tamilnadu

img

40 ஆண்டுகால தோழமையின் பசுமையான நினைவுகள்....

தோழர் தே.லட்சுமணன் என்கிற அன்பு தோழர் டி.எல் அவர்களுடன் 40 ஆண்டு காலம் பணியாற்றியவன், பழகியவன், ஆலோசனை மற்றும் விவாதங்கள் நடத்தியவன் என்கிற வகையில் அவருடனான நினைவுகளை பதிவிட விழைகிறேன்.

தோழர் டி.எல். அவர்கள் நான் முதன்முதலாக சி.ஐ.டி.யு-வின் 3ஆவது அ.இ.மாநாடு பம்பாய் நகரில் 1975-ல் நடைபெற்றபோது தோழர் எம்.ஆர்.அப்பன் அவர்கள் மூலம் அறிமுகமானார். அதன் பின் 1981-ல் அரசு ஊழியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் முழுநேர ஊழியராகவும் ஒன்றுபட்ட செங்கை - திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றகையோடு ஒவ்வொரு இடைக்கமிட்டிக்கும் செல்வதோடு, கட்சி கிளைகளை கூட்டிடவும். அதில் அவரே பங்கேற்கும் வகையிலும் தேதி கொடுத்தார். முதலாவதாக காஞ்சி மாநகர கமிட்டியில் அப்பணியை செய்து முடித்தது இன்றளவும் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதேபோன்று தோழர் டி.எல் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த இருஅம்சங்களை கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொருவரும் தனது கடமையாகக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.''நேரம் தவறாமை.படிப்பது.இரண்டுமே மிக கடினமானதுதான். அதுதான் மிக முக்கியமானது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.கட்சி ஸ்தாபனத்தில் நான் மிகவும் அவரிடத்தில் கண்டதும், பாராட்டத்தக்கதும் யாதெனில் “இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று” - என்றகுறளுக்குகேற்ப அவர் நடந்து கொண்டதே!கமிட்டிகளில் ஸ்தாபனம் சார்ந்து விவாதங்களின்போது எவ்வளவு கடுமையான வார்த்தைகள் பிரயோகம் செய்ய நேரிட்ட போதும்கூட, அவர் மிக நிதானமாக தோழர்கள் மனம் புண்படாத வகையில் தோழர்களின் தவறுகளை - பிழைகளை சுட்டிக்காட்டுவது மேல் கமிட்டியில் இருக்கும்தோழர்கள் கடைப்பிடிக்க வேண்டியது, அவசியமானது என்பதை இங்கு நினைவு கூர்கிறேன்.

அதே நேரத்தில், மாவட்டத்தில் தோழர் கள் மீது ஏதாவது ஒரு காரணத்திற்காக கட்சி நடவடிக்கை எடுக்க நேரிடுகிறபோது, தோழர் டி.எல் அவர்கள் கூறிய சொற்றொடர் இன்றளவும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.ஒரு தவறு செய்த ஒரு தோழர் மீது நடவடிக்கை எடுக்கும்போது அந்த தவறைமட்டும் நாம் பார்த்திடக்கூடாது. அவரது அரசியல் பின்புலம் - அவர் (அ)அக்குடும்பம் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பு - குடும்பச் சூழல் - இவைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்து - அதன் பின்னரேகுற்றத்தின் தன்மைக்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதிலும் - நடவடிக்கை எடுப்பதில் சமரசம் கூடாது என்பதிலும் அவர் உறுதிபடச் செயல்பட்டார்.

ஒரு முறை ஒரு அரங்கத்தின் முழு நேரஊழியர்கள் அவருக்கு மட்டுமல்ல - மற்றமுநேர ஊழியர்களுக்கும் கூட அலவன்ஸ் கொடுக்க முடியாத நிலையில் மாவட்டத்தின் நிதிநிலைமை மிக மோசமாகஇருந்தது. இச்சூழலில், அந்த அரங்க தோழருக்கு மட்டும் முக்கிய முன்னணி தோழர்மூலம் அவருக்கான அலவன்ஸ் (சொற்பதொகைதான்) மாதா மாதம் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். சம்பந்தப்பட்ட தோழரும் அத்தோழரை நேரில் சந்தித்து பெற்றுக்கொண்டிருந்தார். சில காலம் பொறுத்து  அவரை குறிப்பிட்ட தேதியில் அலுவலகம் வந்து தரச்சொல்லுங்கள் என அரங்க தோழர் பேசினார். பதற்றப்படாமல் தோழர் டி.எல் அவர்கள் தனது தொகுப்புரையில் “வரும் மாதத்திலிருந்து உங்களுக்கு அலுவலகத்தில் வைத்து அலவன்ஸ்தர ஏற்பாடு செய்கிறேன்” என கூறியது மட்டுமல்ல - அந்த மாதத்திலிருந்து அலுவலகத்தில் வைத்து அலவன்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

