tamilnadu

img

2019 தேர்தல்: உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் தோற்கும்

(தீபங்கர் பாசு மற்றும் தேபர்ஷி தாஸ்

2019 ஏப்ரல் 28, தி வயர் இணைய இதழ்

தீபங்கர் பாசு, பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியர், மாசசூசெட்ஸ் அம்ஹெஸ்ட் பல்கலைக்கழகம்.

டெபர்ஷி தாஸ், சமூக அறிவியல் துறை இணைப் பேராசிரியர், ஐஐடி, கௌகாத்தி)

உருவாகியிருக்கும் மகாகூட்டணி பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதத்தைக் குறைக்காது என்றாலும், அந்தக் கட்சிக்கு கிடைக்கக் கூடிய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்றே கடந்தகாலங்களில் பதிவாகி இருக்கின்ற வாக்குப்பதிவு போக்குகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற பகட்டான வெற்றியானது பீகார், சத்தீஸ்கர், டெல்லி, ஹிமாசலப் பிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய ஹிந்தியை மையமாகக் கொண்டுள்ள பத்து மாநிலங்களில் பெற்ற மகத்தான வெற்றியைச் சார்ந்தே அமைந்திருந்தது. மையத்தில் அதிகாரத்தில் அமர்வதற்கான முயற்சியில் வெற்றியைப் பெறுகின்ற வகையில், இந்த பத்து மாநிலங்களில் இருக்கின்ற 225 நாடாளுமன்றத் தொகுதிகளில் 190 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றியைத் தழுவியது.

2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றி என்பது இந்த மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் அந்தக் கட்சி எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்பதிலேயே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மிக அதிகமான இடங்களை உத்தரப்பிரதேசம் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாமல், ஹிந்தியை மையமாகக் கொண்டுள்ள அந்தப் பகுதியில் மிக அதிகமான தொகுதிகளைக் கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த மாநிலம் இருக்கிறது.

இந்தக் கட்டுரை உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவின் செயல்பாடுகளை முன்வைத்து 2019ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எவ்வாறு வெற்றி பெறும் என்பதை விளக்குவதாக இருக்கிறது. இந்த முயற்சி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), சமாஜ்வாதி கட்சி (எஸ்பி), ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி (ஆர்எல்டி) ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டிருக்கின்ற தேர்தல் கூட்டணியால் ஏற்படப் போகின்ற தாக்கத்தை புரிந்து கொள்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. மிகவும் வெளிப்படையாக பாஜகவிற்கு எதிராக தங்களுடைய கவனத்தைச் செலுத்தியிருப்பதன் மூலம், அனைத்து வழிகளிலும் 2019 மக்களவைத் தேர்தல்களின் முடிவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த தாக்கத்தை அளவிட முயற்சிப்பதாகவே இந்தக் கட்டுரை இருக்கிறது.

கடைப்பிடிக்கப்பட்ட ஆய்வு முறை

2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைக் கணிப்பதற்காக, 2017 சட்டசபைத் தேர்தல்கள், 2014 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வாக்குகள் செலுத்தப்பட்ட முறையை நாங்கள் பயன்படுத்தினோம். தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் வாக்குப் பதிவு தரவு மற்றும் pollniti.com என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளையே நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் எந்த நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றது என்பதை நாங்கள் முதலில் கண்டறிந்தோம். ஒரு நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்குகின்ற சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளை கூட்டுவதன் மூலம், பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்தள், சமாஜ்வாதி போன்ற பிரதான கட்சிகள் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பெற்று, அதனை நாங்கள் ஒப்பீடு செய்தோம்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பெற்ற வாக்குகளைக் கூட்டி, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கையை நாடாளுமன்றத் தொகுதியின் மொத்த வாக்குகள் கொண்டு வகுத்து அந்தந்த பாராளுமன்றத் தொகுதியில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்கு சதவீதத்தை நாங்கள் கணக்கிட்டோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சியும் பெறவிருக்கின்ற வாக்குகளின் சதவீதத்தை முன்னறிந்து கொள்வதற்கு நாங்கள் இந்த வாக்கு சதவீதத்தைப் பயன்படுத்தினோம். மகாகூட்டணியின் வாக்கு சதவீதத்தை அறிந்து கொள்வதற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக்தள் ஆகிய கட்சிகளின் வாக்கு சதவீதங்களை சேர்த்து கூட்டிக் கொண்டோம். அதிகபட்ச வாக்கு சதவீதத்தைக் கொண்ட கட்சி அல்லது கூட்டணியை வெற்றியாளராக இறுதியில் அறிவித்தோம்.

