tamilnadu

img

பி.ராமமூர்த்தி எனும் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்! - அ.அன்வர் உசேன்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றா ண்டு விழா கொண்டாடுகின்ற இத்தரு ணத்தில் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்து கொண்ட ஊழியர்கள் மற்றும் தலைவர்களின் பணியை நினைவுகூர்வது பொது வுடமை இயக்கத்தை மேலும் முன்னெடுக்க ஊக்கம் தரும். அத்தகைய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் பி. ராமமூர்த்தி. டிசம்பர் 15 அவரது நினைவு நாள். தோழர் பி.ஆர். என அன்புடன் அழைக்கப்படும் பி.ராமமூர்த்தி அவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் மிக முக்கியமான தலைவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் புடம்போட்ட தங்கமாக தொடங்கிய அவரது அரசியல் வாழ்வு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என செழுமையான வரலாறு கொண்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தின தலைவர்களில் ஒருவராகவும் சிஐடியு அமைப்பின் முதல் பொது செயலாளராக அதன் தூண்களில் ஒருவராகவும் விளங்கினார். அரசியல்/தொழிற் சங்கம்/ சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர்/ மார்க்சிய சித்தாந்தவாதி  என பன்முகத் தன்மை கொண்ட பணிகளில் முத்திரை பதித்தார். தேசிய அளவில் அவரது பணிகள் பரந்து விரிந்தி ருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகளை குறிப்பிடுவது இக்கட்டுரை யின் முக்கிய நோக்கம் ஆகும்.

முல்லைப் பெரியாறு மின் திட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் தனித்துவம் என்பது அதன் பாசன பகுதிகள் தமிழகத்தில் இருந்தாலும் அணை கேரளாவில் இருக்கிறது. பாசன நீர் தேவைக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில் அங்கு ஒரு புனல் மின் நிலையம் உருவாக்க தமிழகம் விரும்பியது. அதற்கு கேரள அரசாங்கத்தின் உதவி தேவைப்பட்டது. அப்பொழுது கேரளாவின் திருவாங்கூர்-கொச்சி பகுதிக்கு பட்டம்தாணுப் பிள்ளை முதல்வராகவும் தமி ழகத்தில் இராஜாஜி முதல்வராகவும் இருந்தனர். இருவருமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். எனினும் உடன்பாடு எட்ட முடியவில்லை. இந்தச் சூழலில் தோழர் பி.ஆர். அவர்கள் பட்டம் தாணுப் பிள்ளையிடம் பேசினார். அப்பொழுதும் அவர் மறுத்தார். மறுப்புக்கு காரணம் கூறும்படி பி.ஆர். வற்புறுத்தினார். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரும் தமிழகத்திற்கு செல்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு அணா மட்டுமே கேரளா பெறுகிறது. இப்பொழுது மின்சாரமும் தமிழகத்திற்கு எனில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என பட்டம் தாணுப் பிள்ளை கேட்டார். அப்படியானால் மின்சாரத் திற்கு நியாயமான விலை கொடுத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என பி.ஆர். கேட்டார். அதற்கு அவர்  பதில் சொல்லவில்லை.

பி.ஆர். தமிழக முதல்வர் ராஜாஜியிடம் இந்த விவாதங்களை கூறினார். பின்னர் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 2 பைசா எனில் ஏற்றுக் கொள்ளலாம் என ராஜாஜி கூறினார். அதன் அடிப்படையில் பி.ஆர். அவர்கள் மீண்டும் பட்டம்தாணுப் பிள்ளை யிடம் பேசினார். அவர் 4 பைசா என்று கூற பி.ஆர்.  ஒரு பைசா என முன்வைக்க இறுதியில் இரண்டு பைசா என பட்டம்தாணுப் பிள்ளை ஏற்றுக் கொண்டார். அதனை பி.ஆர். அவர்கள் ராஜாஜியி டம் தெரிவிக்க பின்னர் இரண்டு அரசாங்கங்களு க்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் இன்று 140 மெ.வா. மின்சாரத்தை தமிழகம் பெறுகிறது. 

