புதுதில்லி:
ஆறு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக புதிய புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதுகுறித்து பல்வேறு ஏடுகளில் வெளிவந்துள்ள விபரங்களின் தொகுப்பு வருமாறு:
ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு - தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன்?
இதில் மிகப்பெரிய பிரச்சனை மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தது ஆகும். சில இடங்களில் மாதிரி வாக்குகளை பதிவு செய்யும் பொழுது எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு விழுவதாக செய்திகள் இன்னும் வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இதனை தமது அனுபவமாகவே பதிவு செய்துள்ளார் (இந்தியன் எக்ஸ்பிரஸ் 09.05.2019). இந்த சூழலில்தான் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி அளவில் 50% ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 21 எதிர்க்கட்சிகள் கூட்டாக தேர்தல் ஆணை யத்திடம் மனு கொடுத்தன. தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1 வாக்குச் சாவடிக்கான வாக்கு இயந்திரங் களில் மட்டுமே ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்க முடியும் என ஆணையம் கூறியது. ஒப்புகை சீட்டுகளை சரிபார்ப்பது என்பது இது வெறும் 0.44%தான்!
எனவே எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை அணுகின. எதிர்க்கட்சிகளின் வாதத்தில் உள்ள அடிப்படைக் கோட்பாடை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஒப்புகைச் சீட்டு சரி பார்ப்பதை அதிகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கூறியது. தேர்தல் ஆணையம் ஒருவாக்கு சாவடி என்பதை 5 வாக்குச் சாவடி களுக்கு சரிபார்ப்பது என அதிகரித்தது. இது வெறும் 2%தான்! எதிர்க்கட்சிகள் கோரிக்கை யோ 50%. எனவே எதிர்க்கட்சிகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகின. தமது கோரி க்கையை 50%லிருந்து 33%ஆக குறைக்கவும் முன்வந்தன. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த நியாயமான வேண்டுகோளை ஏற்கவில்லை.
ஒப்புகை சீட்டுகளை சரிபார்ப்பதில் தேர்தல் ஆணையத்தின் விருப்பமின்மை என்பது ஜனநாயக விரோதமானது என ஓய்வு பெற்ற 66 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். ஆனால் எதுவும் தேர்தல் ஆணையத்தை அசைய வைப்பதாக தெரிய வில்லை. இதன் ஒட்டுமொத்த விளைவாக வாக்கு இயந்திரங்கள் மீது நம்பகத்தன்மை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது எனில் மிகை அல்ல!
வாக்கு இயந்திரங்கள் முரண்பாடான தகவல்கள்
இந்த நிலையில்தான் மும்பை நீதிமன்றத்தில் மனோரஞ்சன் ராய் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களான இ.சி.ஐ.எல். (Electronic corporation of India Ltd) மற்றும் பி. இ.எல்.(Bharat Electronics Ltd) ஆகிய நிறு வனங்களிடமிருந்து ராய் தகவல்களை பெற்றார். இந்த தகவல்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளன. மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட இயந்திரங்களின் எண்ணிக்கையில் சுமார் 19 இலட்சம் இயந்திரங்களுக்கு கணக்கு இல்லை.
அப்படியானால் எங்கே போயின இந்த இயந்திரங்கள் எனும் மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இந்த பிரச்சனை குறித்து 24.05.2019 தேதியிட்ட பிரண்ட்லைன் இதழ் விரிவாக செய்திகளை வெளியிட்டுள்ளது. பின்னர் வேறு சில ஊடகங்களும் செய்திகளை வெளி யிட்டுள்ளன. ஆனால் பொது வெளியில் இது குறித்து பெரிய அளவிலான விவாதம் உருவாக்கப்படவில்லை.
மனோரஞ்சன் ராய் மனுவில் கீழ்கண்ட முக்கிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன:
· 1989- 2015 வரை இ.சி.ஐ.எல். நிறுவனத்திட மிருந்து 10,14,644 இயந்திரங்களை பெற்ற தாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் 19,44,593 இயந்திரங்களை கொடுத்த
தாக பி.இ.எல். கூறுகிறது. அப்படியானால் 9,29,949 இயந்திரங்கள் எங்கே போயின?
· இதே கால கட்டத்தில் பி.இ.எல். நிறுவனத்திடமிருந்து 10,05,662 இயந்திரங்களை பெற்ற தாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் 19,69,932 இயந்திரங்களை கொடுத்ததாக இ.சி.ஐ.எல். கூறுகிறது. 9,64,270 இயந்திரங்கள் எங்கே போயின?
· மொத்தத்தில் 18,94,219 வாக்கு இயந்தி ரங்கள் காணவில்லை அல்லது அதற்கான சரியான கணக்குகள் இல்லை.
· ஒட்டு மொத்தமான விவரங்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு ஆண்டுக்கான விவரங்களிலும் முரண்பாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு மோடி பதவியேற்ற 2014-15ம் ஆண்டு பி.இ.எல். 62,183 இயந்திரங்களை கொடுத்ததாக கூறுகிறது. ஆனால் தேர்தல் ஆணையமோ ஒரு இயந்திரம் கூட வாங்கவில்லை என்று கூறுகிறது. இப்படி பல முரண்பாடு கள் வெளிப்படுகின்றன.
