tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்  

25

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019

பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

 

இந்திய மையக் கல்வி தேவையா?

image.png

2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்ட வரைவறிக்கை மீது கருத்துக் கேட்டு வரைவறிக்கையின் ஆங்கில, ஹிந்தி பதிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. மாணவர்கள் மூன்று அல்லது நான்கு மொழிகளை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திப் பரிந்துரைக்கின்ற வரைவறிக்கை தன்னை மட்டும் இரு மொழிகளுக்குள்ளே சுருக்கிக் கொண்டது. நீண்ட நெடிய கோரிக்கைகளுக்குப் பிறகு தமிழிலும் அதுவும் சுருக்கப் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை வரைவில், “உயர்தரக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் நிலைத்து நிற்கக்கூடிய, அனைவரும் சமவாய்ப்பு அளிக்கக்கூடிய, உயிரோட்டமுள்ள அறிவுசார் சமூகமாக நம்முடைய நாட்டை மாற்றுவதற்கு நேரடியாகப் பங்களிக்கக்கூடிய இந்தியாவை மையப்படுத்திய கல்வி அமைப்பை தேசிய கல்விக் கொள்கை 2019 முன்வைக்கிறது” என்று கல்விக் கொள்கையின் தொலைநோக்கு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கே பரிந்துரைக்கப்படுகின்ற இந்திய மையக் கல்வி என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. இந்திய மையக் கல்வி என்பதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது என்ன? இதுவரையிலும் ஒற்றை மையக் கல்வி என்பது இந்தியாவில் ஒருபோதும் இருந்ததே இல்லை. ஒரு நாடு, ஒரே மதம், ஒரே சட்டம், ஒரே சந்தை, ஒரே வரி, ஒரே ரேஷன், ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே மொழி போன்ற இவர்களின் பாசிசச் சொல்லாடல்களுக்குள் கல்விமுறையையும் சேர்த்து, தங்களுக்கேற்றவாறு வசதியாக இந்திய மையக் கல்வி என்று அதற்குப் பெயரிடுவது என்பது மிகவும் மோசமான அபாயகரமான போக்காகும். பன்முகத்தன்மை, கூட்டாட்சி, அரசியலமைப்பு ஆகியவற்றை முழுக்க முழுக்க கேலிக்குள்ளாக்குகின்ற இந்த இந்திய மையக் கல்வி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்.

பிரிட்டிஷ் கல்வி முறைக்கு முன்னதாகவே இந்தியாவில் இருந்து வந்த கல்வி முறைகள் அனைத்துமே  சிறப்பான முறையிலேயே இயங்கியிருக்க வேண்டும். அவ்வாறு இருந்திருக்காவிட்டால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் போன்ற நாகரிகங்களுக்கான சாத்தியமே இங்கு தோன்றியிருக்காது. அவ்வாறான கல்வி முறைகளில் இருந்த அனுகூலங்களைப் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு வேதக்கல்வி, குருகுலக் கல்வி பாரம்பரியக் கல்வி, தாராள கலைக்கல்வி, காதம்பரி, பாணபட்டர், அர்த்தசாஸ்திரம், நாளந்தா, தக்சசீலா என்று பேசுகிற இவர்கள், மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், கூடவே துணைக்கு நவீனக் கல்வி முறையையும், ஸ்டீம் (STEAM – Science, Technology, Engineering, Arts and Design, Mathematics) என்ற பெயரில் நவீன அறிவியலையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். ஆக இந்திய மையக் கல்வி என்ற பெயரில் இவர்கள் பரிந்துரைப்பது மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் அறிவியலற்ற கல்வி முறையாகவே இருக்கப் போகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் நம்மிடையே இல்லை. நடைமுறையில் இருந்து வருகின்ற, இவர்கள் அழித்தொழிக்கத் துடிக்கின்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மையப்படுத்தியதாகவே எந்தக் கல்விக் கொள்கையும் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட அனுமதிக்கக் கூடாது.