பரம்பிக் குளம்- ஆழியாறு திட்டம்

1947 முதல் 1957 வரை கேரளா மற்றும் தமிழ கத்தில் காங்கிரஸ் அரசாங்கங்கள் இருந்தாலும் இந்த முக்கியமான திட்டம் உருவாகவில்லை. இதற்கு முக்கியக் காரணம் கேரளாவில் உள்ள காங்கி ரஸ் தலைவர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கேரளா மக்களிடம் செய்த பிரச்சாரம்தான். இந்தச் சூழலில் தான் 1957ஆம் ஆண்டு தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது. அப்பொழுது கேரள கட்சிப் பணிகளுக்கு தோழர் பி.ஆர். பொறுப்பாளராக இருந்தார். தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களின் பாசனத் தேவை குறித்து பி.ஆர். இ.எம்.எஸ். அவர்களிடமும் பாசனத்துறை அமைச்சர் வி.ஆர். கிருஷ்ணய்யரிடமும்பேசினார். அப்பொழுது தமிழ கத்திற்கு காமராஜர் முதல்வராகவும் சி. சுப்பிரமணி யம் நிதி அமைச்சராகவும் இருந்தனர்.  கேரள கம்யூ னிஸ்டு அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டது. எனினும் ஒரு பிரச்சனை இருந்தது. இ.எம்.எஸ். ஆட்சியை கலைக்க காங்கிரஸ் நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தை தனது அரசியலுக்கு காங்கிரஸ் பயன் படுத்தாமல் இருக்க உத்தரவாதம் தேவைப்பட்டது.

பி.ஆர். காமராஜரிடமும் சி. சுப்பிரமணியத்திட மும் இது குறித்துப் பேசினார். அவர்களும் காங்கிர சின் அகில இந்திய தலைமையிடம் பேசுவதாகக் கூறினர். அப்பொழுது உள்துறை அமைச்சராக கோவிந்த வல்லபபந்த் இருந்தார். அவரிடம் பி.ஆர். பேசினார். ஆனால் கேரளாவில் உள்ள காங்கிரசாரை எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்குமாறு கூற முடியாது என அவர் கை விரித்துவிட்டார். இந்த நிலையில் மீண்டும் இந்த திட்டம் குறித்து  இ.எம்.எஸ்.சிடம் பி.ஆர். பேசினார். அப்பொழுது கேரளா மற்றும் தமிழகம் இரண்டு மாநிலங்களும் பயன்பெறும் வகையில் ஒரு திட்ட வரைவு அறிக்கை தயார்படுத்தப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு எடுபடாமல் போனது. இந்த திட்டம் குறித்து காமராஜரும் இ.எம்.எஸ்.சும் நேரடி யாக பேசினர். இந்த தொடர் முயற்சிகள் காரணமாக இரு மாநிலங்களுக்கும் ஒப்பந்தம் உருவானது. இப்படித்தான் பரம்பிகுளம் ஆழியாறு நீர்ப் பாசனத் திட்டம் உருவானது. 

இந்த திட்டத்திற்கான பணி தொடங்கிய சில மாதங்களில் இ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. ஒரு வேளை இ.எம்.எஸ். ஆட்சியில் இந்த ஒப்பந்தம் உருவாகாமல் இருந்திருந்தால் பின்னர் இந்த திட்டம் தமிழகத்திற்கு கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். இந்த திட்டத்திற்கு பி.ஆர். அவர்களின் தொடர் முயற்சி யும் இ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் அர சாங்கம் கேரளாவில் இருந்ததும் மிக முக்கிய காரணங்கள் ஆகும்.