நாங்கள் கடைப்பிடித்த இரண்டாவது முறை மிகவும் நேரடியானதாக இருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் பெறவிருக்கும் வாக்கு சதவீதத்தைக் கண்டறிவதற்காக, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை அப்படியே நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். முதலாவது முறையில் கடைப்பிடித்ததைப் போலவே, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக்தள் ஆகிய கட்சிகளின் வாக்கு சதவீதங்களைக் கூட்டி, அந்தக் கூட்டணியின் வாக்கு சதவீத கணிப்பைச் செய்தோம். இங்கேயும் அதிக வாக்கு சதவீதம் பெற்ற கட்சியை அல்லது கூட்டணியை வெற்றி பெற்றதாக அறிவித்தோம்.

 

எங்களுடைய கணிப்பு முடிவுகள் பின்வரும் அட்டவணையில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.

 

ஆய்வு முடிவுகள்

2014ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும்? அதன் வாக்கு சதவீதத்தில் பெருமளவிற்கு மாற்றம் எதுவும் இருக்காது. 2014இல் 42.3% ஆக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 39.5% ஆக குறைந்து விட்டது என்று முதலாவது முறை ஆய்வு காட்டுகிறது.இரண்டாவது முறையில் பாஜகவின் வாக்கு சதவீதம் மாறாமல் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றாலும், பாஜக வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாகபாதிக்கப்படும் என்றே தெரிய வருகிறது. 2017 சட்டமன்றத் தேர்தல்களின் முடிவை அடிப்படையாகக் கொண்ட முதலாவது முறையைப் பயன்படுத்தும் போது, பாஜக வெற்றி பெறும் இடங்கள் 2019இல் 71இல் இருந்து 27 ஆக குறைந்து விடுகிறது. ஆக 2017 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் அடிப்படையில் பார்த்தால், 44 தொகுதிகளை இந்தத் தேர்தலில் பாஜக இழந்து விடும். 

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட இரண்டாவது முறையில், பாஜக வெற்றி பெறும் இடங்கள் 30 ஆக குறைந்து விடுகிறது. அதாவது சென்ற தேர்தலில் வென்ற 41 இடங்களை பாஜக இந்த முறை இழக்க நேரிடும். ஆக இந்த இரண்டு வழிமுறைகளிலுமே பாஜக தான் வென்ற தொகுதிகளை கணிசமாக இழக்கின்ற வகையில் ஒரே மாதிரியான முடிவுகளே நமக்கு கிடைக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் இழக்கின்ற 40-க்கும் அதிகமான தொகுதிகளின் எண்ணிக்கையை மற்ற மாநிலங்களில் இருந்து பாஜக பெற்று ஈடுகட்டிக் கொள்ளுமா என்பது மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டில், வட மற்றும் மேற்குஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போது நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் இந்தப் பகுதிகளில் பாஜக இழப்பை எதிர்கொள்ளக் கூடும் என்பதால் உத்தரப்பிரதேசத்தில் கட்சிக்கு ஏற்படுகின்ற இழப்பை இந்தப் பகுதிகளில் அது பெறுகின்ற வெற்றியால் ஈடு செய்ய முடியாது. கிழக்கு மற்றும் தென்னிந்தியாவிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜகவால் உறுதிப்படுத்த இயலாது என்பதே உண்மை. ஆக உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெறப் போகின்ற தோல்வியானது அடுத்த மத்திய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று அந்தக் கட்சிக்கு இருக்கின்ற ஆசைக்கு தொல்லை கொடுப்பதாகவே அமையப் போகிறது.