 

 

26

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019

பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்

 

வணிகமயமாக்கப்படும் பள்ளி முன்பருவ மழலைக் கல்வி

image.png

”முறையான பள்ளிக் கல்வியில் ஈடுபடுவதற்குத் தேவைப்படுகிற ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கற்றல் (முன் கல்வியறிவு, முன் எண்ணறிவு உட்பட) ஆகியவற்றைப் பின்னணியில் கொண்ட பள்ளிக்குச் செல்வதற்கான தயார்நிலை இல்லாததே தற்போதைய கற்றல் பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. முதல் தலைமுறையாக கற்பவர்களையும், ஆரம்பக் கல்விக்கு முந்தைய அணுகல் இல்லாத குழந்தைகளையும் அதாவது பின்தங்கிய சமூக-பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருகின்ற அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை இந்தப் பிரச்சனை மிகவும் பாதிக்கின்றது” என்று மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளிடம் பள்ளிக்குச் செல்வதற்கான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வரைவறிக்கை பரிந்துரைக்கிறது.  

பள்ளி முன்பருவக் கல்வி என்ற கல்விமுறை வந்து பள்ளிகளை ஆக்கிரமித்த பிறகு, குழந்தைகளை பள்ளி முன்பருவக் கல்விக்கான பள்ளிகளுக்குத் தயார் செய்யும் கல்வி சார்ந்த வகுப்புகளாகவே இந்த மழலைக் கல்வி முற்றிலுமாக மாற்றமடையச் செய்து விட்டது. கற்றல் குறித்த ஆர்வத்தை உண்டு பண்ணுவதாக, நண்பர்களை உருவாக்கி கொள்வதாக, தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பார்த்து வியக்கும் வகையில் பரந்த நோக்கங்களுடன் இருக்க வேண்டிய மழலைப்பருவக் கல்வி இன்று வெறுமனே எழுத்துக்கள், எண்களை ஒப்புவிப்பதாக மாறி விட்டது. ஆரம்பப் பள்ளிக்குத் தயார் செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்ற இத்தகைய மழலைக் கல்வி ஆரோக்கியமான, படைப்புத் திறன் கொண்ட, தனித்து செயல்படக்கூடிய சிந்தனை கொண்ட, சமூகத்திற்குப் பலனளிக்க கூடிய நீண்ட காலப் பயன்களை கருத்தில் கொள்ளாததாகவே இருக்கிறது.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் முன்பருவக் கல்வித்துறையின் பேராசிரியரான லிலியன் காட்ஜ் ”முறையான கல்வியை சிறு வயதிலேயே வழங்குவது ஆரம்பத்தில் பலன்களை விளைவிப்பதாகவே இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது, அத்தகைய கல்வி குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் சாதகமாக இருப்பதில்லை. மாறாக இந்த முறைசார்ந்த கல்வி முறை உடலளவில் அல்லது  மனதளவில் மாணவர்களை பள்ளியிலிருந்து பிரித்து விடுவதாகவே இருக்கிறது” என்று கூறுகிறார்.  இவ்வாறு கற்றலை விரைவுபடுத்துவது அதிகரிக்கப்பட்ட கலைத்திட்டத்தை உருவாக்கி, வயதில் மூத்த மாணவர்களுக்கென்று முன்பு ஒதுக்கப்பட்டிருந்த கற்றல் செயல்பாடுகளை இப்போது இளைய மாணவர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற வகையில் மாற்றி விட்டிருக்கிறது. அவர்களுடைய வயதிற்கேற்றவற்றை விட அதிகமாக, தங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே கல்வி பெறுவது குறித்து பெற்றோர்கள் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். அதனால் ஏற்படுகின்ற தீமையைப் பற்றி பெரும்பாலும் அறியாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அதிகரிக்கப்பட்ட கலைத்திட்டம் ஏற்படுத்துகின்ற அதிகரித்த மன அழுத்தம், தாக்கும் மனப்பான்மை, கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள் போன்ற எதிர்மறையான விளைவுகள் பள்ளி முன்பருவ கல்வி நிபுணர்களால் ஆய்விற்குட்படுத்தப்பட்டு விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அதிகரிக்கப்பட்ட கலைத்திட்டம் சிறார்களை தங்களுடைய இளம் வயதிற்கேற்ற வகையில் இல்லாமல், நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளச் செய்கிறது. அவ்வாறு செய்ய முடியாமல் போகும்போது, விரக்தியடைதல், எதிர்மறையாகச் செயல்படுவது, பங்கேற்க மறுப்பது போன்ற வகையில் எதிர்வினையாற்றுகின்ற குழந்தைகள் மீது பிரச்சனை செய்பவர்கள், சமூக முதிர்ச்சியற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது.  உளவியலாளரும், ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் டாக்டர் பீட்டர் கிரே, “உண்மையில், மழலையர் பள்ளியில் உள்ள சிறுகுழந்தைகள் என்ன தவறு செய்கிறார்கள் என்பதாக நமது கேள்விகள் இருக்கக் கூடாது. இந்த மழலையர் பள்ளிகள் சிறு குழந்தைகளுக்கு என்ன தவறை இழைக்கின்றன என்று கேட்பதே பொருத்தமான கேள்வியாக இருக்கும். நமது குழந்தைகளை நேசிக்கின்ற நாம் அவர்கள் நன்றாக வளர விரும்பினால், அவர்களுக்கு விளையாடுவதற்கான அதிக நேரத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனாலும் அரசின் கொள்கை வகுப்பாளர்களும், தனியார் பள்ளிகளை நடத்துகின்ற அதிகாரம் மிக்க தயாள குணம் கொண்டவர்களும் தொடர்ந்து குழந்தைகளை அதிக பள்ளிப்படிப்பு, அதிக தேர்வுகள், அதீத கட்டுப்பாடுகள், தாராளமாக விளையாடுவதற்கான வாய்ப்புகளை மறுப்பது என்று  எதிர் திசையிலேயே தள்ளி விடுகின்றனர்” என்கிறார்.