நெய்வேலி ஆலையின் சிற்பி

நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் பூமிக்கடியில் ஏராளமான பழுப்பு நிலக்கரி படி வங்கள் இருப்பது விடுதலைக்கு முன்பே கண்டு பிடிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி தேவைப்பட்டது. எனினும் விடுதலைக்கு பின்பு நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்தார். நிலக்கரிக்கு கீழ் உள்ள தண்ணீரில் ஏராளமான அழுத்தம் இருப்பதாகவும் நிலக்கரி எடுக்கும் பொழுது அந்த நீர் வெளியே வந்து சுற்றுப்புறப் பகுதி கள் அனைத்தும் வெள்ளக் காடாகிவிடும் எனவும் அரசாங்கம் கூறியது. இந்த சமயத்தில் ஒரு தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்க சோசலிஸ்ட் நாடான கிழக்கு ஜெர்மனி க்கு பி.ஆர். சென்றார். அங்கு பழுப்பு நிலக்கரி சுரங் கங்கள் இருப்பதை அறிந்தார். நீர் அழுத்தம் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதை விரிவாகக் கேட்டறிந் தார். இந்தியா திரும்பிய பின்னர் தோழர் அனந்த நம்பியாருடன் டி.டி.கிருஷ்ணமாச்சாரியை சந்தித்து விவரங்களை கூறினார். அப்பொழுதும் அவர் மசிய வில்லை. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் தராவிட்டால் காங்கிரஸ்தான் நெய்வேலி திட்டத்தை தடுக்கிறது என தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்வோம் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் எச்சரித்தனர்.

பிரதமர் நேருவையும் சந்தித்து பி.ஆர். இந்த திட்டம் குறித்து வற்புறுத்தினார். இடைவிடாத முயற்சிகள் காரணமாக இறுதியில் ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் கிழக்கு ஜெர்மனியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்களின் உதவியுடன் திட்டம் தயாரிக் கப்பட்டு பின்னர் சுரங்கப் பணிகள் தொடங்கப் பட்டன. இந்தத் திட்டம் பெரும் வெற்றி பெற்றது. இன்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுவது மட்டுமல்ல; தமிழக தொழில் வரைபடத்தில் நெய்வேலி மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 

பெல் தோற்றமும்  பின்னர் பாதுகாப்பும்

மின்உற்பத்திச் சாதனங்கள் தயாரிக்க இந்தியா வில் பல இடங்களில் ஆலைகள் அமைக்க வேண்டும் எனும் தேவை எழுந்த பொழுது ஒரு ஆலை தமிழகத்தில் அமைய வேண்டும் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த நம்பியார்/ திருச்சி சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம்/ புதுகை நாடாளுமன்ற உறுப்பினர் உமாநாத் மற்றும் பி.ஆர். ஆகியோர் வற்புறுத்தினர். ஆனால் இந்த ஆலையை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல சஞ்சீவரெட்டி முனைப்புடன் செயல்பட்டார். தோழர் பி.ஆர். அப்பொழுது முதல்வராக இருந்த காமராஜரை சந்தித்து சஞ்சீவ ரெட்டியின் எதிர்ப்பை மீறி இங்கு ஆலை கொண்டுவர வற்புறுத்தினார். இதற்காக உருவாக்கப்பட்ட குழு இறுதியில் திருச்சியை தேர்வு செய்தது.  இவ்வாறு கம்யூனிஸ்டு தலைவர்கள், காமராஜர்  ஆகி யோரின் தொடர் முயற்சியால் பெல்  திருச்சி ஆலை அமைந்தது. (சஞ்சீவ ரெட்டி ஆந்திராவிலும் ஒரு ஆலையை அமைப்பதில் வெற்றி கண்டார் என்பது தனி வரலாறு). திருச்சி ஆலை அன்றைய சோச லிஸ்ட் நாடான செக்கோஸ்லோவேகியாவின் உதவியுடன் உருவானது.

