tamilnadu

img

சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானா ? - கே.பாலகிருஷ்ணன்

நாடு முழுவதும் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள், தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதன்மீது அடுக்கடுக்கான புகார்களும் வெளிவந்துள்ளன. குறிப்பாக அரசு உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. பெண் எம்.பி.க்களே சக ஆண் எம்.பி.க்கள்மீது புகார் தெரிவித்த செய்திகளும் உள்ளன. இப்படியானசமூகக் கொடுமைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது அவரது துறை அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 2019 ஏப்ரல் 9 ஆம் தேதியன்று அனைத்துநீதிபதிகளுக்கும், தலைமை நீதிபதியின் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அனுப்பியுள்ளார். இந்த செய்திநாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.பாலியல் புகார் வெளிவந்தவுடன், இது திட்டமிட்ட சதி; இதன்பின்னால் பெரிய சக்திகள் உள்ளன; நீதித்துறையை களங்கப்படுத்துவதற்காக ஒன்றுகூடியுள்ளனர் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்துதெரிவித்தார்.

ஒருதலைப்பட்சமாக...

பாலியல் புகாரை விசாரிப்பதற்கு 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்திய முறையும் விசாரணை முடிவுகளும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.இந்த விசாரணையானது இயற்கை நீதிக்கு விரோதமாகவும் புகார் கொடுக்கப்பட்ட பெண்ணிடம்முறையாக கருத்துக்களை கேட்காமலும் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த விசாரணை நடந்தபோது, புகார் அளித்த பெண்தன்னுடன் வழக்கறிஞரை அழைத்து வருவதற்கு விசாரணைக் குழுவால் அனுமதிக்கப்படவில்லை. தான் அளிக்கும் வாக்குமூலத்தின் நகலை அளிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதற்கும் விசாரணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. முறையான நடைமுறையின்றி விசாரணை நடைபெற்றதால், புகார் அளித்த பெண்பாதியிலேயே விசாரணையை புறக்கணித்து வெளியேறினார்.

எனவே, இது ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கருத இடம் உள்ளது. பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும்தலைமை நீதிபதி மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி விசாரணைக்குழு புகாரை தள்ளுபடி செய்தது.அதோடு மட்டுமல்லாமல் புகார் அளித்த பெண்ணுக்கு விசாரணை அறிக்கையை கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. விசாரணை அறிக்கை இல்லாமல் அப்பெண்ணால் மேல்முறையீடு செய்ய முடியாது. சாதாரண மக்கள் மனித உரிமை மீறல் பிரச்சனைகளில் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டியுள்ளது.நாட்டின் நீதிபரிபாலனத்தை பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. ஆனால்உச்சநீதிமன்றமே,பெண் ஒருவர் பாலியல் புகார் அளிக்கக்கூடிய பிரச்சனையில்,ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கக்கூடிய தீர்ப்புகளுக்கு விரோதமாகவும் இயற்கை நீதிக்கு விரோதமாகவும் செயல்பட்டால், அப்பெண்ணும் பாதிக்கப்படக்கூடிய எளிய மக்களும் எங்கே செல்வார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

இது என்ன நியாயம்?

இந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களில் பெண்களை பணியமர்த்த வேண்டாம் என்று கூறி, ஏற்கெனவே பணியாற்றி வந்தபெண்களை நீதிபதிகள் இடமாற்றம் செய்தது மிகப்பெரிய அநீதியாகும். பெண்கள் பாலியல் புகார் கூறும் இடங்களில் எல்லாம் இதே அணுகுமுறையை பின்பற்றினால் என்னவாகும்? அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம அளவில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்றுநியாயமான குரல் எழுந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்ட வேண்டிய உச்சநீதிமன்றத்திலேயே பெண்களுக்கானபணி வாய்ப்புகள் மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? அப்பெண் அளித்த புகாரில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று,தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதுபாலியல் புகார். மற்றொன்று, 2018 அக்டோபர் 11 அன்றுஅப்பெண் மீதான பாலியல் சீண்டலுக்குப் பிறகு அவருக்குநேர்ந்த பழிவாங்கல் நடவடிக்கை.

உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த இப்பெண்ணை, ரஞ்சன் கோகோய் தனது முகாம் அலுவலகத்திற்கு ஜூனியர் அசிஸ்டெண்டாக பணிமாற்றம் செய்கிறார். இவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தேவைகள் என்னவென்று கேட்டறிந்து,அதனை நிறைவேற்றுவதாகவும் மேலும் அப்பெண், அவரது கணவர், குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து சந்தித்ததாகவும் தலைமை நீதிபதியாக தான் வந்தால் உனக்கு நிறைய சலுகைகள் வழங்க முடியும் என்று ரஞ்சன் கோகோய் கூறியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த மனுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், என்ன செய்ய வேண்டும் என்று அப்பெண்ணிடம் ரஞ்சன் கோகோய் கேட்டுள்ளார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரனுக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று அப்பெண் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக அப்பெண்ணின் சகோதரரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதன்பின்னர், 2018 அக்டோபர் 11 அன்று அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக மோசமாக நடந்துகொள்கிறார். இதற்கு உடன்பட முடியாது என்று அப்பெண் மறுத்துள்ளார். இதன்பின்னர் உடனடியாக, நீதித்துறையின் கீழ் உள்ள மத்திய ஆய்வு மற்றும் திட்டமிடல் துறைக்கு 2018 அக்டோபர் 22 அன்று பணிமாற்றம் செய்யப்படுகிறார். பின்னர் அட்மினி மெட்டீரியல் பிரிவிற்கு மாற்றப்படுகிறார்.

தொடர் பழிவாங்கல்...

நவம்பர் 19 அன்று நீதிமன்ற பதிவாளர் தீபக் ஜெயினிடமிருந்து அப்பெண்ணுக்கு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. அதில், நீங்கள் நன்னடத்தை விதியை மீறிவிட்டீர்கள்.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு அப்பெண் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல், நவம்பர் 22 அன்று நூலகப்பிரிவுக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.நவம்பர் 27-ல் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். டிசம்பர் 18-ல், உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது என்று நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. இதன்பின்னர் டிசம்பர் 21-ல் பணியிலிருந்தே நீக்கம் செய்யப்படுகிறார்.தில்லியில் கிரைம் பிராஞ்ச்சில் தலைமைக் காவலராகபணியாற்றிய இப்பெண்ணின் கணவர் நவம்பர் 27-ல்திடீரென்று ஆயுதப்படை பிரிவுக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். தில்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் அப்பெண்ணின் கணவரது சகோதரர், தொலைபேசி மூலம் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். எழுத்துப்பூர்வமான உத்தரவு மறுநாள் தான் வந்தது. இவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்றால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வீட்டிற்குஅடிக்கடி போன் செய்கிறார்கள்; இது அலுவலக விதிகளுக்குமுரணானது என்று காரணம் கூறப்படுகிறது.

2019 ஜனவரி அன்று இவர்கள் 2 பேர் மீது விசாரணை நடத்த தில்லி திலக்மார்க் காவல் நிலையத்திற்கு வருமாறுகாவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் வந்த பின்னர்சார்பு ஆய்வாளர் நரேஷ் சோலங்கி, நீதிமன்ற பதிவாளரைதொடர்பு கொண்டு, ரஞ்சன் கோகோய் வீட்டிற்கு வருவதற்கான வழி மற்றும் முகவரியை கேட்கிறார்.இதன்பின்னர் புகார் அளித்த பெண், அவரது கணவர்,காவல் அதிகாரி நரேஷ் சோலங்கி ஆகியோர் தலைமை நீதிபதி வீட்டிற்குச் சென்றனர். அங்கு சென்ற பின்னர், தலைமை நீதிபதி மனைவியிடம் காலில் விழுந்து மன்னிப்புகேட்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களின் மூக்கால் நீதிபதி மனைவியின் பாதத்தை தேய்க்குமாறு நிர்ப்பந்தப்படுத்தியுள்ளனர்.ஜனவரி 14-ல் அப்பெண்ணின் மாற்றுத்திறனாளி சகோதரர் பணியிலிருந்து நீக்கப்படுகிறார்.