பள்ளி முன்பருவ மழலைக் கல்வி

image.png

”இப்போது இருக்கின்ற ஆரம்ப பள்ளிக்கு முன்னதாக 3 – 6 வயது வரை மூன்றாண்டுகளுக்கு பள்ளி முன்பருவ மழலைக் கல்வி சேர்க்கப்படும்” என்று மூன்று வயதிலிருந்தே இலவச, கட்டாய பள்ளி முன்பருவக் கல்வியைக் கொண்டு வருவது என்று இந்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் LKG மற்றும் UKGக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் ஆரம்பித்து விட்ட தமிழக அரசோ கடந்த ஆண்டே இந்த மழலைக் கல்விக்கான பாடத்திட்டம் குறித்த ஆலோசனைகளையும் நடத்தி முடித்து விட்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட வரைவுப்படியில் இருக்கின்ற பரிந்துரைகள் இந்தக் கல்விமுறை இளம் சிறார்களின் மீது எத்தகைய வன்மத்துடன் இருக்கப் போகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

”மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் பள்ளி முன்பருவக் கல்விக்கான கலைத்திட்டத்தினை வடிவமைத்து, அதனடிப்படையில் PreKG, LKG மற்றும் UKGக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. இப்பாடத்திட்டம் www.tnscert.org என்ற இணையத்தளத்தில் வெளிடப்பட்டுள்ளது.  வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இப்பாடத்திட்டத்தினைப் பார்வையிட்டு தங்களது கருத்துக்களை 30.10.2018க்குள் கடிதம் வழியாகவோ அல்லது awpb2018@gmail.comஎன்ற மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிட்டார்.