1977ஆம் ஆண்டு ஜனதா ஆட்சியில் தொழில் அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார். ஜனதா அரசாங்கம் தனியார்மயத்தை ஆதரிக்கும் என்பதை மோப்பம் பிடித்த மேற்கு ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனம் தனது சதித் திட்டத்தை துவக்கியது. பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் மேற்கு ஜெர்மனி அரசாங்கம் மூலமாக பெர்னாண் டஸ் உதவியுடன் பெல் நிறுவனத்தை  தன் குடையின் கீழ் கொண்டு வர திட்டமிட்டது. கிட்டத்தட்ட பெல்-ஐ விழுங்குவது என்பதுதான் இலக்கு. இதற்காக ஒரு இரகசிய ஒப்பந்தமும் போடப்பட்டது. தொழிலா ளர்களுக்கோ அல்லது தொழிற் சங்கங்களுக்கோ அல்லது இந்திய மக்களுக்கோ இந்த ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகளும் உடந்தை யாக இருந்தனர். அதே சமயம் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். அந்தச் சூழலில் இந்த நாசகர ஒப்பந்தம் குறித்து பி.ஆரின் கவனத்திற்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை இது குறித்து விவா தித்து இதனை அம்பலப்படுத்தி ஒரு நூலை எழுது மாறு பி.ஆரை பணித்தது. ஒரு அற்புதமான ஆய்வு நூலை அவர் எழுதினார். இந்திய அரசி யலில் அது மிகப்பெரிய அதிர்வலைகளை உரு வாக்கியது. மாநிலங்களவையில் பி.ஆர். சுமார் 90 நிமிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார். தொழிலாளர்களும் போராட் டங்களை நடத்தினர். வேறு வழியின்றி ஜனதா அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழர் பி.ஆரின் கடும் முயற்சி மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக திருச்சி ஆலை மட்டுமல்ல; போபால்/ ஹைதராபாத்/ ஹரித்துவார் உட்பட அனைத்து ஆலைகளும் பாதுகாக்கப்பட்டன.  இப்படி தமிழகத்திற்காக பி.ஆர். ஆற்றிய பணிகள் குறித்து நீண்ட பட்டியல் போடலாம். சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கையின் மீது முதன் முதலில் தமிழில் பேசியது, மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்ற மாநிலங்களவையில் தீர்மானம் முன் மொழிந்தது (பி.ஆர். சிறையில் இருந்ததால் புபேஷ் குப்தா பி.ஆர். சார்பாக இதனை முன் மொழிந்தார்), கலப்பு திருமண தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை களுக்கு சொத்துரிமை, 1952ஆம் ஆண்டே மே தினத்திற்கு விடுமுறை கோரியது, சேது சமுத்திரம்/ தூத்துக்குடி துறைமுகம்/ சேலம் இரும்பாலை/ மாக்னசைட் மற்றும் பாக்சைட் எடுக்க ஆலைகள் / ஓசூரில் இரண்டாவது அசோக் லேலண்ட் ஆலை விரிவுபடுத்தியது என பலவற்றை குறிப்பிடலாம். உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தும் அதே சமயத்தில் ஆக்கப்பூர்வமான திட்டங் களுக்காகவும் கம்யூனிஸ்டுகள் உழைப்பார்கள் என்பதற்கு பி.ஆரின் முயற்சிகள் ஒரு முன்னு தாரணம்.

வாலிபர் இயக்கம்

இந்திய அளவில் வாலிபர் அமைப்பு உருவா வதற்கு முன்பு தமிழகத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, சோசலிஸ்ட் இளைஞர் முன்னணி என பல பெயர்களில் அமைப்புகள் செயல்பட்டன. அப்பொழுது முதல் மாநாடு திருப்பூரில் நடந்தது. பி.ஆர். தான் சிறப்புப் பேச்சாளர்.  இந்திய சமூகத்தில் வாலிபர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து குறிப்பாக வர்ணாசிரமம், சாதியம் எப்படி சமூக முன்னேற்றத்துக்கு தடைக்கற்களாக உள்ளன என்பதை ஆழமாக சுட்டிக்காட்டினார். பி.ஆரின் இறுதிக் கட்டமும் வாலிபர் இயக்கத்து டன் தொடர்புடையதாகவே அமைந்தது. ஆம்! சென்னையில் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக பி.ஆர். பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார். அப்பொழுது தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீளாமல் நம்மைவிட்டு பிரிந்தார்.

அவரது இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் கட்சி யின் இன்னொரு மகத்தான தலைவரான தோழர் பி.டி.ரணதிவே அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “கம்யூனிஸ்ட் உறுதி, நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை, ஓய்வறியா உழைப்பு ஆகியவற்றின் மறு பெயர்தான் பி.ஆர்.” இந்த நூற்றாண்டு விழா தருணத்தில் கம்யூ னிஸ்டுகளுக்கு பி.ஆரிடமிருந்து  கற்றுக் கொள்வ தற்கு ஏராளம் உள்ளது.



 

;