tamilnadu

img

நமஸ்தே டிரம்ப்பும் சபர்மதி ஆசிரமமும்

‘நமஸ்தே டிரம்ப்’ சிறப்பு நிகழ்ச்சிக் காக இந்தியா வந்துள்ள தனதுநண்பரும் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் அவர்களை குஜராத்தில் அமைந்துள்ள  சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார் பிரதமர் மோடி.ஆசிரமத்தின் பார்வையாளர்கள் குறிப் பேட்டில் “சிறப்பான இந்த ஏற்பாட்டை செய்தஎனது சிறந்த நண்பர் மோடிக்கு எனது பாராட்டுக்கள்” என குறிப்பெழுதி கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்.. “இந்த ஆசிரமமும், அது அமைந்துள்ள சபர்மதி நதிக்கரையும் இந்திய விடுதலை போராட்டத்தில் மகத்தான பாத்திரத்தை வகித்துள்ளது என்பதோடு, இந்தியாவின் பன்முகத்தன்மையின் அடையாளங்கள் இவை இரண்டும்” எனவும்நமது பிரதமர் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

அடடா.. அண்ணல் காந்தியின் புகழையும்,இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தையும் மிகுந்த பெருமிதத்தோடு அமெரிக்க ஜனாதிபதியிடம் விளக்கிய நமது பிரதமர், அண்ணல்காந்தியடிகள் தனது சபர்மதி ஆசிரமத்திற்குதிரும்பவே முடியாமல் போன துயர வரலாற்றை சொல்லாமல் விட்டுவிட்டார் போலும். பரவாயில்லை, நாமாவது டிரம்பின் கவனத்திற்கு சொல்லி வைப்போம். 1917ஆம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தை நிர்மாணித்த அண்ணல் காந்தி 1930 வரையில் இங்கிருந்துதான் தனது பணிகளை மேற்கொண்டார். 1930 மார்ச் 12 அன்று, விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான 241 மைல் தூரத்திற்கான  தண்டி யாத்திரையை வெறும் 78 பேருடன் இணைந்து துவக்குகிறார் காந்தி. போராட்டத்தின் எழுச்சியினால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 60,000க்கும் மேற்பட்டோரை சிறையில்அடைத்த பிரிட்டிஷ் அரசு, பிறகு போராட்டத் தில் பங்கேற்றவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. சொத்துக்களை இழந்தவர்களுக்கு ஆதரவாக நின்ற காந்தி, எனதுஆசிரமத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என பிரிட்டிஷாரிடம் தாமாக முன்வந்து வேண்டுகிறார். ஆனால் பிரிட்டிஷ் அரசு ஆசிரமத்தின்மீது கை வைக்கத் தயங்கிய சூழலில், “  இந்தியா அரசியல் விடுதலை பெற்றுவிட்டது எனும் நிலையை எட்டும் வரை இனி இந்தஆசிரமத்திற்கு வரமாட்டேன் ” என அறிவித்துவிட்டு ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார். 1947 இல் இந்தியா விடுதலை அடைகிறது. அதற்குப் பிறகு தனது ஆசிரமத்திற்குதிரும்ப வேண்டும் என எண்ணுகிறார். ஆனால்அவரது அந்த விருப்பத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தது கோட்சேவின் மதவாதக் கொலைவெறிதான் என்பதையும் சேர்த்து நினைவூட்டுவதே காலத்தின் தேவையாக உள்ளது.

சபர்மதி, ஆசிரமமானது ஹரிஜன் ஆசிரமம், சத்தியாகிரக ஆசிரமம் எனும் பெயர்களாலும் கூட அழைக்கப்படுவதுண்டு. ஒடுக்கப்படும் மக்களை ஹரிஜன் என காந்தி குறிப்பிடுவார். அவர்களின் சமூக விடுதலை இன்றுவரையிலும் நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது என்பதையும், சத்தியாகிரக போராட்டங்களை அறவழியில் நடத்துபவர்கள் மீது “தேசத் துரோகிகள்” என்ற புது அடையாளம் சுமத்தப்படுகிறது என்பதையும் சேர்த்தே ஆசிரம நினைவுகளோடு டிரம்ப் பிடம் சொல்லி வைப்போம்.
- ஆர்.பத்ரி