image.png

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்ட அந்த பாடத் திட்ட வரைவின் முன்னுரை இவ்வாறு தொடங்குகிறது. ”எல்லாக்‌ குழந்தைகளும்‌ கற்கும்‌ திறனுடன்தான்‌ பிறக்கின்றனர்‌, அவ்வலிமையான அடித்தளத்தின்‌ மீது சமுதாயம்‌ கட்டமைத்துக்‌ கொள்ள முடியும்‌. உலகில்‌ 0 முதல்‌ 6 வயது வரையுள்ள சுமார்‌ 800 மில்லியன்‌ குழந்தைகளில்‌, மூன்றில்‌ ஒரு பங்குக்குக்‌ குறைவானவர்களே மழலையர்‌ கல்வித்‌ திட்டத்தின்‌ பயனைப்‌ பெறுகின்றனர்‌. “கருவிலேயே கற்றல்‌ தொடங்குகிறது” எனக்‌ கல்வியாளர்கள்‌ கருதுகின்றனர்‌. “பகவான்‌ கிருஷ்ணனுடன்‌ சக்கர வியூகம்‌ பற்றிய தன்‌ தாயின்‌ விவாதத்தை கருவிலிருந்தே அபிமன்யூ கேட்டறிந்தான்‌” என்று புராணம்‌ கூறுகிறது. அவ்வாறு தன்‌ தாயின்‌ கருவிலிருந்து கேட்டறிந்ததை நினைவில்‌ கொண்டு பின்னர்‌ குருசேத்திரப்‌ போரின்‌ முக்கிய கட்டமொன்றில்‌ பாண்டவர்களை அவன்‌ வழிநடத்தினான்‌.

அண்மைக்கால மூளைசார்‌ ஆய்வாளர்கள்‌, ஒருவரின்‌ வாழ்நாள்‌ முழுமைக்குமான உடல்‌ மற்றும்‌ நடத்தை சார்ந்த வழித்தடங்களின்‌ மீது ஆதிக்கம்‌ செலுத்தும்‌ மூளையின்‌ வலது/இடது அரைக்கோளங்களின்‌ வளர்ச்சி ஆறு வயதிற்குள்‌ நிறைவடைகிறது எனச்‌ சுட்டிக்காட்டியுள்ளனர்‌. 0 முதல்‌ 6 வயதிற்குட்பட்ட சிறாரின்‌ மூளை செல்கள்‌ மிகவும்‌ செயல்திறன்‌ மிக்கவையாகும்‌. எனவே, இளம்‌ சிறாரின்‌ முழுமையான வளர்ச்சியைச்‌ செதுக்குவதில்‌ பள்ளி முன்பருவக்கல்வி இன்றியமையாததாகும்‌. குழந்தைகளிடம்‌ இளமை ததும்பும்‌ ஏற்றுக்கொள்ளும்‌ பாங்குடைய மனம்‌ இருப்பதால்‌, அவர்களிடம்‌ சமூகத்‌ திறன்கள்‌, பந்திப்‌ பண்பாடுகள்‌, தன்‌ சுத்தம்‌ மற்றும்‌ மனவெழுச்சி நுண்ணறிவு ஆகியவற்றை பேணி வளர்ப்பது அவசியமாகும்‌. குழந்தைகள்‌ தம்‌ இளமைக்‌ காலத்தில்‌ விளையாட்டு மற்றும்‌ செயல்பாடுகள்‌ வாயிலாகப்‌ பல பண்புகளைக்‌ கற்றுக்கொள்கின்றனர்‌”. இவ்வாறாக அபிமன்யூ கதையைக் கூறி பள்ளி முன்பருவ மழலைக்கல்வியை அந்த வரைவுப்படி நியாயப்படுத்தி இருந்தது. 2019 தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையை அப்படியே அடியொற்றி எழுதப்பட்டிருப்பதாக இருந்த அந்த முன்னுரை, தமிழ்நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக இருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

image.png

பள்ளி முன்பருவக் கல்வி பயில வருகின்ற 2-3 வயது குழந்தைகள் இந்த பாடத் திட்டத்திற்கான அன்றாட கால அட்டவணைப்படி காலை 9.30 மணிக்கு வந்து பிற்பகல் 4 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என்பது சகித்துக் கொள்ள முடியாத கொடுமையாக இருக்கிறது.