2014 மற்றும் 2019க்கு இடையிலான காலகட்டத்தில் பாஜகவின் தேர்தல் அதிர்ஷ்டத்தில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான காரணங்கள் பெரும்பாலும் தேர்தல் கணக்குகளால் தீர்மானிக்கப்படுவதாகவே இருக்கின்றன. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கென்று உத்தரப்பிரதேசத்தில் கணிசமான  தேர்தல் களம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.  மூன்று முனை அல்லது நான்கு முனைப் போட்டிகளிலேயே தேர்தல் வெற்றிகளை பாஜகவால் பெறமுடிந்திருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே செல்வாக்கு கொண்டதாக இருந்தாலும், பாஜவிற்கு பலத்த அடியைக் கொடுக்குமளவிற்கு போதுமான வாக்கு வலிமையை ராஷ்ட்ரிய லோக்தளம் கொண்டுள்ளது.

தற்போதைய சூழலில், சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜ் அல்லது ராஷ்ட்ரிய லோக்தளம் போன்ற கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று பாஜகவைத் தோற்கடிக்கும் சக்தியற்றவையாகவே இருந்து வருவது இதற்கு முந்தைய இரண்டு தேர்தல்களின் வாக்குப் பகிர்வு தரவுகளில் இருந்து தெளிவாகத் தெரிய வருகிறது. பாஜக தன்னுடைய வாக்கு வங்கியை இழந்து விடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2014க்கும் 2017க்கும் இடையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களுடைய வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளன. இந்த இரு கட்சிகளும் பெற்றிருக்கும் வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், அவை இரண்டும் தங்களுடைய வாக்கு சதவீதத்தை பாஜகவின் வாக்கு சதவீதத்திற்கு இணையாகவோ அல்லது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளுக்கு அதிகமாகவோ பெற்றிருக்கின்றன.

ஆக வாக்களிப்பு முறைகளில் கடுமையான மாற்றங்கள் இல்லை என்றால், பாஜக வென்றெடுக்க கூடிய தொகுதிகளை சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி நிச்சயம் குறைத்து விடும். முதலாம் முறையில் கிடைக்கும் கணிப்பு உண்மையாக இருக்குமேயானல், காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு இடமும் கிடைக்காமல் போகலாம். இதுஒன்றும் ஆச்சரியப்படுத்தும் செய்தியல்ல. இங்கிருக்கின்ற தேர்தல் அமைப்பில், மூன்று கட்சிகளின் ஒருங்கிணைந்த வல்லமை என்பது சிறிய கட்சிகளை அழித்து விடக் கூடியதாகவே இருக்கும்.

முன்னெச்சரிக்கைகளும், முடிவுகளும்

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, குறிப்பாக தேர்தல் முடிவுகளில், முன்னறிந்து கொள்வதற்காக கடந்த காலத்தைப் பயன்படுத்துவது என்பது எப்போதுமே ஆபத்தான முயற்சியாகும். இரண்டு தேர்தல்களுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் நிச்சயம் மாறியிருக்கும். இத்தகைய மாற்றங்களை தங்களுக்கு ஆதரவாக வடிவமைக்கின்ற வகையில் அரசியல் கட்சிகள் இந்த காலகட்டத்தில் செயல்பட்டிருக்கும்.

தற்போதைய 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிப்பு எவ்வாறு நடக்கப் போகின்றது என்பதைக் கணிப்பதற்கு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 2017 சட்டசபைத் தேர்தல்களில் வாக்களிப்பு நடைபெற்ற முறையைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது என்றால், இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கணிப்புகள் தவறானவையே இருக்கும். ஆனாலும் இத்தகைய ஆய்வுகளை நம்பத் தகுந்தவை என்று நம்ப வைக்கின்ற வகையில் சில தேர்தல் மற்றும் அரசியல் காரணங்கள் இருக்கின்றன.