2017ம் ஆண்டு ஒரு முக்கிய தகவலை மனோரஞ்சன் ராய் ஆணையத்திடம் கோரு கிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள இயந்திரங்களின் விவரங்களை அவற்றின் குறியீடு எண் உட்பட கேட்கிறார். ஆனால் ஆணையம் இந்த பதிலை தரவில்லை. பழைய அல்லது செயல்படாத இயந்திரங்கள் என்ன செய்யப்படுகின்றன? இந்த விவரங்களையும் ராய் கோருகிறார். 1989-90ம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட இயந்திரங்கள் உற்பத்தியாளர்களாலேயே அழிக்கப்பட்டுவிட்டன என ஆணையம் கூறுகிறது. அதே சமயத்தில் 2000 மற்றும் 2005ம் ஆண்டுகளுக்கு இடையே வாங்கப் பட்ட இயந்திரங்களை அழிப்பது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது எனவும் ஆணையம் கூறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் வெளிப்படுத்துவது என்ன? சரியாக செயல்படாத பல ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் ஆணையம் வசம் உள்ளன. இவற்றை ஏன் ஆணையம் இன்னும் வைத்திருக்கிறது? இவை எங்காவது தேர்தல்களில் பயன்படுத்தப்படுகின்றனவா? எனும் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
தேர்தல் ஆணையம் உற்பத்தி யாளர்களுக்கு கொடுத்த நிதி குறித்தும் பல முரண்பாடுகள் உள்ளன என்பதை ராய் சேகரித்த விவரங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. உதாரணத்திற்கு இ.சி.ஐ.எல். நிறுவனத்திற்கு ரூ116 கோடி கூடுதலாக தரப்பட்டு உள்ளது. அதே போல மாநில தேர்தல் ஆணையங்களுக்கு ஒரு இயந்திரம் கூட தந்தது இல்லை என இ.சி.ஐ.எல். கூறுகிறது. ஆனால் அதே நிறுவனம் மகாராஷ்ட்ரா அரசிடம் இருந்து ரூ.50 கோடி பெற்றதாக கூறுகிறது.
ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா?
இந்த முரண்பாடுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. அதைவிட கவலை அளிக்கும் அம்சம் இந்த பொதுநல வழக்கைதேர்தல் ஆணையம் எவ்வாறு நீதிமன்றத்தில் அணுகுகிறது என்பதுதான்! தேர்தல் முறையில் எவ்வித பாரபட்சமும் இல்லை எனும் நம்பிக்கையைத் தரும் விதத்தில் இந்த வழக்கை தேர்தல் ஆணையம் அணுகவில்லை. மனோரஞ்சன் ராய் எழுப்பியுள்ள எந்த கேள்விக்கும் ஆணித்தரமான பதில் வாதங் கள் அல்லது விவரங்களை ஆணையம் அளிக்கவில்லை. இந்த அணுகுமுறை தேர்தல் ஆணையம் எதையோ மறைக்கிறது எனும் ஐயத்தை உருவாக்குகிறது. மும்பை நீதிமன்றம் வழக்கை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18 தேர்தல் நாளன்றும் பிற மாநிலங்களில் நடந்து முடிந்த 6 கட்டத் தேர்தலிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் செயல்படுவதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. சில இடங்களில், தான் வாக்களித்த சின்னத்திற்கு ஒப்புகை சீட்டு வரவில்லை என வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர். இவை எல்லாம் வாக்கு இயந்திரங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் மேலும் சிதைக்கும்.
தமிழக தேர்தல் ஆணையம் எவ்வளவு பாரபட்சமாக நடந்து கொண்டது என்பதை தமிழக மக்கள் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று!ஆளுங்கட்சியினரின் பண விநியோகத்தை தடுக்க தவறியது, மதுரை வாக்கு விவரங்கள் திருடப்பட்டது, மறு வாக்குப் பதிவில்பாரபட்சம் என கோளாறுகளுக்கு பஞ்ச மில்லாத வகையில்தான் தமிழக தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அணுகுமுறைகளும் வாக்கு இயந்திரங்கள் பற்றிய முரண்பாடுகளும் அப்பட்டமாக ஆளும் கட்சிக்கு சாதகமாக சூழல் உருவாக்கப்படு கிறதோ எனும் கவலையை ஏற்படுத்துகின்றன. முதலாளித்துவ அரசியல்வாதிகள் தாங்கள் வடிவமைத்த ஜனநாயக கோட்பாடுகளை ஒரு எல்லைக்குள்தான் அமலாக்குவார்கள். அதே ஜனநாயக முறை தமக்கு பாதகமாக திரும்பும் ஆபத்து உருவானால் தாம் உரு வாக்கிய கோட்பாடுகளை காலில் போட்டு மிதிக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அத்தகைய ஆபத்தான அரசியல் மேகங்கள் தற்பொழுது உலாவருகின்றனவோ எனும் கவலையை தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தோற்றுவித்துள்ளன. எனினும் மக்களின் தீர்ப்பு இந்த தவறான செயல்முறைகளை முறியடிக்கும் விதத்தில் அமையும் என்பதில் ஐயமில்லை!
===அ.அன்வர் உசேன்===