 

மழலைக்கல்வியும் பொருளாதாரமும்

2017ஆம் ஆண்டு வெளியான ”தொட்டிலில் இருந்து மழலையர் பள்ளிக்கு: சமத்துவமின்மைக்கு எதிரான புதிய திட்டம்” என்ற தலைப்பிலான புத்தகத்தில், மழலைக்கல்வி தருகின்ற பள்ளிகளுக்கு பணக்கார குழந்தைகள் சென்று விட முடிகிற போது, ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள் வீடுகளுக்குள் முடங்க நேரிடுகிறது என்று குறிப்பிட்டு, இந்த பள்ளி முன்பருவ மழலைக்க கல்வியின் மூலம் மூன்று வயதிற்குள்ளேயே சமத்துவமின்மை அமெரிக்காவில் வந்து சேர்ந்து விடுகிறது என்கிறது. சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளை விடக் குறைவாக 55 சதவிகித குழந்தைகளே அமெரிக்காவில் மழலையர் பள்ளிக்குச் செல்ல முடிவதாகவும், தங்களுடைய குழந்தைகளை மழலையர் பள்ளிக்கு அனுப்ப முடியாத பெற்றோர்கள், அவர்களை தாத்தா, பாட்டி பொறுப்பில் தங்களுடைய வீடுகளிலோ அல்லது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் வீடுகளிலோ விட்டுச் செல்கின்றனர் என்றும் சொல்லி விட்டு, இவ்வாறு உருவாக்கப்படுகின்ற சமத்துவமின்மை வீடுகளில் விடப்படுகின்ற குழந்தைகளுக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் எதிரானதாக இருப்பதாக அந்த புத்தகம் விவரித்துச் செல்கிறது.  சமத்துவமின்மையை களைவதற்காக இந்தப் புத்தகம் குறிப்பிட்டுச் சொல்லும் விஷயங்கள் கல்வி எவ்வாறு வணிகமயப்படுத்தப்படுகிறது என்பதை விளக்குவதாக இருக்கிறது. குழந்தைகளை வீடுகளில் விட்டு விட்டு வேலைக்குச் செல்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற ஆதங்கம் கல்வி முற்றிலும் வணிகப் பொருளாக மாறி விட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

”முன்பருவ வகுப்பிற்கு முன்னதாகவே பிரெஞ்ச், சைனீஷ் மொழிகள், வயலின், யோகா, ரோபோட்டிக்ஸ் என்று அனைத்தும் சொல்லித் தருவதாக கூறிக் கொள்ளும் பள்ளிகளில் ஆண்டொன்றுக்கு 30000 டாலர் பணத்தை கல்விக் கட்டணமாகச் செலுத்திய நியூயார்க் நகரத்து பெற்றோர்கள், தங்களுடைய மூன்று அல்லது நான்கு வயது குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் இறக்கி விட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு சற்றுத் தள்ளி இருக்கின்ற அமெரிக்காவின் ஏழை மாகாணமான ப்ரான்க்ஸ் பகுதியில் முற்றிலும் வேறு மாதிரியான நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்சம் பத்தாயிரம் டாலர் செலவழித்தால் மட்டுமே பள்ளி முன்பருவக் கல்வியை வழங்குகின்ற முறையான பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க முடியும் என்ற நிலையில், அவ்வளவு பணத்தைச் செலவழிக்க இயலாத நிலையில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் தெருக்களில் இருக்கின்ற சொந்தக்காரர்கள் அல்லது பக்கத்து வீட்டு பாட்டியிடம் தங்களுடைய குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். இவ்வாறு குழந்தைகளைப் பராமரிக்கின்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு அளிக்கின்ற கல்வி மிக அதிக அளவில் இருக்கின்றது. அல்லது குழந்தைகளை வெறுமனே தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் அமர்த்தி விடும் நிலைமையை ஏற்படுத்தி விடுகிறது. தரம் என்பது சமமாக இருப்பதில்லை என்று குறிப்பிடும் இந்தப் புத்தகம் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் குறைந்த வருவாய் ஈட்டுகின்ற குடும்பத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை ஐந்து வயதிற்குள்ளாக 25 குழந்தை பராமரிப்பு இடங்களில் விட வேண்டிய அவசியம் எழுந்ததைச் சுட்டிக் காட்டுகிறது.