இதைநான் இங்கு சுட்டிகாட்டுவதற்கு காரணம் இளைய தோழர்கள்உண்மை நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல்கருத்து பதிவு செய்தாலும் - வற்புறுத்தினாலும் - தோழர்கள் அதன் காரணமாக சோர்வடையவோ - நிதானம் இழந்துவிடவோக் கூடாது. காலப் போக்கில் சரி செய்ய இயலும்என்ற புரிதல் அவரிடம் மேலோங்கி இருந் தது என்பதே இதற்குச் சான்று.கட்சி விரிவாக்கத்தில் கூடுதல் கவனம்செலுத்துவதோடு மட்டுமல்லாது, அப்பணியை செய்து முடிக்கிறவரை உரிய தோழர்களோடு, பொறுப்பாளர்களோடு தொடர்ந்துதொடர்பும் - ஊக்குவிப்பும் அவரிடம் நிலைகொண்டிருந்தது. வர்க்க வெகுஜன முன் னணி தோழர்களோடு நேரம் ஒதுக்கி அவர் களுடன் கலந்தாய்வு நடத்தி - இலக்கை அடைய எந்தெந்த வகையில் கட்சி உதவி செய்ய வேண்டுமென்பதை கேட்டறிந்து உதவிகளை செய்து முடிப்பதில் கவனம் செலுத்தியதால்தான் சென்னையிலிருந்து  மாவட்டம் பிரிந்த நிலையில் கட்சியும் வர்க்க வெகுஜன ஸ்தாபனமும் வளர்ச்சிப் பாதை நோக்கி சென்றது. அதில் தோழர் டி.எல். அவர்களின் வழிகாட்டலும் பங்களிப்பும் குறைத்து மதிப்பிட இயலாது.

இயக்கத் தோழர்களிடம் மிக எளிமையாக சகஜமாக இயல்பாக பழகக் கூடியதன்மை கொண்டவர். அதன் காரணமாக கட்சி தோழர்கள் அவரிடம் தங்கள் குறைகளை - ஆதங்கங்களை - தேவைகளை - குடும்ப பிரச்சனைகளை தயங்காமல் சொல்லும்போது, தோழர்களின் தோள் மீதுஅவர் கைபோட்டு பேசும் போது பாதி பிரச்சனை தீர்ந்ததாக தோழர்கள் கருதுவார்கள்.தீர்வுகண்டதும் ஏராளம்.எவ்வளவுதான் அவரோடு நெருங்கிப்பழகினாலும், தோழமை கொண்டிருந்தாலும்- அவருக்குரிய கருத்துக்களை உரியகமிட்டியில் பேசுவதை உற்சாகப்படுத்துவாரே தவிர, ஏன் அப்படி பேசினார்கள் என்றவினா எப்போதும் அவரிடமிருந்து வராது.அது அவரது தலைமைப் பண்பு என்பதைபல நேரங்களில் உணர்ந்துள்ளேன். மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டபின்னரும் கூட எவ்வித சோர்வுக்கும் ஆட்படாமல் மாற்றுத் திறானாளிகள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளை கட்டுவதற்கு தோழரை அப்பணியில் ஈடுபடவைப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்கிற நிலையில் மாவட்டம் தோறும் பயணித்து அவர் செயல்பட்ட தன்மை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகும்.