2017 ஜூன் மாதம் ராஜஸ்தானில் இருந்தபோது, நவீன்குமார் என்பவர் வேலை வாங்கித் தருமாறு 10 லட்சம்ரூபாய் பேரம் பேசியதாகவும் அதில் 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக இப்பெண்ணிடம் கொடுத்ததாகவும் வேலைவாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் நவீன்குமார் அளித்த புகாரின் பேரில் 2019 மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்து, அப்பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அங்கிருந்து கைவிலங்கிட்டு தில்லிக்கு அழைத்து வரப்படுகிறார்கள். திலக்மார்க் காவல் நிலையத்தில் அவர்களது கால்களை கயிற்றால் இறுக்கிக்கட்டி, 24 மணி நேரம்வைத்துள்ளனர். மறுநாள் மார்ச் 10 அன்று இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்கின்றனர். மார்ச் 12-ல் இவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளிவருகின்றனர்.லஞ்சம் வாங்குவதும் குற்றம்,கொடுப்பதும் குற்றம் ஆகும். ஆனால் அரசு வேலை பெறுவதற்காக லஞ்சம்பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அப்பெண் கைது செய்யப்பட்டார் என்றால்,லஞ்சம் கொடுத்த நவீன்குமார் மீது ஏன்நடவடிக்கை எடுக்கவில்லை? 2017- ல் நடந்ததாக கூறப்படும்சம்பவத்திற்கு 2019-ல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்பெண்ணுக்கு நடந்துள்ள சம்பவங்களை பார்த்தால்உண்மையானதாகவே தெரிகிறது. இது மோசமான கொடூரமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். அப்பெண்போதுமான ஆவணங்களை வாக்குமூல மனுவில் இணைத்துள்ளார்.

குடும்பத்தையே பழிவாங்கிய... 

உயர் அதிகாரம் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களுக்குஉடன்படவில்லை என்பதற்காக குடும்பத்தையே பழிவாங்கி, நீதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. நடந்துள்ள சம்பவங்கள் முழுக்க முழுக்க சட்டவிரோதமாகவே தெரிகிறது. நடந்தவற்றை வெளியிடக்கூடாது என்பதற்காகவே கொடூரத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தலைமை நீதிபதியின் பாலியல் வற்புறுத்தலுக்கு அப்பெண் உடன்பட மறுத்தபோது, குடும்பத்தையே பழிவாங்குவதற்காக அரசு இயந்திரத்தை, அதிகாரிகளை தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. கடைநிலை அரசு ஊழியர் மீதான மோசமான தாக்குதல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்கும் குழுவில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற பெண் நீதிபதிஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டும். அக்குழுவிற்கு, உதவியாக உச்சநீதிமன்ற மூத்த பெண் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண், தனக்குஉதவியாக ஒரு பெண் வழக்கறிஞரை வைத்துக் கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் மற்றும் 17 நீதிபதிகள் கடிதம் எழுதினர். ஆனால்,இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

விசாகா தீர்ப்பு என்ன ஆனது?

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்க அனைத்துப் பணியிடங்களிலும் ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 1997 ஆகஸ்ட் 13-ம் தேதி விசாகா வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையில் 2013 டிசம்பர் 9 அன்று மத்திய அரசு ஒரு சட்டத்தை உருவாக்கியது. இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஒருபுறம்இருக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சம்பந்தப்பட்ட புகாரிலும் இந்தக் குழுவின் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளில் சாதாரண ஏழை எளிய மக்கள்,அரசு அதிகாரிகளின் அத்துமீறல்களால் பாதிக்கப்படும்போது, அந்த மக்களது உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றத்தின் பிரதானக் கடமை என்று கூறப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே எல்லைதாண்டி செயல்பட்டால், சாதாரண ஏழை எளிய மக்கள் நீதி, நியாயம்கிடைக்க எங்கே போவார்கள்? இவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?





;