முதலில் தேர்தல் காரணங்களை நாம் பார்க்கலாம். முதலாவதாக, மகாகூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தங்களுக்கிடையே வாக்குகளை மாற்றிக் கொள்வதில்லை. சொல்லப் போனால், அண்மைக் காலம் வரையிலும் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கிடையே மோசமான உறவே நீடித்து வந்தது. இந்தக் கட்சிகளின் வாக்காளர்கள் சாதி விசுவாசம் கொண்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய வாக்குகள் உடனடியாக மாற்றிக் கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன. எங்கள் ஆய்வுமுறைகள் மற்றும் முன்கணிப்புகளில் இது குறித்த மிகச் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது. இருந்த போதிலும் இந்த கூட்டணி கோரக்பூர், புல்பூர், கைராணா போன்ற தொகுதிகளில் அண்மையில் வெற்றி பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. இவ்வாறான சோதனைகளை மாநில அளவில் வெற்றிகரமாக பிரதிபலிப்பதற்கான வாய்ப்புகளை மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இணைந்து கலந்து கொண்ட சமீபத்திய பேரணி அதிகரித்திருக்கிறது. இரண்டாவதாக, மற்ற கட்சிகளுடன் (உதாரணமாக, காங்கிரஸ்) இருந்த முஸ்லீம் மற்றும் மதச்சார்பற்ற வாக்குகள் பாஜகவிற்கு எதிரான ஒரே தீவிர போட்டியாளராக உருவாகிய இந்த மகாகூட்டணியை நோக்கி நகரக் கூடும். முதல் காரணி பாஜகவின் செல்வாக்கை மேம்படுத்தும் போது, இந்த இரண்டாவது காரணி அந்த செல்வாக்கைக் குறைப்பதாக இருக்கும். இந்த முரண்பாடான போக்குகள் ஒன்றையொன்று இல்லாமல் செய்து சமநிலையை ஏற்படுத்தும்.

அரசியல் காரணங்களைப் பொறுத்த மட்டில், இளைஞர்களிடையே அதிகரித்து வந்த வேலையின்மை, விவசாயத் துறையில் ஏற்பட்டிருந்த துயரம், முறைசாராத் துறை ஊழியர்களின் ஆபத்தான வாழ்க்கை என்று பெரும்பான்மையினரின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற கட்சியாக இருக்கும் என்று திட்டமிட்டு ஏற்படுத்திய தோற்றத்தின் மூலமாகவே 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததை நாம் கவனிக்க வேண்டும், "ஊழல் நிறைந்த, செயல் திறனற்ற காங்கிரஸ்" என்று கூறி தன்னை காங்கிரஸிடமிருந்து வேறுபடுத்திக் கொண்டதாலேயே, தன் மீது கவனத்தைத் திருப்பி அந்த வெற்றியை பாஜக எளிதில் பெற்றது. 

ஆனால் இப்போது அதே பிரச்சினைகள் பாஜகவை எதிர்கொண்டிருக்கின்றன. வேலைகளை உருவாக்குவோம் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. வெற்று வாக்குறுதிகள் மற்றும் கந்துடைப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து, அதிகரித்து வரும் விவசாயிகளின் துயரங்கள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, பேரிடர் ஏற்படுத்திய பணமதிப்பு நீக்க அறிவிப்பு, அவசர அவசரமாகச் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் சாதாரண குடிமக்கள் மீது பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மிகுந்த தேசபக்தி கொண்ட செயல் என்று விளம்பரப்படுத்தியதன் மூலம், 2017 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியால் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற முடிந்தது. அந்தச் சமயத்தில் எதிர்க்கட்சிகளுக்கிடையே இருந்த ஒற்றுமையின்மையும் பாஜகவிற்கு உதவியது. ஆனால் மிக விரைவிலேயே உண்மை நிலவரம் திரும்பியது. 2018ஆம் ஆண்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வாக்காளர் மனநிலையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை முழுமையாக அடையாளம் காட்டின.

வேலையற்ற இளைஞர்கள், ஏழ்மையில் உழல்கின்ற விவசாயிகள், ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் என்று யாருடைய வாழ்க்கையிலும் 2018 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களை பாஜக அரசாங்கம் கொண்டு வரவில்லை. இந்த பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்ற வகையில், தேசபக்தி வெறி, மத வெறுப்புணர்வைத் தூண்டி விடுதல் என்று பாஜக எடுத்து வருகின்ற தீவிரவாத முயற்சிகளைத் தவிர வேறு எந்த முயற்சிகளையும் அந்தக் கட்சி இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

பாஜக அடைந்திருக்கும் இந்த தோல்விகளை அதிகரிக்கச் செய்வதாகவே சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் – ராஷ்ட்ரிய லோக்தள் கூட்டணியைப் பலப்படுத்துகின்ற வகையில் இருக்கின்ற தேர்தல் கணக்குகள் இருக்கும் என்பதால், தன்னுடைய சொந்த களத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதே உறுதி.


 நன்றி: https://thewire.in/politics/uttar-pradesh-elections-2019-bjp-sp-bsp-rld 

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு  விருதுநகர்

;