இதில் இன்னும் அதிர்ச்சியூட்டும் வகையில், ஜேம்ஸ் ஹெக்மென் என்ற நோபல் விருது பெற்ற பொருளாதார அறிஞர் குழந்தைகள் பிறந்ததில் இருந்தே அரசின் செலவில் கல்வி கற்றுத் தரப்பட வேண்டும் என்கிறார்.  எட்டு வாரத்தில் இருந்து கல்வி பெறுகின்ற குழந்தைகள் தங்களுடைய பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக முடித்து விட முடிவதாகவும், அவர்கள் சிறைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதில்லை என்றும் அவர் நடத்திய ஆய்வுகளில் இருந்து தெரிய வந்திருப்பதாக கூறுகிறார். 3 – 4 வயதில் பள்ளிகளுக்குப் போகும் போது முதலீட்டிற்கு கிடைக்கின்ற 7 – 10 சதவிகித லாபம் என்பதை விட அதிகமாக 0 – 5 வயது வரை தரப்படுகின்ற இந்த கல்வி முறையில் 13 சதவிகித லாபம் கிடைக்கும் என்று ஹெக்மென் கூறுகிறார். மேலும் இவ்வாறு மழலையர் கல்விக்கென்று செலவழிக்கப்படும் ஒரு டாலருக்கு 6.3 டாலர் சமூகப் பலன்கள் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

image.png

வரைவறிக்கையின் முதலாவது பிற்சேர்க்கையில் ’கல்வி – சமூகத்திற்கான சிறந்த முதலீடு” என்ற தலைப்பில், ஹெக்மென் சொல்வதை அடிபிறழாமல் அப்படியே ”ஒவ்வொரு ஆண்டு கல்வியும் தனிநபர்களின் வருவாயில் 6-12% தருவதாக இருக்கிறது. பெண்களுக்கும், பின்தங்கிய குழுவினருக்கும் முதலீட்டின் மீதான வருவாய் அதிகமாக இருக்கிறது. பெண்களுக்கு கிடைக்கின்ற முதலீட்டின் மீதான வருவாய்I, ஆண்களை விட சராசரி ஒரு சதவீதம் அதிகமாக இருக்கிறது. 7% -18% வரை என்பதாக இருக்கும் ஆரம்ப குழந்தைப் பருவக் கல்வி மூலம் கிடைக்கின்ற வருவாய் சராசரியாக 13% ஆக இருக்கின்றது. ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) பெற்றுக் கொண்டவர்கள் அடிப்படையில் உள்ளீடுகள், கல்வி ஆகியவற்றை மிக இளம் வயதிலேயே பெற்று விடுவதால் கிடைக்கின்ற  ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் கல்வி ஆகியவையே இதற்குக் காரணமாக இருக்கின்றன” என்று வரைவறிக்கை (பக்கம் 400) குறிப்பிடுகிறது. 