டி.எல் அவர்கள் தமிழ்மொழி பற்றாளர்தான். படிப்பதை வாய்ப்புக் கிடைக்கிறபோது மற்றதோழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர். அதுமட்டுமல்ல, மற்றவர்களை படிக்க தூண்டுவதில் கவனம் செலுத்துவதோடு, புத்தகங்களை படிக்க (புத்தகத்தை திருப்பித்தரும் தோழர் களிடம் மட்டும்) ஊக்கப்படுத்துவார். தமிழ்மட்டுமல்லாது ஆங்கில நுல்களை வாசிப்பதில்  அவருக்கு ஆர்வமுண்டு.கொரோனா காலத்தில் எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழலில் வெளியூர் பயணம் ஏதுமின்றி நாடுமுழுவதும் ஊரடங்கில் முடங்கிய நிலையில், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அதிகநேரம் பயன்படுத்தினார். இரண்டு மாதத்திற்கு முன் மாவட்டத்தில் ‘கட்சி இயக்கம்’ என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் நடந்த ஆன்லைன் கூட்டத்தில்  தோழர் டி.எல் அவர்கள் உரையாற்றினார். இரண்டு தினங்கள் கழித்து அவரோடு பேசியபோது “ 6 மாதங்களாக எங்கும் போகவில்லை பொதுக்கூட்டம் இல்லை - நேரடிகட்சி வகுப்பு இல்லை. இந்நிலையில் ஆன்லைன் மூலம் தோழர்களிடம் பேசியதால்உற்சாகம் பெருக்கிட்டது என உணர்ச்சிததும்பக் கூறியது மிகையல்ல.அதேபோல் இக்காலத்தில் தோழர் டி.எல் அவர்கள், தோழர் தமிழ்செல்வன், ஜெயகாந்தன், என்.இராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதிய 30 சிறுகதைகளை  தேர்வு செய்து (அவரது இலக்கு 100)  ஆங்கில மொழியாக்கம் செய்து கையில் வைத்துள்ளார்.

மேலும் கம்யூனிஸ்ட் இயக்க ஆசான் ஹோசிமின் அவர்கள் போராட்ட வரலாற்றை 500 பக்கத்திற்கு மிகாது எழுதி முடித்தார். மேற்கண்ட இவ் வகையான நூல்களை கொரோனா காலம்முடிந்தபின் தலைவர்களை கொண்டு “வெளியீட்டு விழா” நடத்திட எண்ணினார். கைப்பிரதிகளைப் பெற்று உரிய முறையில்பரிசீலனை செய்து வெளியிட முயற்சிப்போம். ஆகஸ்ட் திங்களில் அவரோடு பேசியநிலையில் “நாடு மிக நெருக்கடியான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மதவெறி ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை மதிக்கமாட்டார்கள் - பாசிசம் தலைதூக்கும் - இவர்களை ஆட்சியிலிருந்து விரட்ட 1975-ல் அவசரகால நிகழ்வுகளை கவனத்தில் கொண்டு நம் கட்சித் தலைமை“சர்வாதிகாரத்தை வீழ்த்த” அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி எடுத்தது போல்“இன்றைய கால கட்டம் உள்ளது” என தனதுகருத்தை பகிர்ந்துகொண்டார்.பல நேரங்களில் கூறுவார் , நான் (டி.எல்)இறந்தால் உடனடியாக எனது உடலை கட்சி அலுவலகம் கொண்டுவந்துவிடுங்கள். இல்லையேல் சம்பிரதாய சடங்குகள் அரங்கேறிவிடும் என்பார். ஆனால் இப்படி ஒரு மரணம் அவருக்கு ஏற்படுமென யாரும் எதிர்பார்க்கவில்லை.

மருத்துவமனையிலிருந்து அவரதுஉடல் நேரடியாக மயானத்திற்கு பயணித்தது. மாநில தலைமையகத்திலிருந்து தோழர்கள் ப.செல்வசிங் - பீமாராவ் - எஸ்.கண்ணன் ஆகியோர் உள்ளிட்டு மாவட்டத் தலைவர்கள் செங்கொடி போர்த்தி போராளிதோழர் டி.எல் அவர்களுக்கு செவ்வணக்கம்செலுத்தினர்.பெரும்பாலான தோழர்கள் - உற்றார் - உறவினர் - நண்பர்கள் என பலரும் நேரில்செல்ல முடியாத நிலையில் அவரவர் இருந்த இடத்திலிருந்து தங்களது வீரவணக்கத்தை செலுத்தினோம்.தோழர் டி.எல். அவர்களின் லட்சியத்தை நெஞ்சில் நிறுத்தி செயல்படுவோம் - வாழ்க டி.எல் புகழ்.

கட்டுரையாளர் 

===ப.சுந்தரராசன், சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர்===

;