பணி ஓய்வுக்குப் பின்னர்  அவர் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார். ரஞ்சன் கோகோய், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கான அமர்வில் தன்னையும் இணைத்துக் கொண்டு, சில நீதிபதிகளை தேர்வு செய்து அதில் இணைத்தார். குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதி இடத்தில் அமர்வதை இதற்கு முன் எப்போதும் நாம் பார்த்ததில்லை. புகார் கொடுத்த பெண்ணும் அவர் குடும்பமும் என்ன பாடுபட்டனர் என்பதை நாடறியும்.

அண்மையில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் அம்சங்கள் அரசியல் சாசன அடிப்படையில் பொருத்தமானவை அல்ல என்று என்.ராம், அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு பட்டியல் இடப்பட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம், இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கடுமையாகக் கடிந்து கொண்டதாகவும், இந்த வழக்கு,  நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்குத் தான் போக வேண்டும் என்று கூறியதாகவும், பிறகு நீதிபதி சந்திரசூட் அமர்விலிருந்து இந்த வழக்கு நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்தி வெளியானது. ஒரு (அரசியல்) நோக்கத்தோடு இது நடந்ததாக விமர்சனங்கள் வந்தன. ஏற்கனவே பிரசாந்த் பூஷனின் மீதான அவமதிப்பு வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா உள்ளிட்ட பெஞ்சி டம் இருப்பதாகவும், அதே போன்றதொரு வழக்கு என்பதால் இதையும் அவர் அமர்வுக்கே மாற்றினோம் என்றும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் விளக்கியது. ஆனாலும் சட்ட வல்லுநர்கள் பலரும் கூறுவது என்னவென்றால், இரண்டும் ஒரே தன்மை கொண்டது கிடையாது, ஒன்று சம்பந்தப்பட்ட ட்வீட்டுகள்  நீதிமன்ற அவமதிப்பா என்பது; மற்றொன்று, அவமதிப்பு சட்டத்தின் அரசியல் சாசன பொருத்தப்பாடு பற்றியது. எனவே பின்னதை எந்த அமர்வுக்கும் கொடுக்க முடியும் என்பது தான். 

பிரதமருக்குப் புகழாரம்

பிரதமர் மோடி குறித்து நீதிபதிகள் புகழ் மாலை சூட்டுவது என்னும் போக்கு வலுப்பட்டுக் கொண்டே வருகிறது. 2019 ஆகஸ்டில், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஆர். ஷா  (பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி), மோடியை ஒரு “முன்மாதிரி மற்றும் கதாநாயகன்” என்று புகழ்ந்தார். உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் அருண் மிஸ்ரா, 2020 பிப்ரவரியில், 20க்கும் மேற்பட்ட நாடுகளின் நீதிபதிகள் பங்கேற்ற ஒரு சர்வ தேச மாநாட்டில், பிரதமரும், சட்ட அமைச்சரும் கலந்து கொண்ட பின்னணியில்,  “மோடி அவர்கள், உலகளாவிய பார்வையுடன் உள்ளூர் மட்டத்தில் செயல்படும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலைநோக்காளர், பல்துறை மேதை” என்று புகழ்ந்தார். அருண் மிஸ்ரா அவர்கள், உச்சநீதிமன்றத்தில் சீனியர் பட்டியலில் 3ம் இடத்தில் இருப்பவர். இவருடைய அமர்வுக்குத் தான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் தரப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இப்போதும் தொடர்கிறது.

அரசின் அனைத்து அங்கங்களையும் ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, அதிகாரங்களைக் குவிப்பது, மறுப்பவர்களை அச்சுறுத்தி, ஒடுக்கி, பணம் பதவி கொடுத்துப் பணிய வைப்பது போன்ற பாசிசத்தன்மை கொண்ட போக்குகள் பாஜக ஆட்சியில் ஒவ்வொன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த சட்டகத்துக்குள் வைத்தே, நீதித்துறை குறித்து எழும் கேள்விகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.


 



 

;