image.png

“பள்ளிக்கு முந்தைய கல்வி என்பது அதிக வருமானம், சொந்த வீடு, மிக குறைந்த அளவிலே வேலை வாய்ப்பின்மை, குற்றங்கள், கைது போன்ற நீண்ட காலப் பலன்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக உலகளாவி நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. தேசிய வருமானத்தைப் பொறுத்தவரையில், மழலைக் கல்வியை நல்ல முறையில் உருவாக்குவதன் மூலமாக முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயையும் பத்து ரூபாயாக இந்தியா திரும்பப் பெறலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், மழலைக் கல்வியில் செய்யப்படுகின்ற முதலீடுகள் மிகச் சிறந்த, நேர்மையான, படைப்புத் திறன் கொண்ட, உறுதியான, செயல்திறம் மிக்க மனிதர்களை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தரும்” என்று கூறி மழலைக்கான கல்வியை இந்த வரைவறிக்கை (பக்கம் 54) வலியுறுத்துகிறது. 

image.png

மேலும் “'சமூக வருவாய்' என்று குறிப்பிடப்படுகிற, சமூகத்திற்கு கல்வி மூலம் கிடைக்கின்ற பலன்கள், ஓரளவிற்கு பணத்தின் மூலமாக அளவிடும் வகையிலேயே இருக்கின்றன. இந்தப் பலன்கள் பல வழிகளிலும் பெறப்படுகின்றன, எடுத்துக்காட்டாக கல்வியறிவு பெற்ற தொழிலாளர்களின் அதிக உற்பத்தி திறன், பொருளாதார நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப ஊக்கமளித்தல், ஆராய்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சியால் உந்தப்பட்ட புதுமை, உற்பத்திப் பணிகளில் பெண்களின் அதிக பங்களிப்பு, சிறந்த பொது சுகாதாரத்தின் விளைவுகள், குறைந்த அளவிலான சிறைவாசம், குறைவான குழந்தை இறப்பு விகிதம், மேம்பட்ட குடும்பக் கட்டுப்பாடு, அதிகரிக்கப்பட்ட ஆயுட்காலம் போன்றவை இதில் அடங்கும்” என்று இந்த வரைவறிக்கை குறிப்பிடுகிறது (பக்கம் 400).

இவ்வாறு கல்வியைப் பொருளாக்கி அதைப் பொருளாதாரத்துடன் இணைத்து பல இடங்களில் இந்த வரைவறிக்கை பேசுகிறது. கல்வி என்பது அறிவைப் பெறுவதாக, அறிவார்ந்த சமூகம் என்பது தேசத்தின் நலனுக்கானதாக இருக்கும் என்று ஒருபுறம் கூறி விட்டு, மறுபுறத்தில் கல்வியை நேரடியாக தேசத்தின் பொருளாதரத்துடன் இணைத்துப் பேசுவது கல்வியை சந்தைப் பொருளாதாரப் பொருள் ஆக்குகின்ற செயலன்றி வேறேதுமில்லை. கல்வி மூலம் கிடைக்கின்ற பலன்களை பொருளாதார நோக்கில் அளவிடுகின்ற இத்தகைய போக்கு, நிச்சயமாக இந்த வரைவறிக்கை குறிப்பிடுவதைப் போல கல்வி வணிகமயமாவதைத் தடுத்து நிறுத்த உதவாது என்பது உறுதி. தனியார் கல்வி நிறுவனங்களும், அரசு கல்வி நிறுவனங்களும் ஒரே மாதிரியாகவே நடத்தப்படும் என்று சொல்லி விட்டு, உடனடியாக கல்வி வணிகமயமாவது தடுத்து நிறுத்தப்படும் அதே வேளையில் தயாள குணம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்படும் (பக்கம் 210) என்று சொல்கிற வரைவறிக்கையின் பார்வையில்  இது போன்ற பரிந்துரைகள் நியாமமானவையாகவே இருக்கக் கூடும். 

கட்டுரையாளர்: முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்

;